'அம்மா மரி’ என்றாலே அன்பு வெள்ளம்
அகிலமெல்லாம் நிறைந்துவிடும்: இன்பம் துள்ளும்.
‘அம்மா’வெனத் தானழைத்த அன்புத் தாயை
அனைவர்க்கும் தாயாக இறைவன் தந்தார்
இம்மாநிலம் உய்வதற்கு ஏணி யாக
இலங்குகின்ற அருள்ஞானக் கேணி மாதா
நம்பிக்கை ஒளிவிளக்கை உளத்தில் ஏற்றி
நலிவிருளை அகற்றிடநாம் தயங்க லாமோ?
அருள்ஞான சிங்காரி, அமல ஏரி,
அண்டினோர்க்கு உபகாரி, கற்பலங் காரி,
இருள்பேயின் சங்காரி, இசையின் மாரி,
இயேசுவின் தாய்மரி இனிமை வாரி,
மருள்நீக்கும் மகிமையுடன் மதியில் ஏறி
மாபரனின் அருள்வேண்டி வழங்கும் பாரி
ஒருதாயாய் உலகுக்கு விளங்கும் மேரி
திருவடியைப் பணிந்தோர்க்கு நன்மை கோடி!
திங்கள் எனும் வாகனத்தில் ஏறிச் செல்லும்
செம்பவள நற்செவ்வாய் கொண்ட மேரி
எங்குமுள அற்புதன் நம் ஏசுவை வேண்ட
பொங்கருவி யாழன்ன குரலைப் பாய்ச்சி,
மங்காத்தன் வெள்ளிமுடி அசைய நோக்கி
தொங்கிவிழும் பனிச்சனியாம் துயரம் போக்கி
பங்கமிலா வெண்ஞாயிறு ஒளியைப்போல
பார்காக்கும் எழுகிழமை கொண்டாள் வாழி !
மாதாவைப் புகழாத வாயும் வாயா?
மாதாவைப் பார்க்கயெண்ணாக் கண்ணும் கண்ணா?
மாதாவை நினைக்காத மனமும் ஏனோ?
மாதாவைத் துதிக்காத தினமும் வீணே !
மாதாவின் பக்திதிரு மறையின் சக்தி
மாதாவின் பக்திக்கும் மனித முக்தி !
மாதாவின் திருப்புகழைப் பாடுவோமே,
மாதாவின் அருள்மழையை நாடுவோமே !
மு. அகி.காந்திராசன், தூத்துக்குடி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக