Pio Kural Magazine September - October 2014


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆன்மீக வழிகாட்டியின் கடிதம்

எனது அருமையானவர்களே
புதுமைகள் கடவுளின் வெளிப்பாடு. புதுமைகள் நடக்க  வேண்டுமென எதிர்பார்க்கும் மக்கள் ஏராளம். கடவுளை நம்பாதவர்கள் கூட புதுமைகள்  நடப்பதைப்  பார்த்தால்  நம்பிவிடுவர். புதுமைகள்  சாதாரணமாக மனித ஆற்றலுக்கோ, இயற்கையின்  ஆற்றலுக்கோ உட்பட்டதல்ல. மாறாக இயற்கையின்  விதிக்கும், அறிவியல்  ஆராய்ச்சியின் விதிக்கும் அப்பாற்பட்டது. மனித ஞானத்தினால், அறிவினால், புத்தியினால், பகுத்தாய்வு செய்து காரணங்களைக் காண முடியாது. மனித சிந்தனைக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டது. ஆனால்  ஒன்று,  கடவுள் விரும்பினால் தான் நடக்கும்.  அது  கடவுளின் விருப்பம் அல்லது திருவுளம் ஆகும். கடவுள் ஆழமான  தனது   அன்பின்   உந்துதலால்  நிகழ்த்துகின்ற    காரியம்  அது. அதே  நேரத்தில் மனிதன்  கடவுள் மீது  கொண்டிருக்கும்  அசைக்க  முடியாத நம்பிக்கை  மிகவும்  அவசியம்.  ஆகவே புதுமை என்பது இயற்கையை கடந்த ஒரு நிகழ்வு அல்லது தெய்வீகப் பராமரிப்பு ஆகும்.
ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுள் இவ்வுலகை படைத்தார்..  ‘‘தொடக்கத்தில் கடவுள்  விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபோது  மண்ணுலகு   வெறுமை யாக  இருந்தது’’.  (தொ.நூ 1: 1-2) ஒன்றுமில்லாத நிலையிலிருந்து    மனிதரையும்,   மனிதருக்கும்   அனைத்து உயிர்களுக்கும் தேவையான  அனைத்தையும்  படைத்து அது  நல்லது  எனவும்  கண்டார். இது  எவ்வளவு அற்புதமும் ஆச்சரியமுமான புதுமை. இஸ்ராயேல்  மக்களை பாலை நிலத்தில் நடத்தி வந்தபோது எத்தனை எத்தனை புதுமைகள்!  நம்மை   மிகப்   பெரிய  ஆச்சரியத்தில்   மூழ்கச்  செய்த  புதுமை  ‘இயேசுவின் உயிர்ப்பு’ (மத்  28: 6-9).  மக்களின் பாவங்களுக்காக  இயேசு  இறந்து  உயிர்க்க வேண்டும்  என்பது கடவுளின்  திருவுளம். இயேசுவின்  உயிர்ப்பை மையமாகக் கொண்டுதான்  கிறிஸ்தவ  விசுவாசமே இருக்கிறது.  இயேசு  உயிர்க்கவில்லை  என்றால் கிறிஸ்தவமே  இல்லை.  இயேசு  தனது  சீடர்களிடம் ‘‘உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை  இருந்தால்  நீங்கள் இம்மலையைப் பார்த்து  இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது   ஒன்றும்   இராது  என  நான்    உங்களுக்குச் சொல்லுகிறேன்’’ என்றார் (மத் 17 :20). தம் பன்னிரு சீடர்களுக்கு இயேசு தீய ஆவிகளை ஓட்டவும் நோய்   நொடிகளை  குணமாக்கவும்   அதிகாரத்தை   வழங்கினார்   (மத்   10 :1). எனவே புதுமை என்பது கடவுளின்  வெளிப்பாடும்  அவரது அதிகாரத்திற்கும் திருவுளத்திற்கும் உட்பட்டதாகும்.

தந்தை   பியோவின்  வாழ்க்கையே  புதுமையானதுதான்.  அவரது வாழ்க்கை   முழுவதும்  புதுமைகள்.  அந்த  புதுமைகள்  அனைத்தும்  இறை வெளிப்பாட்டின்  நிகழ்வுகளாகவே  இருந்தது.   இந்தக்  காரணத்திற்காகவே, புனித    பியோ    புதுமைகளின்   ஒரே     ஊற்றாகத்     திகழும்     கடவுளுக்கு நன்றி    செலுத்தும்படியாக   மக்களைக்    கேட்டுக்கொள்வார்.    கடவுளின் வெளிப்பாட்டை தெளிவாகக் கண்டு நம்பிக்கையோடு வாழ்ந்த   புனித  பியோ  கடவுளின்   திருவுளத்திற்கு முற்றிலும் அடிபணிந்து வாழ்ந்தார்.

1908ம்      ஆண்டு      நிகழ்ந்த      ஒரு      புதுமை தந்தை பியோ வழியாக    நடந்த    முதல் புதுமை என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில்  தந்தை பியோ மான்ட்டேஃபுஸ்கோவில் உள்ள மடத்தில் வாழ்ந்தார். ஒருநாள் அருகில்  இருந்த காட்டிற்கு சென்று செஸ்ட்நட்    எனப்படும்    கொட்டைகளை   சேகரித்து ஒரு பையில்  நிரப்பி பியட்ரில்சினாவில் இருந்த  தன் அத்தை  டாரியாவிற்கு அனுப்பி  வைத்தார்.    டாரியா   பியோவை  அதிகம்   அன்பு    செய்தார்கள். அதைப்  பெற்றுக்கொண்ட டாரியா கொட்டைகளை சாப்பிட்டபின் பியோ நினைவாக அந்த பையை  பத்திரமாக பாதுகாத்தார்.
சில  நாட்களுக்குப்  பின்  டாரியா  அலமாரியில் ஏதோ   தேடிக் கொண்டிருந்தார். அந்த இடத்தில்தான் அவரது கணவர் துப்பாக்கி சுடும் மருந்து  பொடியை  வைத்திருந்தார்.   அது    மாலை   நேரமாக   இருந்ததால் டாரியா  மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு   தேட,   அந்த  மருந்து  தீப்பிடித்து அவரது    முகத்தில்    பற்றி     எரிந்தது.     சற்று     நேரத்திற்குப்பின்    அத்தை டாரியா பியோ நினைவாக வைத்திருந்த பையை  எடுத்து,  தனது முகத்தில் ஒத்திக்கொண்டார். ஆச்சரியம்! உடனே  அவரது முகம் குணம் பெற்றது. முகத்தில்  வலியோ, காயமோ, தழும்போ  எதுவுமில்லாமல்  மறைந்து   போ- னது. இது  தந்தை பியோ வழியாக  நடந்த  முதல் புதுமையாக கருதப்படுகிறது. கடவுளின்  பராமரிப்பு, நம்பிக்கை கொண்டவர்களுக்கு உண்டு என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது. இது உண்மை என்பதை  இந்த புதுமை நமக்கு உணர்த்துகிறது.

புனித பியோவின் ஆன்மீக  மகள்  ஒரு முறை  அவர்     எழுதிய கடிதத்தை  சாலையோரமாக நின்று  வாசித்துக்  கொண்டிருந்தாள். திடீரென காற்றடிக்கவே அந்தக் கடிதம்  கை தவறி காற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டது. வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்ட கடிதம்  திடீரென ஒரு கல்லில் சிக்கி அங்கேயே  இருந்தது. அந்தப்  பெண்  வேகமாக  ஓடி  கடிதத்தை பத்திரமாக எடுத்துக்கொண்டாள். அடுத்த நாள் அந்தப் பெண்  தந்தை பியோ வை சந்தித்தபோது, ‘‘காற்றடிக்கும்போது நீ அடுத்தமுறை கவனமாக இருக்க வேண்டும்.  நான்  காலால்  அதை  மிதிக்கவில்லையென்றால்  அந்தக்  கடிதம் பறந்து  பள்ளத்தாக்கிற்கு  ஓடியிருக்கும்’’என்று சொன்னார்.

‘‘ஒன்றா இரண்டா புதுமைகள் செய்தார் தந்தை பியோ
இந்த உலகம் வியக்க அற்புதம் செய்தார் தந்தை பியோ’’
என்ற  கவிஞர் பொன்னடியானின் பாடல் வரிக்கேற்ப  தந்தை பியோ ஏராள- மான  புதுமைகள் செய்திருக்கிறார்.  அதாவது   கடவுள் அவர்  வழியாக   மா- பெரும் நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார். இயேசு  நிகழ்த்திய புதுமைகளில் எல்லாம் ஒரு செய்தியைச்  சொன்னார். ஒவ்வொரு  புதுமையும் கடவுளின் இரக்கத்தை, மன்னிப்பை, கருணையை, அன்பை  வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.    ஆகவே புதுமைகள் நிகழ்த்தவேண்டும்  என்பதற்காக  அல்ல அந்த  நிகழ்வின்  வழியாக   இறையாட்சியை அறிவிக்க   வேண்டும்  என்பதே அதன்  நோக்கம்.   இயேசுவின்   சீடராக  இருந்து   81  ஆண்டுகளாக  வாழ்ந்த தந்தை பியோ இயேசு  விடுத்த இறையாட்சி பணியை  தனது புனிதமான வாழ்க்கையாலும், வார்த்தையாலும் மட்டுமல்ல புதுமைகள் வழியாகவும் அறிவித்தார். 

புதுமைகள் புரியும் தந்தை பியோவோடு இணைந்து கடவுளுக்கு நன்றி செலுத்த  நாம்  ஒவ்வொருவருமே அழைக்கப்படுகிறோம்.  கடவுள் நிகழ்த்தும் புதுமைகளில் கடவுளின்  வெளிப்பாட்டை கண்டு கொள்வோம். கடவுள்மீது கொண்டிருக்கும் விசுவாசிகளாக வாழ தந்தை பியோவைப் போல் நற்கருணை ஆண்டவரின்  பக்தியிலும்,  அன்னை   மரியாவின் பக்தியிலும் ஆர்வமுடன் ஈடுபடுவோம்.

இறையாசீர் உங்களோடு இருப்பதாக !

- அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஜெயம் தரும் ஜெபமாலை (அன்னை)


‘ஜெபமாலை மாதமாகிய அக்டோபர் மாதத்தில் ஜெபமாலை செய்து அருள் வாழ்வில் நம்மை இணைத்துக் கொள்வோம்.’ஆண்டவரின் மீட்புத் திட்டத்தில் முதன்மையானவராகிய அன்னை   மரியாளை ஆண்டவரால் தேர்ந்தெடுத்து கபிரியேல் என்னும் வானதூதர்   வழியாக இறைவனின் வார்த்தையை இதயத்தில் சுமக்கிறார் அன்னை மரியாள். தூய்மை நிறைந்த   இதய பேழையை இறைவார்த்தையால் நிரப்பினாள் அன்னை மரியாள். இத்தகைய இறை அனுபவம் நிறைந்தவள் தான் அன்னை மரியாள். ஜெபமாலை என்பது ‘புதிய ஏற்பாட்டின் சுருக்கம்’ என்றே கூறலாம். இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, இறப்பு, உயிர்ப்பு என புதிய ஏற்பாட்டில் உள்ள அனைத்து செய்திகளையும் இரத்தின சுருக்கமாய் தியானிக்க இந்த ஜெபமாலை உள்ளது.

1. மகிழ்ச்சிநிறை பேருண்மையை தொடங்கும்போது அன்னை மரியாளைப் பற்றி தியானிக்கிறோம். (கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தைச் சொன்னது) இந்த மறையுண்மையில் இறைமகன் இயேசுவின் பிறப்பு பற்றி தியானிக்கிறோம்.

2. ஒளிநிறை பேருண்மையில் இறைமகன் இயேசுவின் பணி வாழ்வினைப்பற்றி சிந்திக்கிறோம். இந்த மறையுண்மையில் (ஏழை) கா- ணாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்ற அன்னை மரியாள் துணைநின்று பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். எனவே நமக்காய் பரிந்து பேசுபவர் அன்னை மரியாள் என்பதை நாம் உணர்கிறோம்.

3. துயர்நிறை பேருண்மையில் இயேசுவின் பாடுகள், இறப்பு பற்றி தியானிக்கிறோம். இந்த பேருண்மையிலும் கூட அன்னை மரியாள் சிலு- வையின் அடியில் நிற்பதையும் மடியில் உயிரற்ற உடல் சுமப்பதையும் தியானிக்கிறோம்.

4. மகிமைநிறை பேருண்மையில் இயேசுவின் உயிர்ப்பு பற்றி சிந்திக்கிறோம். இதில் இறுதியாக அன்னை மரியாள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்படுவதை தியானிக்கிறோம். இதன்மூலம் இயேசுவின் மண்ணக வாழ்வை பொறுத்தவரை முதலும், முடிவுமாக இருக்கின்றவர் அன்னை மரியாள். ஜெபமாலை என்பது ‘ஜெயம் தரும் ஒரு கருவி’. ‘பாவிகளை பாவச் சேற்றிலிருந்து தூக்கி எடுக்க உதவும் பாசக்கயிறு’, கலங்கி தவிப்பவர்க்கு களங்கரை விளக்கமாய் திகழ்வது இந்த ஜெபமாலை என்பதை நாம் உணர்வோம்.

‘‘ஜெபம் செய், தவம் செய் என்றவள் அன்னை / ஜெபமாலை செய்வோர்க்கு ஜெயம் தருபவள் அன்னை / திக்கற்றோர்க்கு தஞ்சமாக இருப்பவள் அன்னை / தயங்கிடும் உள்ளம் கொண்டோர்க்கு தாயானவள் அன்னை / ஜெபமாலை சொல்லிடுவோம் நாளும் அருள் மாலையை, கன்னியாம் ஜெபமாலை அன்னைக்கு நாம் சூட்டிடுவோம். கலக்கம் நம்மில் போக்கிட கரம் விரித்து நிற்பவள் அன்னை / மாசுகள் நம்மில் மறைந்திட நேசமாய் நம்மை காப்பவள் அன்னை / தடுமாறும் வாழ்க்கை கரைசேர அடைக்கலமாய் இருப்பவள் அன்னை / ஜெபம் செய்வோம் ஜெயம் பெறுவோம், ஜெபமாலை அன்னையை நாம் போற்றிடுவோம்.’’

வாழ்க! வாழ்க! வாழியவே! ஜெபமாலை அன்னையே!

Sr.S. கரோலின் மேரி, FIHM, பெரியவர்சீலி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஈராக் வாழ் கிறிஸ்தவர்களுக்காக சிறப்பு ஜெபநாள்


அன்பான ஆன்மீக குழந்தைகளே !

ஈராக்கில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையை கையாண்டு கிறிஸ்தவர்களை முற்றிலும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் பயங்கரமான கொடுமைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை மாற ஈராக்கில் அமைதி திரும்ப குறிப்பாக கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு வேண்டி ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒரு நாளில் உபவாசமிருந்து நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து திருப்பலி ஒப்புக்கொடுக்கவும், அர்ப்பணிப்போடு ஜெபமாலை ஒப்புக்கொடுத்து அன்னை மரியாயிடம் மன்றாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

- ஆன்மீக வழிகாட்டி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குடும்ப ஜெபமாலை

ஒரு முறை ஒரு குருவானவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்   ஒரு நிகழ்வைச் சொன்னார். அவர்  தொடர்  வண்டியில் பயணம் செய்தபோதெல்லாம் சில இஸ்லாமியர்கள் தங்களுடைய தொழுகை நேரத்தில் தொழுவதைப் பார்த்திருக்கிறார். சில இந்துக்கள் தங்களது மத புத்தகத்தை    படித்து     பிரார்த்தனை   செய்வதை யும்   பார்த்திருக்கிறார்.  அதே   போல்  ஒரு  முறை   அவர்   வாஸ்கோடகாமா விரைவு ரயிலில் வேளாங்கண்ணி செல்ல நேர்ந்தபோது கோவாவில் இருந்து   ஒரு  குடும்பமும்  பயணம்  செய்திருக்கிறது.  அவர்கள்  ஒரு பெரிய குடும்பம்.    அனைவரும்    சேர்ந்து   அவர்களது   தாய்    மொழியில்   குடும்ப ஜெபமாலை செய்துகொண்டே சென்றிருக்கின்றனர்.  அதைப்  பார்த்த அந்த குருவானவருக்கு மிகவும்  மகிழ்ச்சியாக இருந்ததாம்.  அதைப்போல  எல்லாக் கிறிஸ்தவக் குடும்பமும் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறினார். 

இன்றைய   பரபரப்பான உலகில்  ஒரே   குடும்பமாக சேர்ந்து பேச,
உணவருந்த  நேரம்  கிடையாது. ஏன்  கணவன்  மனைவி  குழந்தைகள்  மூவ
ரையும்   ஒரே   நேரத்தில்   வீட்டில்  பார்ப்பதே அரிதாகி  விட்டது.  ஏதாவது
ஒன்றை தேடிக்கொண்டே நமது வாழ்க்கைப் பயணம் செல்கிறது. கடவுளைத்
தேடுவது   என்பது  கடினமாகிவிட்டது.  குடும்பமாக அமர்ந்து ஜெபிப்பது
என்பது  எத்தனை   இனிமையானது.   எத்தனை   பலம்  வாய்ந்தது    என்று
சுவைத்துப்    பார்த்தால்  மட்டும்  தான்   புரியும்.    ஒரு  காலத்தில்   வீடுகளில்
மாலையில் அனைவரும்  கூடி ஜெபித்து அதன் பின்னர்  இரவு  உணவு உண்ட
காலமுண்டு..  இன்று அனைவரும்  கூடி  தொலைக்காட்சிக்கு முன்  அமர்ந்து
நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பொழுதைப் போக்கி  வெறுமையாகிப்
போகிற  காலமாகி  விட்டது.   குடும்ப   ஜெபமில்லாத  வீடு   கூரையில்லாத
வீடு   என்று   சொல்வார்கள்.  கூரையில்லாத   வீட்டில்  விஷ   ஜந்துக்களும்
திருடர்களும்ஆபத்துக்களும் அழைக்காமலே உள்ளே வரும். அதே போல்தான்
குடும்ப ஜெபமில்லாத வீட்டில் பிரச்சனைகளும் துன்பங்களும் துயரங்களும்
எளிதில்  தாக்கும்.  அதே  நேரத்தில்  ஜெபிக்கிற  இல்லத்திலும்  உள்ளத்திலும்
துன்பங்களையும் துயரங்களையும் தாங்கக்கூடிய சக்தியை இறைவன் தருவார்.குடும்பங்களில்   குடும்ப   ஜெபம்   நாள்தோறும்   ஜெபிக்கப்பட   வேண்டும். பிள்ளைகளைச் ஜெபிக்கச் சொல்லி பெற்றோர்கள் தூண்ட வேண்டும். 

ஜெபமாலை எப்போதும் ஒரு குடும்பச் ஜெபமாகவும் ஒரு குடும்பத்திற்கான  ஜெபமாகவும் இருந்திருக்கிறது  என்று புனித இரண்டாம் ஜான்   பால் கூறுகிறார்.  ஜெபமாலையில் நாம்   ஜெபிக்கக்கூடிய   ஒவ்வொரு வார்த்தைகளும் திருவிவிலியத்தில் இருந்து எடுக்கப்பட்டது. (லூக் 1 : 28) நாம் ஜெபமாலை ஜெபிக்கின்ற போது கடவுளது வார்த்தையைத்தான் தியானித்து ஜெபிக்கிறோம்.  அன்னையை   ஒவ்வொரு   முறையும்  அருள்   நிறை  மரியே வாழ்க  !  என்று வாழ்த்தும்போது இறைவனுக்குப் பெருமை  சேர்க்கிறோம். ஜெபமாலை என்பது ‘‘மானிடர்களை மீட்க  வானவர்  விடுகின்ற வடமே’’ -   வீரமாமுனிவரின் கூற்றுப்படி  நம்மை   பாவ   வழியில்  இருந்து  மீட்க வந்த வல்லமை    மிக்க   ஜெபமாலையை  ஜெப்போம்.   கூடி   ஜெபித்தால் கோடி நன்மை  என்பதற்கேற்ப குடும்பமாக கூடி  ஜெபிப்போம். 1  தெச 5 :  17, 19 ல் கூறியுள்ளபடி நல்லதைப்  பற்றிக்  கொள்ளுவோம். எல்லா வகையான  தீமைகளையும் விட்டு விலகுவோம். ஜெபமாலை அருள் வரங்களின் கிரீடம் என்ற தந்தை  பியோவின் வார்த்தைக்கேற்ப ஜெபமாலை  ஜெபிப்போம்.   ஏராளமான   அருள்   வரங்களை   இறைவனிடமிருந்து  பெறுவோம். அக்டோபர் மாதம்  ஜெபமாலை அன்னைக்குரிய   மாதம்.    நம்   இயக்கத்தில்   உள்ள அனைவருக்காகவும் ஜெபமாலை ஜெபிப்போம். ஜெயம் பெறுவோம்.

-வாசுகி செல்வராஜ், தூத்துக்குடி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மாதாவின் அருள் மழையை நாடுவோமே!




'அம்மா மரி’ என்றாலே அன்பு வெள்ளம்
அகிலமெல்லாம் நிறைந்துவிடும்: இன்பம் துள்ளும்.
‘அம்மா’வெனத் தானழைத்த அன்புத் தாயை
அனைவர்க்கும் தாயாக  இறைவன் தந்தார்
இம்மாநிலம் உய்வதற்கு ஏணி யாக
இலங்குகின்ற  அருள்ஞானக் கேணி மாதா
நம்பிக்கை  ஒளிவிளக்கை உளத்தில் ஏற்றி
நலிவிருளை  அகற்றிடநாம் தயங்க லாமோ?

அருள்ஞான சிங்காரி, அமல ஏரி,
அண்டினோர்க்கு உபகாரி, கற்பலங்  காரி,
இருள்பேயின் சங்காரி, இசையின்  மாரி,
இயேசுவின் தாய்மரி இனிமை வாரி,
மருள்நீக்கும் மகிமையுடன் மதியில் ஏறி
மாபரனின் அருள்வேண்டி வழங்கும்  பாரி
ஒருதாயாய் உலகுக்கு விளங்கும் மேரி
திருவடியைப் பணிந்தோர்க்கு நன்மை  கோடி!

திங்கள் எனும் வாகனத்தில்  ஏறிச்  செல்லும்
செம்பவள நற்செவ்வாய் கொண்ட மேரி
எங்குமுள அற்புதன் நம் ஏசுவை வேண்ட
பொங்கருவி யாழன்ன குரலைப் பாய்ச்சி,
மங்காத்தன்  வெள்ளிமுடி அசைய நோக்கி
தொங்கிவிழும் பனிச்சனியாம் துயரம் போக்கி
பங்கமிலா வெண்ஞாயிறு ஒளியைப்போல
பார்காக்கும் எழுகிழமை கொண்டாள் வாழி !

மாதாவைப் புகழாத வாயும் வாயா?
மாதாவைப் பார்க்கயெண்ணாக் கண்ணும் கண்ணா?
மாதாவை நினைக்காத மனமும் ஏனோ?
மாதாவைத் துதிக்காத தினமும் வீணே !
மாதாவின் பக்திதிரு மறையின் சக்தி
மாதாவின் பக்திக்கும் மனித முக்தி !
மாதாவின் திருப்புகழைப் பாடுவோமே,
மாதாவின் அருள்மழையை நாடுவோமே !

மு. அகி.காந்திராசன், தூத்துக்குடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்னையின் ஜெபமாலை ஒரு வெற்றிமாலை


புனித  சாமிநாதர் ஜெபமாலையைப் பெற்றுக் கொண்ட நிகழ்வு இதோ... ஆல்ஜென்ஸியர் பாவங்களில்  மூழ்கி   இருந்த   காலத்தில்,   அவர்கள் மனம்    திரும்பி    வாழ,    ஜெபிப்பதற்காக   தூலுஸ் என்ற பட்டணத்தருகே இருந்த ஒரு காட்டுக்குச் சென்று மூன்று  நாள்கள்  இரவும், பகலும் இடைவிடாது  மன்றாடினார். அம்மூன்று நாட்களும் கடின  தவமுயற்சிகளைசெய்வதும்,அழுதுமன்றாடுவதுமாக இருந்தார். சாட்டையால் அவர் தம்மையே எவ்வளவு அடித்துக்   கொண்டாரென்றால்   அவரது   உடல் புண்ணாகி  இறுதியில் மயக்கமுற்று விழுந்தார். அப்போது  தேவ   அன்னை   மூன்று   சம்மனசுக்களுடன்  தோன்றி, ‘‘சாமி  நாதா,’’  எந்த  ஆயுதத்தை கொண்டு    உலகத்தை   சீர்திருத்த  பரிசுத்த தமதிருத்துவம்   விரும்புகிறது  என்பதை   அறிவாயா?’   என்ற   கேட்டார்கள். அதற்கு   அவர்,    ‘ஓ   என்    அன்னையே    என்னைவிட   உங்களுக்கே    மிக நன்றாகத் தெரியும்‘  என்றார்.  இதற்குப்  பதிலாக  தேவஅன்னை,  ‘இந்த வகையானப் போராட்டத்தில்  கபிரியேல்   தூதன்  கூறிய  மங்கள  வார்த்தைதான் வெற்றிதரும்  கருவியாக உள்ளது.  புதிய  ஏற்பாட்டின் அடித்தளக்கல் அதுவே. இந்தக்  கடினப்பட்ட ஆன்மாக்களை   அணுகி,  அவர்களை கடவுள்  பக்கம் திருப்ப  வேண்டுமானால், என்னுடைய ஜெபமாலையைப்  பிரசங்கி’  என்றுக் கூறினார்கள். புனித சாமிநாதர் புத்துயிர் பெற்றவராய் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தார். மக்கள் திரண்டனர். பிரசங்கிக்க ஆரம்பித்ததும் பயங்கர   புயற்காற்று  எழுப்பியது.  பூமி   குலுங்கியது.   கதிரவன்   மங்கியது. இடி முழக்கமும், மின்னலும் காணப்பட்டன. அங்கு வைக்கப்பட்ட மாதாவின்    படம்  தன்   கரத்தை   வான்நோக்கி    மும்முறை    உயர்த்தியது.

புனிதரின்  வேண்டுதலால்,  புயல்   அமர்ந்தது.  பிரசங்கத்தைத்  தொடர்ந்தார்.
ஜெபமாலையின்  முக்கியத்துவத்தையும்,   பலனையும்  தூலுஸ்   நகரவாசிகள் ஏற்றுக்    கொண்டார்கள்.  பழைய  துர்ப்பழக்கங்களை விட்டுவிட்டார்கள். இவ்வாறு ஜெபமாலைப் பக்தி ஆரம்பமாகிறது.
ஜெபமாலையை ஜெபிப்பவர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுகிறார்கள்.  தேவ   அன்னையின்   பிரசன்னத்தை   உணர்கிறார்கள்.    தீய வழிகளை   விட்டு   நல்வழியில்   வாழ்கின்றனர். பேய்கள்  மனிதரை விட்டு
ஓடுகின்றன. பக்தியுடன் ஜெபமாலை   செபிக்கும்  ஒவ்வொரு  முறையும் 153
வெண்மலர்களை தேவ அன்னையின் தலையில் சூடுகிறோம்.
புனித  பிரான்ஸிஸின் நாட்குறிப்பில்,  ஒரு  இளஞ்சகோதரர்  பற்றிக்
குறிப்பிடுகிறார்.  இவர்   தினமும்  பகல்  உணவுக்கு முன்  ஒரு  ஜெபமாலை
சொல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள்  சொல்ல முடியவில்லை. பகல் உணவுக்கு மணி  அடித்ததால், தலைவரிடம் உத்தரவு  பெற்று,தன் அறைக்குச்சென்று ஜெபமாலை சொல்ல துவங்கினார். நெடுநேரமாகஅவரைக் காணாததால்,  தலைமைச்  சகோதரர் இன்னொரு சகோதரரை அனுப்பினார்.அவர்  வந்து  பார்க்கையில், அந்த  சகோதரர் ஒரு விண்ணக ஒளியில்  மூழ்கி, தேவ   அன்னையை   நோக்கியவாறு காணப்பட்டார்.   இருசம்மனசுக்களும் காணப்பட்டனர்.  அருள்நிறை   மந்திரத்தை   சொன்ன  ஒவ்வொரு  முறையும் ஒரு அழகிய  ரோஜாமலர் அவர்  வாயிலிருந்து  வெளிவந்தது.  சம்மனசுக்கள் அம் மலர்களை தேவ அன்னைக்கு சூட,  அவர்களும்  புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு முழுஜெபமாலை சொல்லி முடியும்  வரையிலும்
தேவஅன்னை அங்கேயே  இருந்தார்கள். தேவ  அன்னை  புனித  சாமிநாதருக்கு   ஜெபமாலையை  கொடுத்து, அதை  தினமும்   சொல்ல  வேண்டுமென்றும், மற்றவர்களுக்கும்   அவ்வாறே சொல்லும்படி   செய்ய    வேண்டும்    என்று   கட்டளையிட்டார்கள்.    தேவ இரகசியங்கள்   அடங்கியிருக்கும்    நம்   புனிதத்திற்கேதுவான   ஞான  திரவியங்களை  நாம்   ஒருபோதும் முற்றும்  அறிந்து   கொள்ள  முடியாது.   இயேசுக்   கிறிஸ்துவின்   வாழ்வு,    மரணம்   இவைப்பற்றிய  தியானம் அதைச்  செய்கிறவர்களுக்கு  மிக  ஆச்சரியமான  பலன்களை  விளைவிக்கும் ஊற்றாகி   இருக்கிறது.   அவற்றில்    காணப்படும்   நமதாண்டவரின்   பலவித புண்ணியங்களும்  அவருடைய வாழ்வின்  பலநிலைகளும் மிக  அற்புதமான முறையில்  நம்மனதிற்குப் புத்துணர்ச்சி ஊட்டி பராக்குகளைத்   தவிர்ப்பதில்
நமக்கு உதவியாயிருக்கின்றன. கூட்டு   ஜெபமாலை   பெரிய  நன்மைகளைக்   கொடுக்கிறது.   நாம் கூட்டாய்ச் சேர்ந்து செபிக்கும்போது தனிமையில் ஜெபிப்பதைவிட நம்மனம் அதிகவிழிப்புடன்  இருக்கிறது.   கூட்டத்தில்  ஒருவர்   நன்றாக   ஜெபியாமல் இருந்தாலும்    அதிக    நன்றாகச்     செபிக்கும்     இன்னொருவரின் ஜெபம் அக்குறையை  நிறைவாக்குகிறது.  இவ்விதம்   பலமுள்ளவர்கள்,  பலவீனரைத் தாங்கிக்   கொள்கிறார்கள்.   தனியே   ஜெபமாலை  சொல்லும்போது   ஒரு ஜெபமாலையின்  பலன்தான் கிடைக்கிறது.   ஆனால்  30 பேருடன்  சேர்ந்து செபிக்கும் போது முப்பது ஜெபமாலைப் பலன்களைப் பெறுகிறோம். ஜெபமாலை நாம் அன்னைக்கு அணிவிக்கும் வாடாமாலை. அம்மாலையை ஒவ்வொரு  நாளும்  சூட்டும்  போது அன்னையும்  மகிழ்ச்சி அடைகிறாள். நமக்கு வெற்றிகளையும், புகழையும் கொடுக்கிறாள். ஒவ்வொரு செயலிலும், காரியங்களிலும் நம்மை  அரவணைத்துப் பாதுகாத்து  கொண்டு வருவதை    உணர்கிறோம்.     அன்னைக்கு    ஜெபமாலையை அன்புடன், பக்தியுடன் அவள்  கழுத்தில் தினமும் அணிவிப்போம். வெற்றிமாலையான ஜெபமாலை நம் வாழ்வில்  உன்னதமானது  என்று உணர்ந்து  பிறரையும் ஜெபமாலை செபிக்கத் தூண்டுவோம்.
‘ஜெபமாலை ஜெயமாலை’


சகோ. சிறிய புஷ்பம், FIHM இமாக்குலேட் பி.எட் கல்லூரி பாக்கமுடையான்பட்டு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஜெபமாலையின் மேன்மை


‘கூடி ஜெபிக்கும்  குடும்பம்  கூடி வாழும் குடும்பம்’

அன்பார்ந்த பியோக்குரல் வாசகர்களுக்கும்,ஜெபமாலை பக்தி முயற்சியில் வளர்கிறவர்களுக்கும்  வாழ்த்தும் வணக்கமும். ஜெபமாலை‘பக்தி’ என்பது விவிலியத்தில் சொல்லப்படாத  ஒன்று  இதை ஒரு பொருட்டாக கருதத் தேவையில்லை என்று கத்தோலிக்க மறையிலிருந்து பிரிந்த சகோதரர்கள் சொல்கிறார்கள். ஆனால்  கத்தோலிக்கர்களாகிய  நாம்  ஜெபமாலை பக்தியில்  ‘விவிலியம்’ அடங்கியுள்ளது, சிறப்பாக விவிலியம்     தரும் மீட்பின் வரலாறு நிறைந்துள்ளது என்கிறோம். அன்பார்ந்த பக்தர்களே இந்தக் கருத்தை புரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை படித்து உணர்வோம்.மரியன்னையிடம் மன்றாடுகிறார்கள், அன்னையை அதிகம் புகழ்கிறார்கள் என்று சொல்லும் பிரிந்த  சகோதரர்கள் இப்பொழுது  உங்களுக்காக சகோதரர்....  செபிக்க போகிறார் என்றதும் என்ன செய்கிறார்கள் என்பதை  எண்ணிப்பார்க்க வேண்டும்.  ஏன்  செய்கிறார்கள்?  என்பதை   எண்ணிப்பார்க்க  வேண்டும். ஏன்  அவர்களுடைய செபத்தை  எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் புரிய வேண்டும். அந்த  சகோதரரின்   செய்தி,  இந்த  வல்ல  சகோதரரின்   செபம் நேரம் என்று சொல்வதையும் நாம் எண்ணிப் பார்த்து பதில் தர வேண்டும். மரியன்னையிடம் பக்தி  கொள்வது என்பது இறைத்தந்தையின்  திட்டம். ஏனெனில் அவரே ‘வல்லமையுள்ள உபகாரி’. அன்னை மரியாளிடம் அவளவற்ற பற்றுக் கொண்டு ஜெபமாலை பக்தி முயற்சியால் நலமடைந்து ‘நம்பிக்கை நற்செய்தியை குடும்பங்களுக்கு ஜெபமாலை வழியாக  வழங்கிய அருட்பணி பாட்ரீக் பேயீடன் C.S.C

1909 ஜனவரி  9ல்  அயர்லாந்து நாட்டில்  பிறந்தவர்.  தனது  19ம் வயதில்  தன் மூத்த சகோதரன்  டாம் உடன்,  குடும்ப  சூழ்நிலை  நிமித்தம், படிப்பு, வேலைக்காக அமெரிக்கா சென்றவர். படித்து குருவானவாக ஆக வேண்டும்  என்று நினைத்தவர். 1928ம் ஆண்டு பென்சில்வேனியா  நகரில் புனித தனிசுலாஸ்  பேராலயத்தில் காவலாளியாக வேலை  செய்து  தன் சகோதரியின்  வீட்டில் வசித்து வந்தார்.  அவரின்  பக்தியையும், நேர்மைத் தனத்தையும் அறிந்தவர்  பேராலய முதன்மை  குரு உதவியால் 1932ல் குருமடத்தில்  சேர்ந்தார்.   1938ல்  காசநோயினால் பாதிக்கப்பட்டவர். இரத்தவாந்தி  எடுத்து  நுரையீரல் பாதிக்கப்பட்டார். சகோதரியின்  எளிய விசுவாசத் தூண்டுதலால் தங்கள் குடும்பத்தின் வழக்கப்படி அன்னை மரியாளிடம் பக்தி கொண்டு ஜெபமாலை செபிக்க நாளுக்கு நாள்  நோய் நீங்கி குணம் பெற்றார். இவரது உடல்  நலனைக் கண்டு மருத்துவர்கள் வியந்தனர். நோய்  நீங்கி குருமடத்தில் மீண்டும்  சேர்ந்து 1941ல் ஜூன் 15ல் குருவானார்.

மரியாளின் பரிந்துரையால் ஜெபமாலை செபத்தின்  வல்லமையால் குணமாகி குருவானவர் தன் குடும்பம்  கொண்டிருந்த கூடி செபிக்கும் வழக்கத்தை உலகுக்கு கற்றுத்தந்தார்.  ஊடகம்  வளர்ந்த காலத்தில்  வானொலி (ஊடகம்)  மூலம்  நற்செய்தியை   அறிவித்த  முதல் குரு இவர்தான்.  ‘கூடி செபிக்கும்  குடும்பம்  கூடி வாழும்’ என்ற  உண்மை தத்துவத்தை    உலகுக்கு   தந்தவரும்   இவர்தான்.    தனது 29ம்    வயதில் இறந்துபோக  வேண்டியவர்  அற்புதமாக  குணம்  பெற்றவர்.  83  வயது- வரை  வாழ்ந்து 1992ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இறைவனடி சேர்ந்தார் ஜெபமாலை குரு. இந்த  நல்ல  குருவைப்போல் நம்பிக்கை  நற்செய்தியை நாமும் திருச்சபைக்கு  ஜெபமாலை வழியாக   வழங்குவோம். ஜெபத்தில் இணைவோம்.

அருட்தந்தை ம. தெரசுநாதன்.  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தந்தை பியோவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்


* 20. 9. 1918 அன்று தந்தை பியோ ஐந்து காயங்களை பெற்றார்.

* 22. 9. 1968 அன்று வழக்கமாக காலை 5 மணிக்கு திருப்பலியை  நிறைவேற்றினார்.     இதுவே அவரது இறுதி திருப்பலி.

* 23. 09. 1968 அன்று மதியம் 2.30 மணிக்கு தந்தை பியோ இறைவனிடம் சேர்ந்தார்.   அவர் கூறிய இறுதி வார்தை ‘இயேசு மரி இயேசு மரி’.

* 26. 09. 1968 அன்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஒரு லட்சத்துக்கும் மேலானோர்   அடக்கச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித பியோ ஜெபமாலை இயக்க செபம்

இறையருளால் முழுமையாக நிரப்பப்பெற்ற முழுமையின் தாயே! எம் அன்னை மரியே! நீர் வாழ்க! இவ்வுலகில் வாழுகின்ற எமக்கு, அடைக்கலமும் ஆதரவும் நீரே. உம் மகனாம் எம் மீட்பர் இயேசுவை, அன்பு செய்ய அவர் நினைவாக வாழ, அவர் சொல்படி நடக்க பலம் தாரும் அம்மா. புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின், ஆன்மீகப் பிள்ளைகளாகிய நாங்கள், ஆன்ம உடல் நலத்தோடு உலகை வென்றிட, ஆற்றல் தாரும் அம்மா. மகிழ்ச்சியையும் அமைதியையும், அருள் மழையாக பொழிந்தருளும் தாயே. இம்மண்ணில் நிறை அமைதியும், இறைபிரசன்னமும் நிலைக்கட்டும். பாவிகளாகிய எங்களுக்காக உம் மகன் இயேசுவிடம் மன்றாடும் அம்மா, ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நற்கருணை வாங்கிய பின் புனித தந்தை பியோ சொல்லி வந்த செபம்

என்னோடு தங்கும் ஆண்டவரே, உம்மை நான் மறவாதிருக்க நீர் என்னோடு பிரசன்னமாயிருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக உம்மைக் கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாதிருக்க உமது பலம் எனக்குத் தேவை. என்னோடு தங்கும் ஆண்டவரே, எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லையென்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை. என்னோடு தங்கும் ஆண்டவரே, நீரே என் ஒளி. என்னோடு நீர் இல்லையென்றால் நான் இருளில் வீழ்கிறேன். உமது சித்தம் எதுவெனெ எனக்குக் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே, உமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மை அதிகமாக நேசிக்கவும், எப்போதும் உம் உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன். நான் உமக்குப் பிரமாணிக்கமாக இருக்க நீர் விரும்பினால் என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் எனது எளிய ஆன்மா உமக்கு ஆறுதல் தரும் இல்லமாக, ஒரு அன்புக் கூடாரமாக இருக்க ஆசிக்கிறேன். என்னோடு தங்கும் ஆண்டவரே, பொழுது சாய்கின்ற இந்த நாள் முடிகின்றது. கடந்து போகும் வாழ்விலே மரணமும் தீர்ப்பும் முடிவில்லா வாழ்வும் எதிர்நோக்கி நிற்கின்றன. வழியில் நான் நின்று விடாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கு நீர்தான் தேவை ஆண்டவரே. பொழுது சாய்ந்து, மரணமும் எதிர்நோக்கும் வேளையில் இருள், சோதனைகள், வறட்சி, சிலுவை, துன்பங்கள் அனைத்தையும் கண்டு அஞ்சுகிறேன். இருள் படரும் இவ்வேளையில் ஓ இயேசுவே நீர்தான் எனக்குத் தேவை. இன்று இரவு என்னோடு தங்கும் ஆண்டவரே, பல்வேறு ஆபத்துக்கள் நிறைந்த இவ்வாழ்வில் நீரே எனக்குத் தேவை. அப்பம் பிட்கையில் உம்மை சீடர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். நற்கருணைத் திருவிருந்து இருளை அகற்றும் ஒளியாகவும் என்னைப் பலப்படுத்தும் அமுதமாகவும், என் இருதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும் இருக்கும்படி உம்மை நான் கண்டுகொள்ளச் செய்தருளும். என்னோடு தங்கும் ஆண்டவரே, இறுதி வேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும் உமது அன்பு, அருள் மூலமாக என்னோடு தங்கும். என்னோடு தங்கும் இயேசு ஆண்டவரே, தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங்கொடையை எனக்குத் தாரும். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் தேடுகிறேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு, உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆன்மீக வழிகாட்டியின் கடிதம்

எனது அருமையானவர்களே !

டயானா க்ரேவ் (Diana Grave) ஒரு திரையுலக நடிகை. இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பணி புரிந்து வந்தார். அவர் மூச்சுக்குழல் விரிவு  மற்றும் நுரையீரல் அடைப்பு நோயால் மிகவும்  வேதனைப்பட்டு வந்தார். இவை நாள்பட்ட  வியாதிகள். நாட்கள் செல்லச் செல்ல அவரது வாழ்வு மருந்தும் மருத்துவமனையுமாகவே  மாறிப்போய்விட்டது. அவரது உடல்நிலை மிக மோசமாக சென்ற போது மருத்துவர்கள் இதமான கால நிலைப் பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். குளிர் மிகுந்த லண்டன் அவரது நுரையீரல் பிரச்சனையை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. தனது உடல் நிலைக்காக டயானா ஏதுவான வேறு  இடத்துக்கு மாறவேண்டியிருந்தது.

35 வயதான டயானா தனக்கு ஏதுவான கால சூழ்நிலையை உடைய  உரோமைக்கு செல்லத் தீர்மானித்தார். தனது உறவுக்காரப் பெண் ஜென்னி உரோமையில் வசித்ததும் சாதகமாக இருந்தது. உரோமையும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட உற்பத்திக்குப் பெயர் பெற்ற இடம். இத்தாலிய திரையுலகின் மையமாக உரோமை இருந்தது. நடிப்புத் திறமையும் அனுபவமும் நிறைந்த டயானாவுக்கு பணிபுரியவும் ஏற்ற இடம் என்பது அவருக்கு நம்பிக்கையைக்  கொடுத்தது. உரோமைக்குச் சென்ற பிறகும் வாடிக்கை அவ்வளவு எளிதாக இல்லை. பொருளாதாரப் பற்றாக்குறை அவருக்கு பெரும் கவலை கொடுத்தது. உடல் நோயினால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. அந்த வேளையில் ஜென்னி, சான் ஜியோவான்னி ரொத்தந்தோ சென்று தந்தை பியோவின் ஆசி பெற்று வரலாம் என்ற நம்பிக்கை ஊட்டும் ஆலோசனை தந்தார். டயானாவும் அதற்கு சம்மதித்து சிறிது உடல் பலம் பெற்றபின் ஜென்னியுடன் ஒரு நாள் இரவு,  இரயிலில் பயணித்து ஃபோஜியோ சென்றடைந்து அங்கிருந்து வாடகைக் காரில் சான் ஜியோவான்னி ரொத்தந்தோ சென்றார். 

பலகீனமான டயானாவுக்கு பயணக்களைப்பால் ஏற்பட்ட மயக்கமான நிலை பயத்தை ஏற்படுத்தியது. முயற்சி செய்து ஆலயத்தில் நுழைந்த அவர்களுக்கு அமர்வதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் ஆலயத்தை நிரப்பியிருந்தது. தந்தை பியோ ஒப்புரவு வழங்கும் இடத்தை நோக்கி அந்த வழியே சென்று கொண்டிருக்க பெரிய மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. அவரும் அதே நோய்த் தாக்கத்தினால் பலகீனமாய் மூச்சுவிட சிரமப்படுவது தெரிந்தது. டயானா, தன்னைப் போலவே தந்தை பியோவும் உடல் வியாதியால் துன்புறுவதை உணர்ந்தார். நாள் பட்ட நுரையீரல் ஆஸ்த்துமா பிரச்சனையால் தந்தை பியோ மூச்சுவிட கஷ்டப்பட்டார். டயானாவுக்கு அவரை சந்திக்க முடியாதுபோல் தோன்றியது. அந்த சூழலில் டோமினிக் மெயர் என்ற கப்புச்சின் குருவிடம் பேச முடிந்தது. தன் நிலைமையை அவரிடம் எடுத்துக்கூறி தந்தை பியோவிடம் எப்படியாவது ஆசி பெற வேண்டும் என்று கூறினார். மற்றவர்களும் வாரக்கணக்காக காத்திருப்பதாகவும் முடிந்த அளவு உதவுவதாகவும் தந்தை டோமினிக் கூறினார். 

ஒரு மணி நேரத்திற்குப் பின் தந்தை டோமினிக் அவர்கள், டயானா மற்றும் ஜென்னிக்கு சைகை காட்டி அழைத்தார். நெருக்கடியான அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் திருப்பலிப் பொருட்கள் உள்ள அறைக்குச் சென்றனர். தந்தை பியோவும் அங்கு வந்தார். டயானாவைப் போல் 12 பேர் காத்திருந்தனர். அங்கு தந்தை பியோவுக்கு டோமினிக் ஒரு சிலரை மட்டும் சுட்டிக்காட்டி காதோடு காதாக ஏதோ பேசினார். அவர்களுக்குத் தந்தை பியோ தனிப்பட்ட முறையில் ஆசீர் அளித்தார். டயானா சுட்டிக்காட்டப்பட்ட பொழுது அவளைப் பார்த்து தந்தை பியோ புன்னகை செய்து அவரது தலைக்கு மேல் கை வைத்து ஏதோ பேசினார். ஆனால் டயானாவிற்கு ஒன்றும் புரியவில்லை. திருத்தல சந்திப்பின் இறுதி நாளில் அவர்கள் இருவரும் அருள் அன்னை ஆலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவருக்குப் பின்புறம் இருந்த பெண் வேதனை மிகுந்து கத்திக் கொண்டிருந்தார். உடனே தந்தை பியோ, ‘‘அமைதி’’ என்று அதட்டி, ‘‘இது புனிதமான இடம் யாரும் சத்தம் செய்யக்கூடாது’’ என்று சொன்னார். டயானா சான்ஜியோவான்னி ரொத்தந்தோவில் இருந்து திரும்பிய பிறகு தன்னுள் அமைதிiயையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தார். ‘‘எனது வாழ்வில் இப்பொழுதுதான் முழுமை யான நன்மைத்தனமும் ஆன்மீக பலமும் உள்ள ஒரு மனிதரோடு தொடர்பு கொண்டேன்’’ என்று தந்தை பியோவுடன் பெற்ற அனுபவத்தைச் சொன்னார். உரோமைக்குத் திரும்பிய பின் உலக காரியங்களில் பற்றற்ற உணர்வும், இவ்வுலக வாழ்வை துறப்பதற்கும் ஏன் இறப்பதற்கும் கூட தயாரானார். தந்தை பியோவை முகமுகமாய்ப் பார்த்ததிலிருந்து மன பலமும் ஆன்ம பலமும் பெற்றிருந்தார். மற்றவை எல்லாம் முக்கியம் இல்லாதது என்று உணர்ந்திருந்த  சில நாட்களில் டயானா அமைதியாக இறைவனடி சேர்ந்தார். 

தந்தை பியோவை சந்தித்து ஆசி பெற்றதிலிருந்து டயானாவுக்கு ஒரு நல்ல மனமாற்றம். அது அவரது இறப்புக்கு முன், ஒரு நல்ல ஆன்மீகத் தயாரிப்பாக இருந்தது தெளிவாகிறது. ‘‘ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’’ (மத் 16 : 26) என்ற இறைவார்த்தையின்படி டயானாவுக்குக் கடவுளும் தன் ஆன்மாவும் எவ்வளவு முக்கியம் என்பது விளங்கிற்று. ‘‘கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்’’ (பிலி 3 : 8) என்ற புனித பவுல் கூற்றுப்படி மற்றவற்றையெல்லாம் குப்பையென டயானா கருதியிருக்க வேண்டும். கிறிஸ்துவே தனது ஆதாயம் என சரணடைந்திருக்கிறார். இந்த ஒரு நிலையை அவர் அடையப்போவதை அறிந்தே தந்தை பியோ டயானாவைப் பார்த்தவுடன் புன்னகை செய்திருக்கிறார். தந்தை பியோவுக்கு அதில் மட்டற்ற  மகிழ்ச்சி.

இந்த ஆண்டு தவக்காலத்தை அனுசரித்து  கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்கு பெற இருக்கும் நமக்கு டயானாவின் மனமாற்றம் நல்லதொரு அழைப்பாக இருக்கிறது. இவ்வுலகக் கட்டுக்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். அதற்கு மனமாற்றம் என்ற இறையருள் தேவை. அந்த அருளைப் பெறுவதற்கு இத்தவக்காலம் நமக்கு ஏதுவான காலநிலையை  வழங்குகிறது. 

இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாட ஒரு தயாரிப்பின் காலம் தவக்காலம். இது ஜெபம், தவம், தியாகம் மற்றும் நற்செயல்கள் புரிய அழைக்கின்ற காலம். இரண்டாம் வத்திக்கான் சங்கம் இறைவழிபாடு ஏடுகள் 109ன் படி தவக்காலம் நமது திருமுழுக்கை நினைவூட்டல் அல்லது  திருமுழுக்குக்கான தயாரிப்பு மற்றும் தவம் ஆகிய இரண்டு பண்புகளை வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில் அடிக்கடி இறைவார்த்தையைக் கேட்டு பக்தியோடு ஜெப தியானங்களில் ஈடுபட்டு உயிர்ப்புக் கொண்டாட்டத்தில் பங்கு பெற திருஅவை இறைமக்களை அழைக்கிறது. ஆக இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு வசந்த காலம். அதுவும் வசந்த காலம் சம்பவிக்கும் மார்ச் மாதம் தான் அதிகமாக வருகிறது. 

தவக்காலத்தில் 40 நாட்களும் மிக முக்கியமான நாட்கள். ‘‘வி.ப 34: 28, 1அர 19 :8, மத் 4 :2’’ன் படியும், மரபின் படியும் நாம் உண்ணாநோன்பும் சுத்த போசனமும் அனுசரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், நோயாளிகளுக்கும் இதில் விலக்கு உண்டு. தவக்கால ஒழுங்குகளை பரிசேயர் போல் வெளித்தோற்றத்திற்கு அனுசரியாமல் உண்மையான மனமாற்றத்திற்காக அனுசரியுங்கள். அப்பொழுதுதான் இறையருள் உங்களை நிரப்பும். நீங்கள் விடாமல் பற்றிக்கொண்டிருக்கும் சுயநலம் மற்றும் பேராசையை உதறித் தள்ளி விடுங்கள். 

ஆன்மீக செயல்பாடுகளாகிய திருப்பலி, சிலுவைப்பாதை,  நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், நாள் முழுவதும் ஜெபமாலை, தனி ஜெபங்கள் மற்றும் ஞான புத்தகங்கள் வாசித்தல் ஆகியவற்றைக் கருத்தாய்க் கடைப்பிடியங்கள். அனைத்திற்கும் மேலாக பாவத்திலிருந்து  வெளியேறுவதும் விசுவாசத்தைப் புதுப்பிப்பதுமே நமது உயிர்ப்பின் மறை பொருளைக் கொண்டாட தயாரிப்பதற்கான ஒரே வழி ஆகும். நாமும் மனம் மாறுவோம். ஒருவர் மற்றவர் மனமாற்றத்திற்காக ஜெபிப்போம். வாழ்த்துக்களும் ஆசீரும்!

உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசீரும் அருளும் உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் ஆட்கொள்வதாக !

அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

PIO KURAL MAGAZINE MARCH APRIL 2014

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது அருமையானவர்களே!



புதிய ஆண்டு 2014 நம் ஒவ்வொருவருக்கும் கடவுளின் ஆசியாக வந்திருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் கடவுள் வழங்கியிருக்கின்ற அன்பின் ஆசீர். இறைவன் தமது பேரமைதியையும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் உங்களில் பொழிந்து வழி நடத்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஆசியையும் உங்களுக்கு உரித்தாக்குகிறேன். இந்த புதிய ஆண்டு தொடக்கத்தில் கடந்த ஆண்டில் எத்தனை ஆசீர்வாதங்களை கடவுள் வழங்கியிருக்கிறார் என பட்டியலிட்டு பாருங்களேன். பார்த்தீர்கள் என்றால் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகும். உள்ளத்திலிருந்து நன்றியும் பொங்கி எழும் என்பது உண்மை. செய்து பாருங்களேன்! அல்மா டி கொன்சினி என்ற பெண் ஒருவர் கடவுளை அடைவதற்கு தன்னை முழுவதும் தந்தை பியோவின் கரங்களில் விட்டுவிட்டார.; இதோ அவரின் சாட்சியம்: “தந்தை பியோ ஒரு பெண்ணுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்தார். நான் ஆலயத்தில் அவர் இருக்கும் இடத்திலிருந்து மூன்று அல்லது நான்கு மீட்டர் தூரத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அந்த நாளில் கண்டிப்பாக அவரைப் பார்த்துப்பேச வாய்ப்பு இல்லை. எனவே நான் எனக்குள்ளாகவே “தந்தையே, உங்களது ஆசீரை அனுப்புங்கள். உண்மையாகவே எனக்கு அது தேவை” என்று கூறினேன். என்ன ஆச்சரியம்! நான் பேசி முடிக்கும் பொழுது ஒப்புரவு இருக்கைக்குள் மறைவாக இருந்த தந்தை நகர்ந்து வெளியே என்னை நேரடியாக உற்றுப்பார்த்து, சிலுவை அடையாளம் வரைந்தார். பிறகு திரும்பவும் தலையை வணங்கி ஒப்புரவு அருட்சாதனப் பணியைத் தொடர்ந்தார்”. இது நடந்தது இத்தாலியில். (Testimony of Alma De Concini. Terzolas, Italy. July 23,1995) கடவுளின் ஆசி பெற்ற தந்தை பியோ தன்னிடம் வருபவர்க்கெல்லாம் ஆசீரை அள்ளிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கடவுள் கடல்வாழ் உயிரினங்களுக்கும் வானத்;துப் பறவைகளுக்கும் ஆசி வழங்கி பலுகிப் பெருகச் செய்திருக்கிறார்(தொ.நூ 1:22). ஆணையும் பெண்ணையும் படைத்த கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி அவர்கள் பலுகிப் பெருகவும், அனைத்தையும் தங்கள் ஆற்றலுக்கு உட்படுத்தவும், ஆளவும் செய்திருக்கிறார்(தொ.நூ 1:28). ஓய்வு நாளுக்கு ஆசி வழங்கி அதைப் புனிதப்படுத்தியிருக்கிறார்; (தொ.நூ 2:3). நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கி பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்பச் செய்திருக்கிறார் (தொ.நூ 9:1). நம் விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமுக்கு ஆசி வழங்கி பேரினமாக்கி சிறப்புச் செய்து அவரை ஆசியாக விளங்கச் செய்திருக்கிறார். அவர் வழியாய் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெற செய்திருக்கிறார். (தொ.நூ 12:2,3). அவரது மனைவி சாராவுக்கு ஈசாக்கு என்ற மகனை வழங்கி அவள் வழியாக நாடுகள் தோன்றி, அரசர்கள் உதிக்கச் செய்திருக்கிறார் (தொ.நூ 17:16). ஆபிரகாமின் வேண்டுதலின் பொருட்டு இஸ்மயேலுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெரிய அளவில் பலுகச் செய்து பன்னிரண்டு இளவரசர்களுக்குத் தந்தையாக்கி ஒரு பெரிய நாடே (அரேபியா) தோன்றச் செய்திருக்கிறார் (தொ.நூ 17:20). ஆபிரகாமிடமிருந்து வலிமைமிக்க மாபெரும் இனத்தைத் தோன்றச் செய்து, அவன் மூலம் மண்ணுலகில் எல்லா இனத்தாரும் ஆசி பெற செய்திருக்கிறார் (தொ.நூ 18:18). ஆபிரகாமின் மரபில் உதித்த மாமன்னன் இயேசு கிறிஸ்துவால் அகிலம் முழுவதும் ஆசியை, மீட்பைப் பெற்றுக்கொண்டது (மத் 1:17). இப்படி கடவுளின் ஆசி பலுகிப் பெருகி இவ்வுலகை நிரப்புகின்ற ஆசியாகவே இருக்கி;றது. அதுவும் குறையற்ற ஆசியாக, முழுமையான ஆசியாக, நிறைந்த ஆசியாக கடவுளின் ஆசி இம்மானிடத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் பிறந்திருப்பதே கடவுள் தந்த ஆசி. நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஆசியாகவே இருக்கின்றோம். ஆசி பெற்ற மக்களாகவே வாழ வேண்டும் இல்லையென்றால் தீர்ப்பு கடுமையாக இருக்கும் (திரு.பா 37:22). ஆபிரகாம் எல்லோருக்கும் ஆசியாக வாழ்ந்தது போல் நாமும் பிறருக்கு ஆசியாக இருப்பதே கிறிஸ்துவை நம்புகிறவர்களுக்கு அழகு. தீமை புரிவோருக்கும் ஆசி வழங்க வேண்டும் என்பதே கிறிஸ்துவின் போதனை (லூக் 6:28, உரோ 12:14, 1கொரி 4:12, 1பேது 3:9) எனவே அன்புக்குரியவர்களே இந்த புதிய ஆண்டு உங்களுக்குக் கடவுளின் ஆசியாக வந்திருக்கின்றது. இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குத் தெரிந்தவர்கள், நீங்கள் சந்திக்கிறவர்கள், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், தொழிலையும், படிப்பையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து நல்ல உடல் நலம், நீடிய ஆயுளோடு வாழச் செய்வாராக. தினமும் ஜெபமாலை ஜெபியுங்கள். இறைவனின் தாய், அன்னை மரியாவிடம் இந்த ஆண்டை அர்ப்பணித்து ஆசியின் மக்களாக மகிழ்ச்சியோடு வாழுங்கள். 

புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆசீர்! ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS