ஆன்மீக வழிகாட்டியின் கடிதம்

எனது அருமையானவர்களே
புதுமைகள் கடவுளின் வெளிப்பாடு. புதுமைகள் நடக்க  வேண்டுமென எதிர்பார்க்கும் மக்கள் ஏராளம். கடவுளை நம்பாதவர்கள் கூட புதுமைகள்  நடப்பதைப்  பார்த்தால்  நம்பிவிடுவர். புதுமைகள்  சாதாரணமாக மனித ஆற்றலுக்கோ, இயற்கையின்  ஆற்றலுக்கோ உட்பட்டதல்ல. மாறாக இயற்கையின்  விதிக்கும், அறிவியல்  ஆராய்ச்சியின் விதிக்கும் அப்பாற்பட்டது. மனித ஞானத்தினால், அறிவினால், புத்தியினால், பகுத்தாய்வு செய்து காரணங்களைக் காண முடியாது. மனித சிந்தனைக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டது. ஆனால்  ஒன்று,  கடவுள் விரும்பினால் தான் நடக்கும்.  அது  கடவுளின் விருப்பம் அல்லது திருவுளம் ஆகும். கடவுள் ஆழமான  தனது   அன்பின்   உந்துதலால்  நிகழ்த்துகின்ற    காரியம்  அது. அதே  நேரத்தில் மனிதன்  கடவுள் மீது  கொண்டிருக்கும்  அசைக்க  முடியாத நம்பிக்கை  மிகவும்  அவசியம்.  ஆகவே புதுமை என்பது இயற்கையை கடந்த ஒரு நிகழ்வு அல்லது தெய்வீகப் பராமரிப்பு ஆகும்.
ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுள் இவ்வுலகை படைத்தார்..  ‘‘தொடக்கத்தில் கடவுள்  விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபோது  மண்ணுலகு   வெறுமை யாக  இருந்தது’’.  (தொ.நூ 1: 1-2) ஒன்றுமில்லாத நிலையிலிருந்து    மனிதரையும்,   மனிதருக்கும்   அனைத்து உயிர்களுக்கும் தேவையான  அனைத்தையும்  படைத்து அது  நல்லது  எனவும்  கண்டார். இது  எவ்வளவு அற்புதமும் ஆச்சரியமுமான புதுமை. இஸ்ராயேல்  மக்களை பாலை நிலத்தில் நடத்தி வந்தபோது எத்தனை எத்தனை புதுமைகள்!  நம்மை   மிகப்   பெரிய  ஆச்சரியத்தில்   மூழ்கச்  செய்த  புதுமை  ‘இயேசுவின் உயிர்ப்பு’ (மத்  28: 6-9).  மக்களின் பாவங்களுக்காக  இயேசு  இறந்து  உயிர்க்க வேண்டும்  என்பது கடவுளின்  திருவுளம். இயேசுவின்  உயிர்ப்பை மையமாகக் கொண்டுதான்  கிறிஸ்தவ  விசுவாசமே இருக்கிறது.  இயேசு  உயிர்க்கவில்லை  என்றால் கிறிஸ்தவமே  இல்லை.  இயேசு  தனது  சீடர்களிடம் ‘‘உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை  இருந்தால்  நீங்கள் இம்மலையைப் பார்த்து  இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது   ஒன்றும்   இராது  என  நான்    உங்களுக்குச் சொல்லுகிறேன்’’ என்றார் (மத் 17 :20). தம் பன்னிரு சீடர்களுக்கு இயேசு தீய ஆவிகளை ஓட்டவும் நோய்   நொடிகளை  குணமாக்கவும்   அதிகாரத்தை   வழங்கினார்   (மத்   10 :1). எனவே புதுமை என்பது கடவுளின்  வெளிப்பாடும்  அவரது அதிகாரத்திற்கும் திருவுளத்திற்கும் உட்பட்டதாகும்.

தந்தை   பியோவின்  வாழ்க்கையே  புதுமையானதுதான்.  அவரது வாழ்க்கை   முழுவதும்  புதுமைகள்.  அந்த  புதுமைகள்  அனைத்தும்  இறை வெளிப்பாட்டின்  நிகழ்வுகளாகவே  இருந்தது.   இந்தக்  காரணத்திற்காகவே, புனித    பியோ    புதுமைகளின்   ஒரே     ஊற்றாகத்     திகழும்     கடவுளுக்கு நன்றி    செலுத்தும்படியாக   மக்களைக்    கேட்டுக்கொள்வார்.    கடவுளின் வெளிப்பாட்டை தெளிவாகக் கண்டு நம்பிக்கையோடு வாழ்ந்த   புனித  பியோ  கடவுளின்   திருவுளத்திற்கு முற்றிலும் அடிபணிந்து வாழ்ந்தார்.

1908ம்      ஆண்டு      நிகழ்ந்த      ஒரு      புதுமை தந்தை பியோ வழியாக    நடந்த    முதல் புதுமை என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில்  தந்தை பியோ மான்ட்டேஃபுஸ்கோவில் உள்ள மடத்தில் வாழ்ந்தார். ஒருநாள் அருகில்  இருந்த காட்டிற்கு சென்று செஸ்ட்நட்    எனப்படும்    கொட்டைகளை   சேகரித்து ஒரு பையில்  நிரப்பி பியட்ரில்சினாவில் இருந்த  தன் அத்தை  டாரியாவிற்கு அனுப்பி  வைத்தார்.    டாரியா   பியோவை  அதிகம்   அன்பு    செய்தார்கள். அதைப்  பெற்றுக்கொண்ட டாரியா கொட்டைகளை சாப்பிட்டபின் பியோ நினைவாக அந்த பையை  பத்திரமாக பாதுகாத்தார்.
சில  நாட்களுக்குப்  பின்  டாரியா  அலமாரியில் ஏதோ   தேடிக் கொண்டிருந்தார். அந்த இடத்தில்தான் அவரது கணவர் துப்பாக்கி சுடும் மருந்து  பொடியை  வைத்திருந்தார்.   அது    மாலை   நேரமாக   இருந்ததால் டாரியா  மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு   தேட,   அந்த  மருந்து  தீப்பிடித்து அவரது    முகத்தில்    பற்றி     எரிந்தது.     சற்று     நேரத்திற்குப்பின்    அத்தை டாரியா பியோ நினைவாக வைத்திருந்த பையை  எடுத்து,  தனது முகத்தில் ஒத்திக்கொண்டார். ஆச்சரியம்! உடனே  அவரது முகம் குணம் பெற்றது. முகத்தில்  வலியோ, காயமோ, தழும்போ  எதுவுமில்லாமல்  மறைந்து   போ- னது. இது  தந்தை பியோ வழியாக  நடந்த  முதல் புதுமையாக கருதப்படுகிறது. கடவுளின்  பராமரிப்பு, நம்பிக்கை கொண்டவர்களுக்கு உண்டு என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது. இது உண்மை என்பதை  இந்த புதுமை நமக்கு உணர்த்துகிறது.

புனித பியோவின் ஆன்மீக  மகள்  ஒரு முறை  அவர்     எழுதிய கடிதத்தை  சாலையோரமாக நின்று  வாசித்துக்  கொண்டிருந்தாள். திடீரென காற்றடிக்கவே அந்தக் கடிதம்  கை தவறி காற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டது. வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்ட கடிதம்  திடீரென ஒரு கல்லில் சிக்கி அங்கேயே  இருந்தது. அந்தப்  பெண்  வேகமாக  ஓடி  கடிதத்தை பத்திரமாக எடுத்துக்கொண்டாள். அடுத்த நாள் அந்தப் பெண்  தந்தை பியோ வை சந்தித்தபோது, ‘‘காற்றடிக்கும்போது நீ அடுத்தமுறை கவனமாக இருக்க வேண்டும்.  நான்  காலால்  அதை  மிதிக்கவில்லையென்றால்  அந்தக்  கடிதம் பறந்து  பள்ளத்தாக்கிற்கு  ஓடியிருக்கும்’’என்று சொன்னார்.

‘‘ஒன்றா இரண்டா புதுமைகள் செய்தார் தந்தை பியோ
இந்த உலகம் வியக்க அற்புதம் செய்தார் தந்தை பியோ’’
என்ற  கவிஞர் பொன்னடியானின் பாடல் வரிக்கேற்ப  தந்தை பியோ ஏராள- மான  புதுமைகள் செய்திருக்கிறார்.  அதாவது   கடவுள் அவர்  வழியாக   மா- பெரும் நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார். இயேசு  நிகழ்த்திய புதுமைகளில் எல்லாம் ஒரு செய்தியைச்  சொன்னார். ஒவ்வொரு  புதுமையும் கடவுளின் இரக்கத்தை, மன்னிப்பை, கருணையை, அன்பை  வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.    ஆகவே புதுமைகள் நிகழ்த்தவேண்டும்  என்பதற்காக  அல்ல அந்த  நிகழ்வின்  வழியாக   இறையாட்சியை அறிவிக்க   வேண்டும்  என்பதே அதன்  நோக்கம்.   இயேசுவின்   சீடராக  இருந்து   81  ஆண்டுகளாக  வாழ்ந்த தந்தை பியோ இயேசு  விடுத்த இறையாட்சி பணியை  தனது புனிதமான வாழ்க்கையாலும், வார்த்தையாலும் மட்டுமல்ல புதுமைகள் வழியாகவும் அறிவித்தார். 

புதுமைகள் புரியும் தந்தை பியோவோடு இணைந்து கடவுளுக்கு நன்றி செலுத்த  நாம்  ஒவ்வொருவருமே அழைக்கப்படுகிறோம்.  கடவுள் நிகழ்த்தும் புதுமைகளில் கடவுளின்  வெளிப்பாட்டை கண்டு கொள்வோம். கடவுள்மீது கொண்டிருக்கும் விசுவாசிகளாக வாழ தந்தை பியோவைப் போல் நற்கருணை ஆண்டவரின்  பக்தியிலும்,  அன்னை   மரியாவின் பக்தியிலும் ஆர்வமுடன் ஈடுபடுவோம்.

இறையாசீர் உங்களோடு இருப்பதாக !

- அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக