எனது அருமையானவர்களே!



புதிய ஆண்டு 2014 நம் ஒவ்வொருவருக்கும் கடவுளின் ஆசியாக வந்திருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் கடவுள் வழங்கியிருக்கின்ற அன்பின் ஆசீர். இறைவன் தமது பேரமைதியையும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் உங்களில் பொழிந்து வழி நடத்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஆசியையும் உங்களுக்கு உரித்தாக்குகிறேன். இந்த புதிய ஆண்டு தொடக்கத்தில் கடந்த ஆண்டில் எத்தனை ஆசீர்வாதங்களை கடவுள் வழங்கியிருக்கிறார் என பட்டியலிட்டு பாருங்களேன். பார்த்தீர்கள் என்றால் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகும். உள்ளத்திலிருந்து நன்றியும் பொங்கி எழும் என்பது உண்மை. செய்து பாருங்களேன்! அல்மா டி கொன்சினி என்ற பெண் ஒருவர் கடவுளை அடைவதற்கு தன்னை முழுவதும் தந்தை பியோவின் கரங்களில் விட்டுவிட்டார.; இதோ அவரின் சாட்சியம்: “தந்தை பியோ ஒரு பெண்ணுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்தார். நான் ஆலயத்தில் அவர் இருக்கும் இடத்திலிருந்து மூன்று அல்லது நான்கு மீட்டர் தூரத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அந்த நாளில் கண்டிப்பாக அவரைப் பார்த்துப்பேச வாய்ப்பு இல்லை. எனவே நான் எனக்குள்ளாகவே “தந்தையே, உங்களது ஆசீரை அனுப்புங்கள். உண்மையாகவே எனக்கு அது தேவை” என்று கூறினேன். என்ன ஆச்சரியம்! நான் பேசி முடிக்கும் பொழுது ஒப்புரவு இருக்கைக்குள் மறைவாக இருந்த தந்தை நகர்ந்து வெளியே என்னை நேரடியாக உற்றுப்பார்த்து, சிலுவை அடையாளம் வரைந்தார். பிறகு திரும்பவும் தலையை வணங்கி ஒப்புரவு அருட்சாதனப் பணியைத் தொடர்ந்தார்”. இது நடந்தது இத்தாலியில். (Testimony of Alma De Concini. Terzolas, Italy. July 23,1995) கடவுளின் ஆசி பெற்ற தந்தை பியோ தன்னிடம் வருபவர்க்கெல்லாம் ஆசீரை அள்ளிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கடவுள் கடல்வாழ் உயிரினங்களுக்கும் வானத்;துப் பறவைகளுக்கும் ஆசி வழங்கி பலுகிப் பெருகச் செய்திருக்கிறார்(தொ.நூ 1:22). ஆணையும் பெண்ணையும் படைத்த கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி அவர்கள் பலுகிப் பெருகவும், அனைத்தையும் தங்கள் ஆற்றலுக்கு உட்படுத்தவும், ஆளவும் செய்திருக்கிறார்(தொ.நூ 1:28). ஓய்வு நாளுக்கு ஆசி வழங்கி அதைப் புனிதப்படுத்தியிருக்கிறார்; (தொ.நூ 2:3). நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கி பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்பச் செய்திருக்கிறார் (தொ.நூ 9:1). நம் விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமுக்கு ஆசி வழங்கி பேரினமாக்கி சிறப்புச் செய்து அவரை ஆசியாக விளங்கச் செய்திருக்கிறார். அவர் வழியாய் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெற செய்திருக்கிறார். (தொ.நூ 12:2,3). அவரது மனைவி சாராவுக்கு ஈசாக்கு என்ற மகனை வழங்கி அவள் வழியாக நாடுகள் தோன்றி, அரசர்கள் உதிக்கச் செய்திருக்கிறார் (தொ.நூ 17:16). ஆபிரகாமின் வேண்டுதலின் பொருட்டு இஸ்மயேலுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெரிய அளவில் பலுகச் செய்து பன்னிரண்டு இளவரசர்களுக்குத் தந்தையாக்கி ஒரு பெரிய நாடே (அரேபியா) தோன்றச் செய்திருக்கிறார் (தொ.நூ 17:20). ஆபிரகாமிடமிருந்து வலிமைமிக்க மாபெரும் இனத்தைத் தோன்றச் செய்து, அவன் மூலம் மண்ணுலகில் எல்லா இனத்தாரும் ஆசி பெற செய்திருக்கிறார் (தொ.நூ 18:18). ஆபிரகாமின் மரபில் உதித்த மாமன்னன் இயேசு கிறிஸ்துவால் அகிலம் முழுவதும் ஆசியை, மீட்பைப் பெற்றுக்கொண்டது (மத் 1:17). இப்படி கடவுளின் ஆசி பலுகிப் பெருகி இவ்வுலகை நிரப்புகின்ற ஆசியாகவே இருக்கி;றது. அதுவும் குறையற்ற ஆசியாக, முழுமையான ஆசியாக, நிறைந்த ஆசியாக கடவுளின் ஆசி இம்மானிடத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் பிறந்திருப்பதே கடவுள் தந்த ஆசி. நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஆசியாகவே இருக்கின்றோம். ஆசி பெற்ற மக்களாகவே வாழ வேண்டும் இல்லையென்றால் தீர்ப்பு கடுமையாக இருக்கும் (திரு.பா 37:22). ஆபிரகாம் எல்லோருக்கும் ஆசியாக வாழ்ந்தது போல் நாமும் பிறருக்கு ஆசியாக இருப்பதே கிறிஸ்துவை நம்புகிறவர்களுக்கு அழகு. தீமை புரிவோருக்கும் ஆசி வழங்க வேண்டும் என்பதே கிறிஸ்துவின் போதனை (லூக் 6:28, உரோ 12:14, 1கொரி 4:12, 1பேது 3:9) எனவே அன்புக்குரியவர்களே இந்த புதிய ஆண்டு உங்களுக்குக் கடவுளின் ஆசியாக வந்திருக்கின்றது. இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குத் தெரிந்தவர்கள், நீங்கள் சந்திக்கிறவர்கள், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், தொழிலையும், படிப்பையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து நல்ல உடல் நலம், நீடிய ஆயுளோடு வாழச் செய்வாராக. தினமும் ஜெபமாலை ஜெபியுங்கள். இறைவனின் தாய், அன்னை மரியாவிடம் இந்த ஆண்டை அர்ப்பணித்து ஆசியின் மக்களாக மகிழ்ச்சியோடு வாழுங்கள். 

புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆசீர்! ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS