அமெரிக்காவில் வெள்ளைநிறக் குழந்தைகள் சிகப்புநிற பச்சைநிற, ஊதாநிறப் பலூன்களைப் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கறுப்புநிற நீக்ரோ குழந்தைகள் வெள்ளை நிறக் குழந்தைகளைப் பார்த்து, "கறுப்புநிறப் பலூன்கள் மேலே பறக்குமா?" என்று கேட்டனர். அதற்கு வெள்ளைநிறக் குழந்தைகள் கூறினர்: "நிச்சயமாகப் பறக்கும்; ஏனெனில் பறப்பது வெள்ளைநிறமோ, பச்சைநிறமோ, கறுப்புநிறமோ இல்லை;மாறாக, பலூன்களில் உள்ள காற்றுதான் பலூன்களை உயரப் பறக்கச் செய்கின்றது."
அவ்வாறே, மனிதர்களை விண்ணகத்துக்குக் கொண்டு செல்வது அவர்களது மதங்கள் அல்ல; மாறாக, கடவுள்மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் மனநிலையுமாகும்.
இவ்வுண்மையை பேதுரு தெளிவாகக் கூறியுள்ளார்: "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை... எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34).
இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் ஒருவர் கேட்கிறார்: "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" இக்கேள்வியைக் கேட்டவர், ஒருசிலர்தான் மீட்படைவர் என்ற குறுகிய மனநிலையைக் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது.
யூத இனத்தார் மட்டுமேமீட்புப்பெறுவர். பிற இனத்தவர் மீட்படையமாட்டார்கள் என்ற எண்ணம் யூதர்களுடைய மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆனால் இக்கருத்துக்கு நேர்மாறாக இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறுகிறார்: "பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்" (லூக் 13:28-30).
ஒரு பங்குத்தந்தை மறைக்கல்வி வகுப்பில் மாணவர்களிடம், "நரகத்திற்குப் போகிறவர்கள் கையை உயர்த்துங்கள்" என்றுகேட்டபோது, ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான். பங்குத்தந்தை அவனிடம், "ஏண்டா நீ ஒருவன் மட்டும் நரகத்துக்குப்போக விரும்புகிறாய்? " என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்: "சாமி! நீங்கத் தனியாகப் போக வேண்டாம்; உங்களுக்குத் துணையாக நானும் வருகின்றேன்." ஆம், சாதாரண மக்கள் விண்ணகம் செல்ல, பங்குத்தந்தை நரகத்துக்குச் செல்லலாம். மற்ற மதத்தினர் விண்ணகம் செல்ல, கிறிஸ்தவர்கள் நரகத்துக்குச் செல்லலாம்.
புனித அகுஸ்தினை மேற்கோள் காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது; "திருச்சபையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது, உள்ளத்தாலன்றி, உடலால் மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்புப் பெறுவதில்லை" (திருச்சபை, எண் 14).
திருமுழுக்குப் பெற்றவர்கள் அன்புவாழ்வு வாழவில்லை என்றால், அவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்கள்: உண்மைக் கிறிஸ்தவர்கள் அல்ல; அத்தகையவர் மீட்படைவதில்லை.
மீட்பு என்பது கடவுளின் கொடை, ஆனால் அதே நேரத்தில் மீட்படைய உழைக்க வேண்டும்.
திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்" (பிலி 2:12).
"உன்னையன்றி உன்னைப் படைத்த கடவுள் உன்னையன்றி உன்னை மீட்கமாட்டார்" (புனிதஅகுஸ்தின்).
மீட்படைய நாம் என்ன செய்ய வேண்டும்? 'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்திச் செல்ல முயலுங்கள்" (லூக் 13:24) என்கிறார் கிறிஸ்து.
இடுக்கமான வழி இயேசு சென்ற வழி,
அதுதான் சிலுவையின் வழி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:24).
இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் "(எபி12:6).
எனவே, துன்பத்தைச் சாபமாகக் கருதாமல் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருத வேண்டும். கடவுள் நம்முடைய இம்மைநலன்களில் மட்டுமல்ல, மறுமை நலன்களிலும் அக்கறை கொண்டவர்.
எனவேதான் நிலையற்ற இவ்வுலக இன்பங்களைப் பற்றிக்கொண்டு நிலையான விண்ணக வாழ்வை நாம் இழந்து விடாமல் இருக்க, துன்பங்கள் வழியாக நம்மைத் தூய்மைப்படுத்தி விண்ணக வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார்.
"காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் அம்மாவை வாங்கமுடியுமா? " என்று திரைப்படக் கவிஞர் கேட்கிறார். ஆனால் இயேசுவோ, "காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் ஆன்மாவை வாங்கமுடியுமா? என்று கேட்கிறார்.
"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கெண்டாலும் தம் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார்? (மத் 16:26). "மனம் மாறாவிட்டால் (தவம் செய்யாவிட்டால்) எச்சரிக்கின்றார் கிறிஸ்து. தவம் என்பது என்ன? காட்டுக்குச் சென்று அனைவரும் அழிவீர்கள்" (லூக் 13:3) என தவம் செய்வது தவம் இல்லை.
மாறாக, ஒருவர் தமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதும் மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும்தான் தவம் என்கிறார் வள்ளுவர்.
"உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண்செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு" (குறள் 261)
நமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் சில துன்பங்கள் நம் உடலில் தைத்த முள்ளைப் போன்று வருத்தலாம்; நாம் செருக்குறாதபடியும் கடவுளின் அருளில் நம்பிக்கை வைக்கும்படியும் கடவுள் அத்துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பவுல் அடிகளார் போன்று புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் பிறர்க்கு நாம் முற்பகல் தீமை செய்தால், பிற்பகல் அதே தீமை நம்மைத் தாக்காமல் விடாது.
"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் நமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்" (குறள் 319)
எனவே. இடுக்கமான வாயில் வழியில் செல்வோம். தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவோம். மீட்படைவோர் எவ்வளவுபேர்? என்று கேட்காது. நாம் மீட்படைவோமா? என்று கேட்போம். நம்மில் நற்செயலைத் தொடங்கிய கடவுள் அதை நிறைவு செய்வாராக (பிலி 1:6).
இறை அடியார் ஃபுல்டன்ஷீன் ஆயர் சொல்லும் விண்ணகத்தில் மூன்று ஆச்சரியங்கள்:
1. நாம் எதிர்பார்க்காதவர்கள் அங்கே இருப்பார்கள் அது ஒரு ஆச்சரியம்.
2. நாம் எதிர்பார்த்தவர்கள் அங்கே இருக்க மாட்டார்கள். ஆச்சரியம்
3. நாம் விண்ணகத்திற்கு வந்தது ஒரு ஆச்சரியம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக