நல்லவனாய் இருப்பதற்கும் கெட்டவனாய் இருப்பதற்கும் அவன் அவன் அதற்குப் பொறுப்பு. நல்லவன் மிகுந்த முயற்சிகள் எடுத்து நல்லவனாக இருக்கலாம். ஆனால் கெட்டவன் மிக சுலபமாக கெட்டவனாக மாறிவிடலாம். கெட்டவன் மனம் மாறி நல்லவனாக வாழ்கிறான் என்றால், அவன் கடவுளுடைய ஆசிர்வாதத்திற்கு சொந்தக்காரனாக மாறிவிடுகிறான். கடவுளும் பாவி மனம் மாறி வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார். பாவி ஒருவன் அழிந்து போக வேண்டும் என்று கடவுள் விரும்புவதில்லை. நல்லவனாக இருக்கிறவன் தவறுதலாக கெட்டுப் போகிற பொழுது, கடவுளின் சாபத்தை தான் பெற்றுக்கொள்கிறான் (எசேக் 18:23-25). அவன் நல்லவனாக இருந்தான் என்பதற்காக எந்த விதத்திலும் அவன் கடவுளிடம் வாழ்வை பெற்றுவிட முடியாது. அவனுக்கு அழிவு நிச்சயம். நல்லவனாக இருந்து கெட்டவனாக மாறுகிறவனுக்கு பெரிய ஆபத்து, தப்பிக்க முடியாத ஆபத்தில் போய் முடிந்து விடும். இயேசுவும் தனது சீடர்களிடத்திலே கேட்டுக் கொள்வது இதுதான், "மறை நூல் அறிஞர்கள், பரிசேயர்கள் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்து இருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்" (மத் 5: 20).
இன்று அதைதான் இயேசு கிறிஸ்தவர்களாகிய நமக்கு சொல்லுகிறார். நம்முடைய நெறி; நம்முடைய ஒழுக்கம் நிறைந்த வாழ்வு மிக மிக சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் கடவுளின் அரசிற்கு அப்பாற்பட்டவர்களாக போய்விடுவோம். அவருடைய ஆட்சிக்குள் நுழையவே முடியாது. அழிவே நமக்கு இறுதியாகிவிடும். ஆகவே கடவுளின் சாபமும் ஆசிர்வாதமும் அவரவர் கையில் இருக்கிறது.
இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவன் என்ற பொறுப்போடு வாழ்ந்து கடவுளுடைய ஆசீர்வாதத்தை நமதாக்கிக் கொள்ள வேண்டும் என்று விழிப்போடு ஜெபிப்போம், விழிப்போடு வாழ்வோம். நம்மை சுற்றி வான தூதர்கள் வந்து உதவி செய்வார்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஆசீரும் ஆகட்டும்.