புனித பியோ ஜெபமாலை இயக்க பணியாளர்கள்

புனித ஜெபமாலை இயக்கம் 

தல பணியாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் : 

1)  பணியாளர் :
 பங்குகளிலோ மற்ற தலங்களிலோ செயல்படுகின்ற ஜெபமாலை இயக்கத்திற்கு முழு பொறுப்பாளராக செயல்படுவார்.
 கூட்டம் நடக்கும் இடத்தைக் குறித்தும் நாளை குறித்தும் உறுப்பினர்களுக்கு முன் அறிவிப்பு செய்து சகோதர அன்போடு அழைப்பு விடுப்பார்.
 கூட்டத்தை தலைமையேற்று நடத்துவார்.
 தல ஜெபமாலை இயக்கத்தில் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர் மற்றும் வருகை பதிவேட்டை பராமரிப்பார்.
 இவர் இயக்கத்தை தனது குடும்பமாக நினைத்து ஆன்மீக காரியங்களில் அனைவரோடும் நல்லுறவோடு செயல்படுவார். 
 இயக்கத்தில் உள்ள அனைவரும் நன்கு செயல்பட உற்சாகப்படுத்தி வழிநடத்துவார்.

2) துணை பணியாளர்:
 தலைமை தல பணியாளருக்கு  எல்லா விதத்திலும் உதவியாளராக செயல்படுவார். அவர் இல்லாத நேரங்களிலும் அவரது பொறுப்பை இவரே ஏற்று செயல்படுத்துவார்.
 புனித ஜெபமாலை இயக்கத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். புதிய உறுப்பினர்களை அழைத்து வந்து சேர்ப்பது. ஒரு பயிற்சியாளராகவும் செயல்படுவார். 
 தல பணியாளருக்கு ஆலோசகராகவும் செயல்படுவார்.

3) தல செயலர் :
கூட்டத்தின் அறிக்கையை தயார் செய்து அடுத்த கூட்டத்தில் வாசித்து செயலரும் தலைவரும் அதில் கையொப்பமிட்டு பராமரிப்பார். 

4) தல பொருளர் :
 வரவு செலவு கணக்குகளை பதிவு செய்து பராமரிப்பார். கூட்டத்திலே பொருளாதார கணக்குகளை வாசித்து கையொப்பம் பெற்றுக் கொள்வார்.
 இயக்கத்தின் செலவுகளை தலைவர் ஒப்புதலோடு செயல்படுத்துவார்.
 மீதமுள்ள பணத்தை பத்திரமாக பொறுப்போடு வைத்திருப்பார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோ தொடக்கவுரை


புனித தந்தை பியோ தொடக்கவுரை
 
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
 
இதயங்களை மேலே எழுப்புங்கள்.
 
நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

ஆண்டவரே, தூயவரான தந்தையே , என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா , எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது, மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும், எங்கள் கடமையும் மீப்புக்குரிய செயலும் ஆகும் .

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மீது பியத்ரெல்சினா, புனித தந்தை பியோவின் இதயம் மிகுந்த அன்பினால் பற்றி எரிந்து, கிறிஸ்துவின் துன்பங்களில் பரிவிரக்கத்துடன் பங்கேற்று  அவர் சிலுவை மரணம் வரை அவரைப் பின்தொடர்ந்தார். இவ்வாறு அன்பினால் அறிவுறுத்தப்பட்ட அவர், உடலாலும் ஆன்மாவாலும் பாதிக்கப்பட்ட அனைத்து துன்புறும் சகோதர சகோதரிகளுக்கும் நம் கடவுளின் எல்லையற்ற கருணையைக் வெளிப்படுத்தினார் .

எனவே , வனத்தூதர்கள்  புனிதர்கள் அனைவரோடும் இணைந்து நாங்களும் புகழ்ச்சிப் பண் இசைத்து முடிவின்றி ஆர்ப்பரிப்பதாவது.

தூயவர்... தூயவர்... தூயவர்... 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருப்பலி ஜெபங்கள்


செப்டம்பர் 23

பியத்ரெல்சினா புனித தந்தை பியோ, அருப்பணியாளர்
 
வருகை பல்லவி : தானியேல் (இ) 1:61, 64

ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
 
தொடக்க மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் பாடுகளில் பங்கேற்கும் பேற்றைத் தனிப்பட்ட அருளால் அருள்பணியாளரான புனித பியோவுக்கு வழங்கி அவரது பணியால் உமது இரக்கத்தின் வியத்தகு செயல்களை மீண்டும் நிகழ்த்தினீரே, அவரது பரிந்துரையால் கிறிஸ்துவின் துன்பங்களில் நாங்கள் என்றும் பங்குபெற்று உயிர்ப்பின் மாட்சிக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேருவோமாக. உம்மோடு...

காணிக்கை மன்றாட்டு
 
ஆண்டவரே, பீயத்ரெல்சினாவின் புனித தந்தை பியோவின் நினைவாக நாங்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்,  இப்புனிதமான மறைநிகழ்வுகளில் பங்கேற்பதன் வழியாக , எம் ஆண்டவராகிய கிறிஸ்துவினுடைய மீட்பின் பலனைப் பெற நாங்கள் தகுதியுடையவர்களாக மாறுவோமாக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகிறோம்.

நற்கருணை பல்லவி : ஏசா 61:1,2

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்; ஆண்டவரின் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் கடவுள் என்னை அனுப்பியுள்ளார்.

நன்றி மன்றாட்டு

ஆண்டவரே, உமது தெய்வீக இரக்கத்தின் மீது அளவற்ற நம்பிக்கையையும் பற்றுறு தியையும் கொண்டிருக்க வேண்டுகிறோம். புனித தந்தை பியோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, விடாமுயற்சியுடன் உமக்கு சேவை செய்ய , எங்கள் ஆண்டவராகி கிறிஸ்துவின் மூலம் அனைவருக்கும் அயராத தொண்டு செய்வோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகின்றோம்.

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அர்ப்பண வாக்குறுதி சடங்கு

அர்ப்பண வாக்குறுதி சடங்கு 

தூய ஆவியார் பாடல்.

நம்பிக்கை அறிக்கை.

அர்ப்பண வாக்குறுதி ஜெபம் 

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.

மீட்பின் வரலாற்றில் இறைவாக்கினர்களையும் திருதூதர்களையும் அழைத்து உம் மக்களை வழிநடத்திட அருள்புரிந்த இறைவா. இன்றும் திருதந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலை தலைவர்களை அழைத்து உமது ஆட்சியை இவ்வுலகில் நிலை பெற செய்துகொண்டிருக்கும் நல்ல ஆயனே. காலத்துக்கேற்ற புனிதர்களை வழங்கி எங்கள் மீது உமது பேரன்பை பொழிந்து கொண்டிருக்கும் எல்லையற்ற இரக்கப்பெருக்கே, என் இதயத்தின் நன்றிகளை உமக்கு காணிக்கையாக்குகிறேன். 

புனித தந்தை பியோவின் அடிச்சுவட்டில், புனித வாழ்வை நோக்கிய பயணத்தில், (பெயர்....), ஆகிய நான் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் பணியாளராக  என்னையே அர்ப்பணித்து கொள்கிறேன். ஜெபத்திலும் முன்மாதிரிகையிலும் சிறந்த கத்தோலிக்க நம்பிக்கையாளராக வாழ முழு முயற்சிகள் எடுப்பேன் என வாக்களிக்கிறேன். எனது அர்ப்பண வாழ்வில், தந்தை பியோவின் மனநிலையில் உம்மிடம் வேண்டுகிறேன். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் தேடுகிறேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு, உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்

குரு : இறைவனின் முன்னிலையில் சகோதர சகோதரிகளின் மத்தியில் நீங்கள் கொடுத்த அர்ப்பணத்தை உறுதி செய்கிறேன். இறைவன் உங்களுக்கு இவ்வாழ்வில் நிறை ஆசீரும், மறு வாழ்வில் நிலை வாழ்வையும் வழங்குவாராக. பதில்: ஆமென்.

ஒருங்கிணைப்பாளர் உத்தரியம் ஆசீர்வதிக்கப்படல் :

இறைவா, புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடையாளமாக இருக்கும் இந்த புனித பியோ உத்தரியங்களை + ஆசீர்வதித்து புனிதப்படுத்தியருளும். இதை அணிகின்றவர்கள் தமது கடமையை உணர்ந்து செயல்பட்டு உமது அன்புக்கு என்றும் பிரமாணிக்கமாக இருக்கவும் உமது அருளினால் நிரப்படவும் அருள்புரிவீராக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகின்றோம். 
பதில்: ஆமென்.

உ த்தரியத்தை அணிவித்தல் :

குரு : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே இந்த உத்தரியத்தை அணிந்துகொள். 
பதில் :ஆமென் 

*தீர்த்தம் தெளித்தல் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பியோ பாடல்கள்

1.  ஐந்து காய வரம் பெற்ற அற்புதரே

ஐந்து காய வரம் பெற்ற அற்புதரே (2)
எங்கள் ஆன்மாவின் ஒளியுமான தந்தை பியோவே
வரம் வேண்டி நாங்கள் வந்தோம் உம்மிடத்திலே அருள் வரமாகி நீ வருவாய் எம்மிடத்திலே (2)

எண்ணில்லாத துன்பங்களை ஏற்றுக்கொண்டீரே 
இயேசு பிரான் காயங்களைத் தாங்கி நின்றீரே 
மாசில்லாத புனித வாழ்க்கை வாழ்ந்து சென்றீரே(2)
மணம் சொரியும் காயங்களால் மனம் கவர்ந்தீரே 
மக்கள் மனம் கவர்ந்தீரே

தீராத நோய்களெல்லாம் தீர்த்த தந்தையே
 தேவ குமாரன் வழியில் சென்று புதுமை செய்தீரே
மாறாத காயங்களைச் சுமந்த தந்தையே (2) 
ஆன்மாவின் கறைகளை நீர் அகற்றிடுவீரே (2)
     
            ************

2. அருள் நிறை திருச்சபையில்
அற்புதக் குரலாய் ஜொலித்தீரே (2) அண்டி வந்தோருக்கு ஆறுதல் தந்து அன்பில் நெகிழ வைத்தீரே (2) புனித பியோவே (4)

தன்னையே இறையில் தாழ்த்தி
தாழ்ச்சியில் தன்னை உயர்த்தி (2) வார்த்தை வழியில் உறவாடும்
வரலாறாய் வாழ்ந்தவரே (2)
புனித பியோவே (4)

கருணை உள்ளம் கொண்டவரே
புனித அசிசி வழியினரே
காயப்பட்ட திருக்கரத்தால்
கள்வரையும் திருத்திய நல்மருந்தே
புனித பியோவே (4)

வாழ்வதற்குத் தெரியாமல்
வளம் அழித்துக் கொள்வோரின்
துயரங்களைச் சுமந்தவரே
துன்பங்களைத் துடைத்தவரே
புனித பியோவே (4)

                  *********

3.  திரும்பி வாராயோ திருந்தி வாராயோ அன்பனே காத்திருக்கும் ஒரு தந்தையுண்டு -நம் கரம் பிடித்துனை அழைத்தல் கண்டு- 2 (திரும்பி)

உள்ளம் என்னும் புத்தகத்தை ஊடுருவி வாசிக்கும் இறைவனவர் தந்தை தாயுமவர் உள்ளம் என்னும் புத்தகத்தை ஊடுருவி வாசிக்கும் இறைவனவர் தந்தை தாயுமவர் உதடுகள் வார்த்தையை உதிர்க்கும் முன்னே உண்மை அறிவார் அவர் உன்னைத் தெரிவார் இதயத்தை உனக்கே திறந்துவிடு ... திறந்துவிடு இருப்பதை முழுவதும் அறிக்கையிடு ... அறிக்கையிடு உறவினில் மீண்டும் சேர்ந்துவிடு உவகை நீ நிறைவாய் கண்டுவிடு (திரும்பி)

நன்மையின் வேடத்தில் தீமைதான் வந்தது நினை இழந்தாய் பல தீமை செய்தாய் நன்மையின் வேடத்தில் தீமைதான் வந்தது நினை இழந்தாய் பல தீமை செய்தாய் தீமையின் முகத்திரை கிழிந்தது இப்போது தயங்காதே இனி மயங்காதே
காலங்கள் உனக்காய் நிற்பதில்லை
கடவுளின் கண்களோ அயர்வதில்லை 
இழந்திடும் வாய்ப்புகள் வருவதில்லை 
இனியொரு வாழ்வு இகத்திலில்லை 
இனியொரு வாழ்வு இகத்திலில்லை (திரும்பி)

              **********-
4. புரட்சிப் புனிதரே மக்கள் புனிதரே

புரட்சிப் புனிதரே எங்கள் மக்கள் புனிதரே 
புவியின் புனிதரே எங்கள் வாழ்க்கைப் புனிதரே 
தந்தை பியோவே நின் திருப்புகழ் எங்கும் வாழ்கவே 
தூய பியோவே நின் திருப்பணி எங்கும் வளரவே (புரட்சிப்)

துன்பம் கண்டு துவளாமல் - பிறர் துயரம் துடைக்கத் துணிந்தவரே சன் ஜிவானி ரொத்தந்தோவின் துயர் துடைக்கும் வீடாக 
லாகாசா சொல்லியோ வோதெல்லா செஃப்ரன்ஸா மருத்துவமனையைக் கண்டவரே ஊனமுற்ற பல மாந்தர்க்கு உயரிய நல்வாழ்வு தந்தவரே வேலையற்ற பல மனிதர்க்கு வேலை வாய்ப்புகளைத் தந்தவரே 
மனித நேயம் காத்தவரே

உள்ளம் நுழைந்து அகவாழ்வின் பல உண்மை உரைக்க வந்தவரே உண்மை வழியில் ஊன்றி வாழ என்றும் திருமொழி சொன்னவரே
 நாடி வந்த அருமை இளைஞர்களை 
ஆர்வம் கொண்டு அழைத்தவரே
அன்பு நெறிகாண எங்களுக்கு நண்பராக தினம் திகழ்ந்தவரே சன் ஜிவானி ரொத்தந்தோவில் இளையோர் சமுகம் இன்றும் கூட உம்மை வலம் வர கவர்ந்தவரே (புரட்சி)
               *********

5. என்னோடு தங்கும் ஆண்டவரே

தொகை:

என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே நற்கருணை திருவிருந்தே இருளகற்றும் ஒளியமுதே அன்பருக்கு அருளுகின்ற பண்பே பரம்பொருளே 

என்னோடு தங்கும் ஆண்டவரே -4 எனது ஒளியும் நீர் தானே 
எனது வழியும் நீர் தானே (2) உமது சித்தம் அறிவதற்கும் 
உம் குரல் கேட்டு 
உமை நான் தொடர்வதற்கும் (2)

என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே

அதிகமாக உம்மை நேசிக்கவும் சுவாசமாக உம்மை சுவாசிக்கவும் அதிகமாக உம்மை நேசிக்கவும் சுவாசமாக உம்மை சுவாசிக்கவும உம்மை வாழ்நாள் முழுவதும் யாசிக்கவும் 
என் உள்ளம் நீர் தங்கும் இல்லமாகவும் 
என்னோடு தங்கும் ஆண்டவரே கேட்டதைத் தருகின்ற ஆண்டவரே 
என் ஆற்றலைப் புதுப்பிக்க வாருமய்யா 
தீர்ப்பும் மரணமும் தடைப்போட்டால் 
எமைக் காக்க உம் துணை தேவையய்யா

என்னோடு தங்கும் ஆண்டவரே
 என்னோடு தங்கும் ஆண்டவரே

ஆறுதலை நான் கேட்கவில்லை அதற்கு எனக்கோர் தகுதியில்லை 
நீர் பிரசன்னமானால் அது போதும் 
அந்த பெருங் கொடையை நீர் தாருமய்யா
மேலும் மேலும் உமை நான் நேசித்திட 
நாளும் பொழுதும் உமைத் தொடர்ந்து வர
 நித்திய காலமும் யாசிக்கிறேன் வேறு எதையும் நான் கேட்கவில்லை (2)

என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே

வறட்சியைக் கண்டு வாடுகிறேன் இந்த சிலுவை துன்பத்தில் அஞ்சுகிறேன் (2) சோதனை வேதனை தரும்போது ஓ யேசுவே நீரே துணையாவீர் சோதனை வேதனை தரும்போது ஓ யேசுவே நீரே துணையாவீர் 

என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் ஆண்டவரே

6. ஒன்றா இரண்டா புதுமைகள்

ஒன்றா இரண்டா புதுமைகள் செய்தார் தந்தை பியோ 
இந்த உலகம் வியக்கும் 
அற்புதம் புரிந்தார் புனித பியோ தந்தை பியோ எங்கள் புனித பியோ (2) 

தீராத நோயால் வாடிய பலரைப் புனித ஜெபத்தால் காத்தவர் பியோவே
 பார்வை இழந்த பலருக்குப் பார்வை 
அளித்தவர் நமது தந்தை பியோவே 
குழந்தை பாக்கியம் இல்லாதோர்க்கு
குழந்தை வரமும் அளித்தவர் அவரே 
அழியும் பேய்கள் நடுங்கி ஓடிட கட்டளை இட்டுக் காத்தவர் அவரே 

கண்ணிண் கண்மணி இல்லாத சிறுமிக்கும் கண் பார்வை தந்து அதிசயம் புரிந்தார் (2) எண்ணற்ற நோயால் வாடிய பலரும் 
குணம் பெற நாளும் அருள் மழை பொழிந்தார் (2) 
வீண் பழியாலே மரண தண்டனை பெற்ற பெண்மணியைத் தப்பிக்க வைத்தார் (2) 
தீராத காய்ச்சலால் சுய நினைவிழந்த மங்கை முழுதாய்  குணம் பெற வைத்தார் (2)






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோ திருவிழாவை முன்னிட்டு நவநாள் ஜெபம்

இன்று முதல்
புனித தந்தை பியோ திருவிழாவை முன்னிட்டு நவநாள் ஜெபம் 
(20 - 28/09/2025) 

முதல் நாள் :

1. அமைதியின் உருவாம் புனித தந்தை பியோவே!
போர்களும் சண்டைகளும், குழப்பங்களும் நிறைந்த இவ்வுலகில் அமைதியும் சமத்துவமும், அன்பும் மேலோங்கி வளர இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாட வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 

ஐந்து காய வரம் பெற்ற முதல் குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி, பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, செபமாலை பக்தியை சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே. தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி, பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து, இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம் பெற்ற வள்ளலே. எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே. இறையால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரே, தூய பியோவே. இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும், தீராத நோய்களோடும், வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடி தேடி வரும் எங்களைக் கண்ணோக்கிப் பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றட்டுகளை ( உங்கள் விண்ணப்பங்களை அமைதியாக சொல்லவும் ) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்குப் பெற்றுத்தாரும்.
அகிலம் போற்றும் அற்ப்புத தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து, வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும், உலகிற்கு அமைதியை கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். (1 பர, 1 அருள், 1 திரி )

இரண்டாம் நாள் 

2. மக்கள் புனிதர் தந்தை பியோவே!
உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் சுயநலம் தவிர்த்து மக்கள் நலம் பேணி, நல்லாட்சி புரிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாட வேண்டுகிறோம். (1விண். 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்..........

மூன்றாம் நாள் 

3. அற்புத புனித தந்தை பியோவே!
நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி, வறட்சி ஆகியவை நீங்கி மக்கள் வளமோடும், நலமோடும்,
நிறைவோடும் வாழத் தேவையான வரத்தை இறைமகன் இயேசுவிடம் இருந்து பெற்றுத்தர வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.......

நான்காம் நாள் :

4. அற்புத குணமளிக்கும் தந்தை பியோவே!
தீராத நோய்களினால் வேதனைப்படும் உம் மக்களை கண்ணோக்கிப்பாரும். அவர்கள் வேண்டுதல்களுக்கு மனமிரங்கி நல்ல உடல் நலத்தைத் தர இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும்.('விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.......

ஐந்தாம் நாள் :

5.பிசாசுகளை நடுநடுங்கச் செய்யும் புனித தந்தை பியோவே!
மக்களை வாட்டி வதைக்கும் தீய சக்திகளை விரட்டி, அவர்களுக்கு மன நிம்மதியையும். ஆறுதலையையும், மகிழ்ச்சியையும் வழங்கிட இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும். (1விண், 1அருள்,1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

ஆறாம் நாள் 

6. புனித தந்தை பியோவே!
எம் சமுதாயத்தில் வாழும் இளைஞர்கள், தீய வாழ்க்கையையும், சுயநலத்தையும் விட்டுவிட்டு நல்வழிக்கு திரும்பவும், வாழ்க்கையில் முன்னேறவும், தியாக தீபங்களாக மாறவும் வரமருள் இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி மன்றாடும். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.....

ஏழாம் நாள் :

7. இறை ஞானம் நிறைந்த தந்தை பியோவே!
எங்கள் குழந்தைகள் ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும், தெய்வ பயத்திலும், கீழ்ப்படிதலிலும் சிறந்து விளங்கி திருச்சபைக்கும்,நாட்டிற்கும் எதிர்காலத் தூண்களாக விளங்க இறைமகன் இயேசுவிடம் தேவையான அருளைப் பெற்றுத் தர உம்மை மன்றாடுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்.....

எட்டாம் நாள் :

8. தொழிலாளர்களின் ஆறுதலான தந்தை பியோவே!
எம் நாட்டுத் தொழிலாளர்கள் நிறைய வேலை வாய்ப்பைப் பெற்று, நீதியான ஊதியம் பெற்று, குடும்ப வருமானத்தையும் நாட்டு வருமானத்தையும், பெருக்கி வளமான வாழ்வை அமைத்திடத் தேவையான அருளை இறைமகன் இயேசுவிடம் பெற்றுத்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். (விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

ஒன்பதாம் நாள் :

9. நல்லுறவின் புனித தந்தை பியோவே!
எம் நாட்டு மக்கள் வேற்றுமைகளை அகற்றி ஒற்றுமையை வளர்க்கவும் ஜாதி, மத பேதமின்றி ஒவ்வொருவரையும் சகோதர, சகோதரிகளாக மதித்து ஏற்று அன்பு செய்து சகிப்புத் தன்மையோடு வாழத் தேவையான அருளைப் பெற்றுத் தர இறைமகன் இயேசுவிடம் மன்றாட உம்மை வேண்டுகிறோம். (1விண், 1அருள், 1திரி)

நவநாள் ஜெபம் 
ஐந்து காய வரம்......

பத்தாம் நாள் 

10. இயேசுவின் துன்பத்தில் பங்கேற்ற புனித தந்தை பியோவே!
உலகமெங்கும் ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களை ஏற்று இரத்தம் சிந்தி உயிர் துறக்கின்ற கிறித்துவர்கள் மன வலிமையோடும் முழு விசுவாசத்தோடும் இயேசுவுக்கு சாட்சி பகரவும், கடவுளின் மாபெரும் இரக்கத்தையும் கருணையையும் அன்பையும் பாதுகாப்பையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ள தேவையான அருளைத் தரவேண்டுமென்று இறைமகன் இயேசுவிடம் மன்றாட உம்மை வேண்டுகிறோம். (விண், 1.அருள், 1திரி)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோ மன்றாட்டு மாலை


புனித தந்தை பியோ மன்றாட்டு மாலை 

ஆண்டவரே இரக்கமாயிரும். கிறிஸ்துவே இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.

விண்ணகத்தில் இருக்கிற தந்தையாம் இறைவா-
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட திருமகனாம் இறைவர் - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும்.

புனித மரியாயே....
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
குடும்பங்களின் பாதுகாவலரான புனித் சூசையப்பரே...
புனித பிரான்சிஸ் அசிசியாரே ..
புனித தந்தை பியோவே...
பிரான்சிஸ்கன் சபையின் மணிமுடியாகிய புனித் தந்தை பியோவே...
பிரான்சிஸ்கன் சபையின் நன்மாதிரியான புனித தந்தை பியோவே....
புனிதர்களுள் புனிதராக விளங்கும் புனித தந்தை பியோவே...
பாவிகள் மனம் திரும்ப தன்னையே வருத்திக் கொண்ட புனித தந்தை பியோவே....
அன்னை மரியாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட புனித தந்தை பியோவே.
இயேசுவின் பாடுகளில் பங்கேற்று ஐந்து காயங்களைத் தன் உடலில் சுமந்த புனித தந்தை பியோவே...
புனித பிரான்சிஸ்குவின் அடிச்சுவட்டில் வாழ்ந்த புனித தந்தை பியோவே...
திருப்பலியில் உம்மையே பலியாக்கிய புனித தந்தை பியோவே...
ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்க பேரார்வம் கொண்ட புனித தந்தை பியோவே...
 சில நாட்கள் திவ்விய நற்கருணையை மட்டுமே உணவாக கொண்டிருந்த புனித தந்தை பியோவே...
இறை பிரசன்னத்தில் அடிக்கடி பரவசமடைந்த புனித தந்தை பியோவே...
அனைவருக்கும் நல்ல ஆன்மீக ஆலோசகரான புனித தந்தை பியோவே...
தன்னை நாடிய உத்தரிக்கின்ற ஆன்மாக்களின் வேதனையைத் தணித்த புனித தந்தை பியோவே...
ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பிய புனித தந்தை பியோவே...
சாத்தானின் சோதனைகளை வென்றவரான புனித தந்தை பியோவே...
ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் வரம் பெற்ற புனித தந்தை பியோவே...
எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரான புனித தந்தை பியோவே...
அடுத்தவர் அறியாமல் நடமாடும் ஆற்றல் பெற்ற புனித தந்தை பியோவே...
திராத நோய்களையும் குணமாக்கும் வல்லவரான புனித தந்தை பியோவே...
வயிற்றில் தோன்றிய கட்டியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கிய புனித தந்தை பியோவே...
இறை ஞானத்தால் தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்கிய புனித தந்தை பியோவே...
பார்வை இழந்தோர்க்குப் பார்வை அளித்த புனித தந்தை பியோவே...
குழந்தைபேறு அற்றவர்க்குக் குழந்தை வரம் அளித்த புனித தந்தை பியோவே...
மருத்துவர்களால் கைவிடப்பட்ட சிறுவனைக் குணமாக்கிய புனித தந்தை பியோவே..
புற்றுநோயாளரை அற்புதமாக குணப்படுத்திய புனித தந்தை பியோவே...
பேய்களை நடுநடுங்கச் செய்தவரான புனித தந்தை பியோவே...
சுய நினைவு இழந்தவர்களை வல்லமையுள்ள செபத்தால் குணமாக்கிய புனித தந்தை பியோவே...
தீயவர்களை மனமாற்றிய புனித தந்தை பியோவே....
இயேசுவின் பிரசன்னத்தை எல்லோருக்கும் உணர்த்திய புனித தந்தை பியோவே...
இறை நம்பிக்கையற்றவர்களை மனம் திருப்பிய புனித தந்தை பியோவே....
தொழிலாளர் நலன் பேணிய புனித தந்தை பியோவே....
எல்லோருக்கும் எல்லாமும் ஆன புனித தந்தை பியோவே....

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே (3)
1. எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் 
2. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. எங்களைத் தயை செய்து மீட்டருளும்.

மன்றாடுவோமாக:
எங்கள் வானகத் தந்தையாகிய இறைவா! புனித தந்தை பியோவை மக்களின் புனிதராகவும், தேவைகளில் பரிந்து பேசுகிறவராகவும் உம் மக்களுக்கு அளித்தீரே! அதற்காக நாங்கள் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறோம். அவரது அருள் உதவியால் நாங்கள் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைக் கடைபிடிக்கவும். கடமைகளில் தவறாதிருக்கவும், கீழ்ப்படிதலில் சிறந்திருக்கவும் செய்தருளும். எங்களுக்கு நேரிடும் இன்னல்களில் எல்லாம் உமது ஆதரவைக் கண்டு உணரவும் செய்தருள்வீராக! எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS