நம்பிக்கை
மனிதன் வாழ்வதே நம்பிக்கையால்தான். நிலத்தை உழுது விதைப்பவன் உரிய காலத்தில் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான். கடின உழைப்போடு படிக்கும் மாணவன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன் என்ற நம்பிக்கையால் தான். சேர வேண்டிய இலக்கை, இடத்தை நோக்கிச் சேருவோம் என்ற நம்பிக்கையால்தான் பேருந்துகளிலும், புகை வண்டியிலும் பயணம் தொடர்கிறோம். ஒரு கவிஞர் கூறியதுபோல, நீ இன்று சுமக்கும் நம்பிக்கை, நாளை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும். நம்பிக்கை வாழ்வின் ஆணி வேராக அமைகிறது. நம்பிக்கை இழந்தவன் செத்தவனாவான். எனவேதான் இயேசு கூறுகிறார், என் தந்தையின் மீது நம்பிக்கை வையுங்கள். என் மீதும் நம்பிக்கை வையுங்கள் (யோவா. 14:1). உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னை நம்புவோர் என்றும் வாழ்வர்(யோவா. 6:47) என்று.
ஆண்டவரே, எத்துணை காலத்திற்கு நான் துணை வேண்டி கூக்குரலிடுவேன். நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? கொள்ளையும், வன்முறையும் என் கண் முன் நிற்கின்றன என்று புலம்புகின்ற வருக்கு (அபகூக். 2:4) எதிர்பார்த்து காத்திரு. அது நிறைவேறியே தீரும். நேர்மை உடையவர் நம்பிக்கையால் வாழ்வடைவர் (முதல் வாசகம்) என்று பதில் தருகிறார் ஆண்டவர்.
இன்றைய நற்செய்தி இன்னும் ஆழமான உணர்வுக்கு நம்மை அழைக்கிறது. காட்டு அத்திமரத்தை நோக்கி, நீ வேரோடு பெயர்ந்துபோய் கடலில் வேறூன்றி நி ன்றால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் (லூக். 17:6) என்று. இது என்ன நடக்கக் கூடியதா? என்ற கேள்வி நம்மிலும் எழலாம். ஆம் நடக்கக் கூடியதுதான். நடக்காததை நமக்கு ஆண்டவர் போதிக்க மாட்டார். விவிலியத்தில் கூறப்படும் பிறவினத்தாளாகிய கனானேயப் பெண், பிள்ளைகளுக்கு முதலில் உணவைக் கொடும். ஆனால் அதிலிருந்து கீழே விழும் சிறு துண்டுகளையாவது நாய்களாகிய நாங்கள் பொறுக்கித் தின்ன உரிமை தாரும் என்று நம்பிக்கையோடு கூறி இயேசுவையே அசைத்துவிட்டார் (மத். 15:28).
மராட்டிய நாட்டிலே சிவாஜி என்ற மன்னன் ஆட்சி செய்த காலம், வறுமையால், நோயில் உயிருக்காகப் போராடிய தன் தாயைக் காப்பாற்ற விரும்பி எதிரியின் வாக்குறுதியை நம்பி, அரசனைத் தொலைத்துக் கட்ட 18 வயது இளைஞன் ஒருவன் அரசனின் படுக்கை அறைக்கு வாளோடு நுழைந்தான். ஆனால் வீரர்களால் பிடிபட்டான். இந்தச் செயலுக்காக அரசன் அவனைத் தூக்கிலிடப் பணித்தான். ஆனால் அந்த இளைஞன், அரசே! நான் செய்யத் துணிந்த குற்றம் பெரியது. உங்கள் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என்னை நம்புங்கள். விலங்கு மாட்டாது என்னை அனுப்பி வையுங்கள். நான் வீடு சென்று அம்மாவிடம் ஆசீர் பெற்றுத் திரும்புகிறேன். அதன்பின் எனக்குத் தண்டனை கொடுங்கள் என்று வேண்டினான். ஏனெனில் நான் மானமுள்ள மராட்டியன் என்றான். அரசனும் இறுதியாக நம்பி. போகவும் அனுமதி கொடுத்தார். குறிப்பிட்டபடி, அம்மாவின் ஆசீர் பெற்று, அரசன்முன் நின்றான். இதைக் கண்ட அரசன், உன்னைப்போல நம்பிக்கைக்கு உரிய ஒருவனை, நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. நீயே என் நம்பிக்கைக்குரியவன் எனப் பரிசு வழங்கி, தன் படையிலும் சேர்த்துக் கொண்டார். ஆம், நாம் மூவொரு இறைவனில் நம்பிக்கைக் கொண்டவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். ஏனெனில் உன் கால்கள் இடறாதபடி பார்த்துக் கொள்வார். உம்மைக் காக்கும் அவர் உறங்குவதும் இல்லை. கண் அயர்வதும் இல்லை (திபா. 121:3).
ஆபேலை நேர்மையாளராக, நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட, ஆப்ரகாம் துணிந்து தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிடத் துணிந்ததும் (எபி. 11:4-11) நம்பிக்கையால்தான்.
சிந்தனை
குரங்கு குட்டியானது, தாயை நன்றாகப் பற்றிக் கொள்ளும். பூனையோ தன் குட்டியை வாயில் கவ்விச் செல்லும். நாம் குரங்கு குட்டிபோல நம்பிக்கையோடு இறைவனைப் பற்றிக் கொண்டோமானால், இறைவன் பூனையைப்போல நம்மைத் தூக்கிச் செல்வார்.
நம்புவோம், செபிப்போம், நல்லது நடக்கும், நல்லதும் செய்வோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக