எனது அருமையானவர்களே !
டயானா க்ரேவ் (Diana Grave) ஒரு திரையுலக நடிகை. இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பணி புரிந்து வந்தார். அவர் மூச்சுக்குழல் விரிவு மற்றும் நுரையீரல் அடைப்பு நோயால் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். இவை நாள்பட்ட வியாதிகள். நாட்கள் செல்லச் செல்ல அவரது வாழ்வு மருந்தும் மருத்துவமனையுமாகவே மாறிப்போய்விட்டது. அவரது உடல்நிலை மிக மோசமாக சென்ற போது மருத்துவர்கள் இதமான கால நிலைப் பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். குளிர் மிகுந்த லண்டன் அவரது நுரையீரல் பிரச்சனையை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. தனது உடல் நிலைக்காக டயானா ஏதுவான வேறு இடத்துக்கு மாறவேண்டியிருந்தது.
35 வயதான டயானா தனக்கு ஏதுவான கால சூழ்நிலையை உடைய உரோமைக்கு செல்லத் தீர்மானித்தார். தனது உறவுக்காரப் பெண் ஜென்னி உரோமையில் வசித்ததும் சாதகமாக இருந்தது. உரோமையும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட உற்பத்திக்குப் பெயர் பெற்ற இடம். இத்தாலிய திரையுலகின் மையமாக உரோமை இருந்தது. நடிப்புத் திறமையும் அனுபவமும் நிறைந்த டயானாவுக்கு பணிபுரியவும் ஏற்ற இடம் என்பது அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. உரோமைக்குச் சென்ற பிறகும் வாடிக்கை அவ்வளவு எளிதாக இல்லை. பொருளாதாரப் பற்றாக்குறை அவருக்கு பெரும் கவலை கொடுத்தது. உடல் நோயினால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. அந்த வேளையில் ஜென்னி, சான் ஜியோவான்னி ரொத்தந்தோ சென்று தந்தை பியோவின் ஆசி பெற்று வரலாம் என்ற நம்பிக்கை ஊட்டும் ஆலோசனை தந்தார். டயானாவும் அதற்கு சம்மதித்து சிறிது உடல் பலம் பெற்றபின் ஜென்னியுடன் ஒரு நாள் இரவு, இரயிலில் பயணித்து ஃபோஜியோ சென்றடைந்து அங்கிருந்து வாடகைக் காரில் சான் ஜியோவான்னி ரொத்தந்தோ சென்றார்.
பலகீனமான டயானாவுக்கு பயணக்களைப்பால் ஏற்பட்ட மயக்கமான நிலை பயத்தை ஏற்படுத்தியது. முயற்சி செய்து ஆலயத்தில் நுழைந்த அவர்களுக்கு அமர்வதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் ஆலயத்தை நிரப்பியிருந்தது. தந்தை பியோ ஒப்புரவு வழங்கும் இடத்தை நோக்கி அந்த வழியே சென்று கொண்டிருக்க பெரிய மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. அவரும் அதே நோய்த் தாக்கத்தினால் பலகீனமாய் மூச்சுவிட சிரமப்படுவது தெரிந்தது. டயானா, தன்னைப் போலவே தந்தை பியோவும் உடல் வியாதியால் துன்புறுவதை உணர்ந்தார். நாள் பட்ட நுரையீரல் ஆஸ்த்துமா பிரச்சனையால் தந்தை பியோ மூச்சுவிட கஷ்டப்பட்டார். டயானாவுக்கு அவரை சந்திக்க முடியாதுபோல் தோன்றியது. அந்த சூழலில் டோமினிக் மெயர் என்ற கப்புச்சின் குருவிடம் பேச முடிந்தது. தன் நிலைமையை அவரிடம் எடுத்துக்கூறி தந்தை பியோவிடம் எப்படியாவது ஆசி பெற வேண்டும் என்று கூறினார். மற்றவர்களும் வாரக்கணக்காக காத்திருப்பதாகவும் முடிந்த அளவு உதவுவதாகவும் தந்தை டோமினிக் கூறினார்.
ஒரு மணி நேரத்திற்குப் பின் தந்தை டோமினிக் அவர்கள், டயானா மற்றும் ஜென்னிக்கு சைகை காட்டி அழைத்தார். நெருக்கடியான அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் திருப்பலிப் பொருட்கள் உள்ள அறைக்குச் சென்றனர். தந்தை பியோவும் அங்கு வந்தார். டயானாவைப் போல் 12 பேர் காத்திருந்தனர். அங்கு தந்தை பியோவுக்கு டோமினிக் ஒரு சிலரை மட்டும் சுட்டிக்காட்டி காதோடு காதாக ஏதோ பேசினார். அவர்களுக்குத் தந்தை பியோ தனிப்பட்ட முறையில் ஆசீர் அளித்தார். டயானா சுட்டிக்காட்டப்பட்ட பொழுது அவளைப் பார்த்து தந்தை பியோ புன்னகை செய்து அவரது தலைக்கு மேல் கை வைத்து ஏதோ பேசினார். ஆனால் டயானாவிற்கு ஒன்றும் புரியவில்லை. திருத்தல சந்திப்பின் இறுதி நாளில் அவர்கள் இருவரும் அருள் அன்னை ஆலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவருக்குப் பின்புறம் இருந்த பெண் வேதனை மிகுந்து கத்திக் கொண்டிருந்தார். உடனே தந்தை பியோ, ‘‘அமைதி’’ என்று அதட்டி, ‘‘இது புனிதமான இடம் யாரும் சத்தம் செய்யக்கூடாது’’ என்று சொன்னார். டயானா சான்ஜியோவான்னி ரொத்தந்தோவில் இருந்து திரும்பிய பிறகு தன்னுள் அமைதிiயையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தார். ‘‘எனது வாழ்வில் இப்பொழுதுதான் முழுமை யான நன்மைத்தனமும் ஆன்மீக பலமும் உள்ள ஒரு மனிதரோடு தொடர்பு கொண்டேன்’’ என்று தந்தை பியோவுடன் பெற்ற அனுபவத்தைச் சொன்னார். உரோமைக்குத் திரும்பிய பின் உலக காரியங்களில் பற்றற்ற உணர்வும், இவ்வுலக வாழ்வை துறப்பதற்கும் ஏன் இறப்பதற்கும் கூட தயாரானார். தந்தை பியோவை முகமுகமாய்ப் பார்த்ததிலிருந்து மன பலமும் ஆன்ம பலமும் பெற்றிருந்தார். மற்றவை எல்லாம் முக்கியம் இல்லாதது என்று உணர்ந்திருந்த சில நாட்களில் டயானா அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
தந்தை பியோவை சந்தித்து ஆசி பெற்றதிலிருந்து டயானாவுக்கு ஒரு நல்ல மனமாற்றம். அது அவரது இறப்புக்கு முன், ஒரு நல்ல ஆன்மீகத் தயாரிப்பாக இருந்தது தெளிவாகிறது. ‘‘ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’’ (மத் 16 : 26) என்ற இறைவார்த்தையின்படி டயானாவுக்குக் கடவுளும் தன் ஆன்மாவும் எவ்வளவு முக்கியம் என்பது விளங்கிற்று. ‘‘கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்’’ (பிலி 3 : 8) என்ற புனித பவுல் கூற்றுப்படி மற்றவற்றையெல்லாம் குப்பையென டயானா கருதியிருக்க வேண்டும். கிறிஸ்துவே தனது ஆதாயம் என சரணடைந்திருக்கிறார். இந்த ஒரு நிலையை அவர் அடையப்போவதை அறிந்தே தந்தை பியோ டயானாவைப் பார்த்தவுடன் புன்னகை செய்திருக்கிறார். தந்தை பியோவுக்கு அதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த ஆண்டு தவக்காலத்தை அனுசரித்து கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்கு பெற இருக்கும் நமக்கு டயானாவின் மனமாற்றம் நல்லதொரு அழைப்பாக இருக்கிறது. இவ்வுலகக் கட்டுக்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். அதற்கு மனமாற்றம் என்ற இறையருள் தேவை. அந்த அருளைப் பெறுவதற்கு இத்தவக்காலம் நமக்கு ஏதுவான காலநிலையை வழங்குகிறது.
இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாட ஒரு தயாரிப்பின் காலம் தவக்காலம். இது ஜெபம், தவம், தியாகம் மற்றும் நற்செயல்கள் புரிய அழைக்கின்ற காலம். இரண்டாம் வத்திக்கான் சங்கம் இறைவழிபாடு ஏடுகள் 109ன் படி தவக்காலம் நமது திருமுழுக்கை நினைவூட்டல் அல்லது திருமுழுக்குக்கான தயாரிப்பு மற்றும் தவம் ஆகிய இரண்டு பண்புகளை வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில் அடிக்கடி இறைவார்த்தையைக் கேட்டு பக்தியோடு ஜெப தியானங்களில் ஈடுபட்டு உயிர்ப்புக் கொண்டாட்டத்தில் பங்கு பெற திருஅவை இறைமக்களை அழைக்கிறது. ஆக இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு வசந்த காலம். அதுவும் வசந்த காலம் சம்பவிக்கும் மார்ச் மாதம் தான் அதிகமாக வருகிறது.
தவக்காலத்தில் 40 நாட்களும் மிக முக்கியமான நாட்கள். ‘‘வி.ப 34: 28, 1அர 19 :8, மத் 4 :2’’ன் படியும், மரபின் படியும் நாம் உண்ணாநோன்பும் சுத்த போசனமும் அனுசரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், நோயாளிகளுக்கும் இதில் விலக்கு உண்டு. தவக்கால ஒழுங்குகளை பரிசேயர் போல் வெளித்தோற்றத்திற்கு அனுசரியாமல் உண்மையான மனமாற்றத்திற்காக அனுசரியுங்கள். அப்பொழுதுதான் இறையருள் உங்களை நிரப்பும். நீங்கள் விடாமல் பற்றிக்கொண்டிருக்கும் சுயநலம் மற்றும் பேராசையை உதறித் தள்ளி விடுங்கள்.
ஆன்மீக செயல்பாடுகளாகிய திருப்பலி, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், நாள் முழுவதும் ஜெபமாலை, தனி ஜெபங்கள் மற்றும் ஞான புத்தகங்கள் வாசித்தல் ஆகியவற்றைக் கருத்தாய்க் கடைப்பிடியங்கள். அனைத்திற்கும் மேலாக பாவத்திலிருந்து வெளியேறுவதும் விசுவாசத்தைப் புதுப்பிப்பதுமே நமது உயிர்ப்பின் மறை பொருளைக் கொண்டாட தயாரிப்பதற்கான ஒரே வழி ஆகும். நாமும் மனம் மாறுவோம். ஒருவர் மற்றவர் மனமாற்றத்திற்காக ஜெபிப்போம். வாழ்த்துக்களும் ஆசீரும்!
உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசீரும் அருளும் உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் ஆட்கொள்வதாக !
அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச
0 கருத்துகள்:
கருத்துரையிடுக