ஒரு திருமண விருந்தில் ஒருவர் நான்கு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பந்தி பரிமாறியவர் அவரிடம், "என்னப்பா! நான்கு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுகிறாய்; எனக்கு ஞாபக சக்தி இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் என்ன செய்வது? உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்: எனக்கு ஜீரண சக்தி அதிகம்” என்றார்.
பொதுவாக நமக்கு ஞாபக சக்தியைவிட ஜீரண சக்திதான் அதிகமாக இருக்கின்றது. மூளைக்கு வேலை கொடுப்பதைவிட வயிற்றுக்கு அதிகமாக வேலை கொடுக்கின்றோம். நாம் உணவு வகைகளைச் சுவைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால் கடவுளுடைய வார்த்தையைச் சுவைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வாய்வழியாக உட்கொள்ளும் உணவைவிடச் செவிவழியாக உட்கொள்ளும் உணவு மேலானது. உண்மையில், செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்குச் சிறிதளவு உணவு கொடுக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (குறள் 412)
இன்றைய நற்செய்தியில் வருகின்ற அக்காள் மார்த்தா வயிற்று உணவைச் சமைப்பதில் சிரமம் எடுத்துக் கொள்கின்றார். ஆனால் அவரின் தங்கை மரியாவோ செவி உணவுக்கு முன்னுரிமை கொடுத்து, இயேசுவின் வார்த்தையைக் கேட்டுச் சுவைத்து மகிழ்கின்றார். தனக்கு வேலையில் உதவி செய்யும்படி மரியாவைப் பணிக்க வேண்டுமென்று இயேசுவிடம் மார்த்தா கேட்கிறார். இயேசுவோ மரியாவிடம், "மார்த்தா நீ எனக்குக் கொடுக்கும் உணவைச் சுவைப்பதைவிட நான் உனக்குக் கொடுக்கும் உணவைச் சுவைப்பதுதான் மேலானது. உன் தங்கை புத்திசாலி, அவளுக்குத் தெரிந்தது உனக்குத் தெரியவில்லையே" என்று கூறுகிறார்.
இன்றைய உலகில் மனிதர், தொகை தொகையாகச் செலவழித்து வகைவகையாக உணவை உட்கொள்வதில் அதிகம் நாட்டம் கொண் டுள்ளனர். ஆனால், "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (திப 34:8) என்பதையும், "உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை" (திபா 119:103) என்பதையும் அடியோடு மறந்து விட்டனர். "மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (இச &:3) என்பதைக் கருத்திற் கொண்டு, மரியாவைப் பின்பற்றி, கடவுளின் வார்த்தையைச் சுவைத்து உயிர் வாழ்வோம்.
இயேசுவின் காலத்தில் பெண்கள் ஒரு குருவின் சீடராக முடியாது. எந்தவொரு 'ரபியும்' (போதகர்) ஒரு பெண்ணுக்கு மறைநூல் சுற்றுக் கொடுக்கமாட்டார். ஏனெனில், பெண்கள் மறைநூலைப் பயில அருகதையற்றவர்கள். ஆனால் இயேசு இம்மரபை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டார். மரியா இயேசுவின் காலடியில் அமர்த்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இங்கு இயேசு குருவாகவும் மரியா சீடத்தியாகவும் திகழ்கின்றனர். இயேசுவுக்குப் பெண் சீடர்கள் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார் நற்செய்தியாளர் லூக்கா (லூக் 8:1-3).
பெண்கள் தங்களுக்குத் திருச்சபை திருப்பட்டங்களை வழங்க மறுக்கின்றது என்று ஆதங்கப்படத் தேவையில்லை. திருப்பட்டங்கள் பெறுவது முக்கியமில்லை; இயேசுவின் சீடராவதே முக்கியம். பெண்கள் இயேசுவின் சீடர்களாக முடியும். திருப்பட்டங்கள் பெறாமலே பெண்கள் திருச்சபையில் ஏராளமான பணிகளைத் தாராளமாக ஆற்ற முடியும்; ஆற்றவும் வேண்டும்.
ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், "காக்கா சுத்தினா விருந்தாளிகள் வருவார்களா?" என்று கேட்டாள். அதற்கு அப்பா அவனிடம், "ஆமா, காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்கள்; உன் அம்மா கத்தினால் விருந்தாளிகள் போய்விடுவார்கள்" என்றார். விருந்தினரை உபசரிப்பது பெண்களின் தனிப்பண்பு. மார்த்தாவிடம் இருந்த விருந்தோம்பல் என்ற பண்பை நாமும் பின்பற்ற வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் மனிதர் உருவில் வந்த ஆண்டவருக்கு ஆபிரகாமும் சாராவும் விருந்தளிக்கின்றனர். அதற்குக் கைமாறாக, மலடியாக இருந்த சாராவுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கிறது (தொ நூ 18:1-10). இல்லறத்தாரின் தலையாய கடமை விருந்தோம்பல் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.
இருந்துஓம்பி இல்வாழ்வது எவ்வாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு(குறள் 81)
"வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" (உரோ 12:13) என்று அறிவுறுத்துகிறார் திருத்தூதர் பவுல்.
ஒரு கணவர் தன் மனைவியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: “என் மனைவியும் பத்தினி, அவர் வைக்கிற குழம்பும் பத்தி மனைவி பத்தினி, ஏனென்றால் என்னைத் தவிர வேறு எவரும் அவளைத் தொட முடியாது. அவள் வைக்கும் குழம்பும் பத்தினி, ஏனெனில் என்னைத் தவிர வேறு எவரும் அதைச் சாப்பிட முடியாது." மனைவியர் நாக்குக்கு ருசியாகச் சமைத்துப் போடவேண்டும் என்று கணவர்களும் குழந்தைகளும் எதிர்பார்க்கின்றனர். பெண்கள் சமையல் கலையைக் கற்றுக்கொண்டால், குடும்ப வாழ்வு சுவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
முடிவாக, மரியா செபவாழ்வுக்கும், மார்த்தா செயல் வாழ்வுக்கும் சிறந்த எடுதுக்காட்டாகத் திகழ்கின்றனர். வாழ்விலே செபம், செயல் ஆகிய இரண்டுமே முக்கியமானது. செபமில்லாத செயல் வேரில்லாத மரம்: செயவில்லாத செபம் கனிதராத மரம். இயேசுவின் வாழ்வில் இரண்டு மையப்புள்ளிகள்: ஒன்று மலை, மற்றொன்று மக்கள். மலையில் இரவெல்லாம் செபத்தில் மூழ்கித் திளைத்தார்; பகலெல்லாம் மக்களுக்கு நன்மை செய்தார். இயேசுவைப் பின்பற்றிச் செபத்தையும் செயலையும் நமது வாழ்வின் இரு கண்களாகக் கொள்வோம்: நம் வாழ்வு சுவைபெறும்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (திப 34:8).