என் அருமையானவர்களே


புத்தாண்டு புலர்ந்தது
புதுயுகம் மலர்ந்தது
புத்தொளி வீசிட
புதுமையாய் வாழ்ந்திட
புறப்படு நல்மனமே

வார்த்தையில் இனிமையும்
வாழ்க்கையில் நேர்மையும்
வசந்தமாய் வீசிட
வரலாறு படைத்திட
வாழ்த்துகள் நல்மனமே

உன்னிலும் நேர்மறை
பிறரிலும் நேர்மறை
அவனியில் நேர்மறை
அனைத்திலும் நேர்மறை
கண்டிடு நல்மனமே

கடவுளின் கருணையால்
கடந்தவன் அன்பால்
காப்பவன் அருளால்
கனிந்தவன் பண்பால்
நிறைந்திடு நல்மனமே

அன்பு சகோதரமே! அம்மா, அம்மா என்று புனித பியோ அன்னையைப் பற்றிக் கொண்டது போல் நாமும் அந்த அன்பு அம்மாவைப் பற்றிக் கொள்ளும்போது வாழ்வில் வெற்றி பெறுவோம். ஆண்டவர் வழங்கும் விடுதலை வாழ்வைப் பெற்றுக் கொள்வோம். வாழ்வைத் திட்டமிட்டு வாழுங்கள். செய்ய விரும்பும் நற்காரியங்களை அடைய வேண்டிய இலக்கையும் முடியும்என்ற நம்பிக்கையோடு செயல்படுத்துங்கள். முடியும் என்பவருக்கே முடியும். முடியாது என்பவருக்கோ முடியாது. தினமும் தவறாமல் ஜெபமாலை ஒப்புக்கொடுங்கள். அனைவரையும் அம்மா மரியாவிடம் அழைத்து வாருங்கள். அம்மா நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார்கள். வாருங்கள், நாமும் இந்தப் புதிய 2012ஆம் ஆண்டை அம்மாவிடம் அர்ப்பணித்து அவரை அன்பு செய்து வாழ்வோம். புதிய ஆண்டுஎல்லோருடைய மனதிலும் வாழ்விலும் புத்துணர்வையும் புது மகிழ்வையும் கொணரட்டும். இவ்வாண்டு நாம் ஒவ்வொருவரும் ஆச்சரியமான அற்புதமான வாய்ப்புகளையும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம். கடந்த ஆண்டை எண்ணி கவலைப்படுவதை விடுத்துப் புதிய ஆண்டை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே, ‘நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள். நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது. நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர் . ஓய்வு நாளைத் தீட்டுப் படுத்தாது கடைபிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக்கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறு பெற்றவர்.’ (ஏசா 56: 1-2) ஏசாயா இறைவாக்கினர் வழியாக பேசுகின்ற ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கி அவரின் திருமுன்னிலையில் பேறுபெற்றவர்களாய் வாழ்ந்திட இந்த ஆண்டு நம்மை அழைக்கிறது.

அம்மா மரியா இறைவனின் தாய், திருச்சபையின் தாய், நம் ஒவ்வொருவரின் தாய். அவளுக்காக நாம் மகிழ்ந்து நன்றி கூறுவோம். அன்பு சகோதரமே, இறைப்பணி ஆற்றுவதற்காக தற்பொழுது நான் ஓமன் நாட்டிற்கு வந்திருக்கிறேன். சில ஆண்டுகள் இங்கே பணிபுரிய வேண்டியிருக்கும்.ஆனாலும் புனித பியோ ஜெபமாலை இயக்க குடும்பத்திற்குத் தொடர்ந்து ஆதரவாக இருப்பேன். நீங்கள் செய்ய வேண்டியது, தொடர்ந்து தினமும் ஜெபமாலை ஒப்புக் கொடுத்து ஜெபியுங்கள். ஏராளமான நபர்களை நம் குடும்பத்தில் இணைத்திருங்கள். எனக்காகவும் இங்குள்ள மக்களுக்காகவும் ஜெபியுங்கள். நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும் இறையாசீரும்.

- ஓமனிலிருந்து அருட்தந்தை செல்வராஜ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தந்தை பியோவிடமிருந்து விண்ணகத்துக்குரிய தெய்வீக நறுமணம்

புனிதர் தந்தை பியோ அவர்கள் இருக்கும் புனித கொவாணி ரொட்டெடோ இடத்திற்கு விடுமுறையை கழிக்க துறவி மொடெஸ்டீனோ (Friar Modestino) சென்றிருந்தார். அப்பொழுது ஒரு நாள் காலை தந்தை பியோ அவர்கள் கொண்டாடும் திருப்பலிபூசைக்கு உதவி செய்ய செக்கரிஸ்சுக்கு  சென்றார் . அங்கே அவரைப் போன்ற இன்னும் மற்ற துறவிகள் யார் தந்தைக்கு பூசை உதவி செய்வது என்று தர்க்கம் செய்துக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த தந்தை அவர்கள் வாதத்தை இடைமரித்து துறவி மொடெஸ்டீனோ இன்று பூசை உதவி செய்யட்டும் என்று அவரை சுட்டிக்காட்டினார். அவ்வாறே துறவி மொடெஸ்டீனோவும் தந்தை பியோவை பின்தொடர்ந்து புனித சவேரியாரின் பீடத்துக்கு சென்று உற்சாகம் கலந்த பக்தியுடன் பூசை உதவி செய்தார். நற்கருணை மன்றாட்டின் போது தூயவர், தூயவர் என்ற தந்தை பியோவிடமிருந்து விண்ணகத்துக்குரிய தெய்வீக நறுமணம் ஆர்ப்பரிப்பின் பகுதிக்கு வந்த போது பூசை உதவி செய்த துறவி மொடெஸ்டீனோ அவர்கள் சொல்வதற்கரிய நறுமண வாசத்தை முகர்ந்தார். இந்த தெய்வீக நறுமணத்தை முதன் முதலில் தந்தை பியோவைக் காண வந்த நேரத்தில் தந்தையின் கையை முத்தி செய்யும் போது உணர்ந்தேன். அதே நறு மணம் என்று பிரமித்தார்.  துறவி மொடெஸ்டீனோ. சற்று நேரத்தில் நறுமணம் அதிகரிக்க அவருக்கு மூச்சு தினறல் ஏற்ப்பட்டது. தான் மயங்கி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மனதளவில் தந்தை பியோவிடம் தந்தையே என்னை இந்த மயக்க நிலையிலிருந்து காத்து எல்லோர் முன்னிலையிலும் மயங்கி விழாமல் காத்திடும் என்று மன்றாடினார். மன்றாடி முடிந்த உடனேயே அந்த நறுமணம் மறைந்தது. அன்று மாலை தந்தையின் அறைக்கு துறவி மொடெஸ்டீனோ சென்ற போது தந்தையிடம் தனக்கு காலையில் திருப்பலியின் போது நடந்த நிகழ்வைப் பற்றி விளக்கம் கேட்ட போது, அதற்கு தந்தை அளித்த பதில் குழந்தாய் எனக்கு இதற்கான விளக்கம் தெரியாது. எப்பொழுதெல்லாம் இறைவன் விரும்புகிறாரோ அப்பொழுதெல்லாம் இறைவன் குறுக்கிட்டு ஒருவரை தெரிவு செய்து நறுமணத்தை நுகரச் செய்வார்.
 
- ANTHONY, SINGAPORE

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இயேசுவின் ஐந்து காயம் பெற்ற நறுமணத்தவர் தந்தை பியோ

செப்டம்பர் மாதம் 1918ஆம் ஆண்டு இனிமையான காலைப் பொழுதினிலே, திருப்பலி நிறைவேற்றிய பின், புனித பியோ பாடகர் குழு அமரும் இடத்தில் அமர்ந்து வழக்கம் போல நன்றி செலுத்திக் கொண்டிருந்தார். அது 1616ஆம் ஆண்டு கட்டப்பட்ட அருளின் இராக்கினி (Our Lady of Grace) ஆலயம், தெற்கு ஜியோவான்னி ஆலயத்தின் வெளியே மிக அழகான காலைப்பொழுதாக அது இருந்தது. அந்த ஆலயத்திலே அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்த அந்தக் குருவானவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், உலகத்தை விட்டே பிரிந்து சென்ற நிலையில் இருந்தது போலக் காணப்பட்டார். அமைதியும் சாந்தமும் அந்த இடம் முழுவதுமாக நிறைந்திருந்தது. விவரிக்க இயலாத சமாதானமும் நிசப்தமும் நிலவியது. பறவையின் கீச்சொலிகளும் தொலைவிலிருந்து வந்தது போல அந்த இடத்தில் ரீங்காரமிட்டன. அந்த அமைதியைக் குலைக்காமலே அந்த இடத்தை நிரப்பியிருந்தன. அதிகாலைப்பொழுது மறைந்து சூரியன் தன் கதிர்களை விரிந்த வண்ணமாய் இருந்தான். சூரியன் நகர்ந்து உச்சியை நெருங்கும் வேளை, வெயிலின் கொடுமையைத் தாங்கி பழக்கப்பட்ட ஒரு சிலரே வெளியே நடந்து கொண்டிருந்தனர். செப்டம்பர் மாத கால சூழ்நிலை தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் அந்த இளம் குருவானர், ஆலயத்தில் முழந்தாட்படியிட்டு ஜெபித்துக்கொண்டிருந்தார். வெளியில் எப்படியிருந்தாலும் அவரைப்பற்றிய வரையில் அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துவிட்டது. பாடுபட்ட சுரூபத்தின் முன் முழந்தாட்படியிட்டு இரத்தம் சிந்திய நிலையில் தொங்கிய இயேசுவின் பாடுகளின் வேதனையைத் தியானித்துக் கொண்டிருந்தபோது, எந்தச் சத்தமும் உள்ளே நுழைய பயந்தது போன்று மிக ஆழ்ந்த அமைதி சூழ்ந்திருந்தது. ஆழ்ந்து தியானிக்க அறிந்திருந்த அவர், இந்த அனுபவத்தைப் பின்பு குறிப்பிடும்போது “ஆழ்ந்த உறக்கத்தை ஒத்திருந்தது” என்று எழுதுகிறார். இந்த முமுமையான அமைதி சூழ்ந்த இடத்திலே இதயமும் மனமும் பற்றி எரியும் அன்பால் பொதியப்பட்டது போல, குணம் பெற முடியாத காய்ச்சல் இருந்தது போல உணரமுடிந்தது. புயலுக்குப் முன் வரும் அமைதி போன்றிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் என்ன நடந்தது என்பதை எளிமையான வார்த்தைகளில் தந்தை பியோவே தந்தை பெனதெற்றோவிற்கு அந்த அனுபவத்தைப் பற்றி ஒரு மாதம் கழித்து எழுதிய வார்த்தைகளிலே இவ்வாறு குறிப்பிடுகிறார். ஒரு கேமராவைப் பிளாஷ் செய்யக்கூடிய நேரத்திற்குள்ளாக நடந்தது போல எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அது ஆகஸ்டு 5ஆம் தேதி பார்த்ததைப் போன்று மர்ம மனிதனாக காட்சியளித்ததிலிருந்து சிறிது வேறுபட்டிருந்தார். கைகளிலிருந்தும் கால்களிலிருந்தும் விலாப் பக்கத்திலிருந்தும் இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. அவரது காட்சி அச்சுறுத்துவதாக இருந்தது. அந்த நேரத்தில் நான் என்ன உணர்ந்தேன் என்பது தவிர்க்க முடியாதது, நான் இறந்து போவேன் என்று நினைத்தேன், ஆண்டவர் இடைப்பட்டு வலுப்படுத்தாவிட்டால் நான் இறந்தே போயிருப்பேன். என் இதயம் வெடித்துச் சிதறிவிடும் போன்றிருந்தது.

அந்த மனிதர் மறைந்த பிறகு எனது கரங்களும் கைகளும் விலாவிலும் குத்தப்பட்டிருந்ததை உணர முடிந்தது, அவற்றிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. புனிதர் பட்டத்திற்காக ஆதாரம் – இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. [EP.V.I, no 5.10 p. 1094]  புனித தந்தை பியோவிற்கு வெளிப்படையாகக் காணும் விதத்தில் காயங்கள் தோன்றியிருந்தன. அந்த இடத்திலே யாருமே இல்லை ப்ரௌன் கலரில் பொதியப்பட்ட உருவம் போல விழுந்த கிடந்த அவரைச் சுற்றி மீண்டும் அமைதி சூழ்ந்தது.

ஒரு நீண்ட கல்வாரி பயணம் அப்போதுதான் தொடங்கியிருந்தது.  அதோடு அவரது இறைவேண்டலுக்குப் பதிலும் வந்திருந்தது. கிறிஸ்துவின் பாடுகளோடு தன்னை இணைத்துக் கொள்ளும் ஆழ்ந்த ஏக்கம், ஒரு திருத்தூதுவர் பணியாக ஓர் அருட்பணியாளர் நிறைவேற்றும் பணியில் மாத்திரம் அல்ல, நமது கல்வாரி ஆண்டவர் உன்னதமான பலியாகக் கொடுத்தது போன்று ஒரு மறைபொருளான வழியிலே அனுபவம் பெற வேண்டும் என்ற இறைவேண்டல் நிறைவேறியிருந்தது.

இந்த வெளிப்படையான அடையாளத்தை அவர் விரும்பவில்லை. இத்ததைய உடனடியான அனுபவத்தைவிட்டு அவர் வெளியே வந்தபோது, “நான் காயத்தினால் ஏற்பட்ட வலியினால் செத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் என் ஆன்மாவில் ஏற்பட்ட குழப்பத்தால்.... மிக நல்லவரான இயேசு இந்த அருளை எனக்குத் தர முடியுமா? இந்த வெளி அடையாளம் ஏற்படுத்துகின்ற மன உளைச்சலிருந்தாவது என்னை விடுவிப்பாரா? (Ep.v.1, p.1904)  என்று தனக்கு ஏற்பட்ட அதிகப்படியான குழப்பத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த வலியையோ அல்லது காயத்தையோ மாற்ற வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. மாறாக, விவரிக்க முடியாத பெரும்பாலும் தாங்க முடியாத அவமானமாகக் கருதிய அந்த வெளிப்படையாகத் தெரிந்த அடையாளங்களை மட்டுமே அகற்ற வேண்டும் என்று விரும்பினார்.

பின்னர், மிகவும் பின்னால்தான் , எப்படியோ, அந்தத் தெய்வீக அடையாளங்களை அன்பு செய்யவும் ஆதரிக்கவும் செய்தார். மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயர்ந்த ஆற்றலின் ஊற்றாக அது இருந்தது என்பதுவும் திருத்தூது பணியான அன்பு செய்தலையும் பிறருக்காக துன்பப்படுதலையும் உணர முடிந்தது. சியன்னாவைச் சேர்ந்த புனித கேத்தரின் சொன்னது போல தந்தை பியோவும் உண்மையாக இவ்வாறு சொல்ல முடியும். “என் காயங்கள் என் உடலை வேதனைப்படுத்தாதது மட்டுமல்ல, அவை என் பாரத்தைத் தாங்கிக் கொள்ளவும் பலப்படுத்தவும் செய்கிறது. முன்பு எனக்குச் சோர்வு உண்டாக்கினவைகள் இப்போது ஊக்கமூட்டுகின்றன”. இந்நேரம் வரை அவரது காயங்கள் வெளிப்படாமல் இருந்தன, ஆனால் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. தனது ஆன்மா ஏங்கிய ஒன்றிற்காக அவரது உடல் உருமாற்றம் பெற்றது. அதுதான், அவர் மிகவும் நேசித்து அவருக்காக துன்பப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அனுபவம் அவரது அனுபவமாக மாறியது.

இத்தகைய அனுபவத்தை ஏற்படுத்திய காயம் ஏற்பட்ட அன்று ஆலயத்தின் அமைதியுடனே ஒரு வேதனை குரல் ஊடுருவியது. தந்தை லியோனி ஓடிச்சென்று தந்தை பியோ கைகளிலும் கால்களிலும் விலாவிலுமாக ஐந்து காயங்களிலிருந்தும் இரத்தம் வழியும் நிலையில் சுமந்து சென்று அவரது அறையில் கிடத்தினார். உணர்வு திரும்பியதிலிருந்து அதை இரகசியமாக வைக்க வேண்டும் என்று கெஞ்சினார். சில இரகசியங்களைக் காப்பாற்றுவது கடினம். இந்தச் செய்தியும் வெகுவாகப் பரவியது. சாலை வசதியும் தொலைபேசி வசதியும் இல்லாத நிலையிலும் அந்தப் புனிதரைப் பார்க்கவும் அவரது முன் முழந்தாட்படியிட்டு ஒப்புரவு அருட்சாதனம் பெறவும் ஏராளமான மக்கள் வந்த வண்ணமாய் இருந்தனர்.

இப்படி தனது 31 வயதில் வெளிப்படையாள காயங்களைப் பெற்றுக்கொண்ட பின் வெகுவாய்க் குழம்பிப் போனார். தன் காயங்களைப்பற்றி பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். அவருடைய ஆன்ம ஆலோசகரின் கட்டளைக்கிணங்க செப்டம்பர் 20 ஆம் நாள் நிகழ்ச்சிகள்பற்றி அக்டோபர் 22 ம் நாள் “இந்தக் காயங்களையோ வேதனையையோ நீக்கி விடும்படி அல்ல. ஆனால் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி நம்ப முடியாதஅளவிற்குத் தலைகுனியச் செய்துவிட்ட இந்த வெளிப்படையான அடையாளங்களைத் தன் கருணையால் அவர் போக்கும் வரை, என் குரலை எழுப்பி அவரிடம் கெஞ்சி மன்றாடுவதை நிறுத்த மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பியோவின் கைகளின் காயங்கள் உள்ளங்கையிலும் புறங்கையிலும் வட்ட வடிவமாகவும் முக்கால் அங்குலம் குறுக்களவு கொண்டதாகவும் இருந்தன. அவருடைய கால் பாதங்களின் காயங்களும் அதே மாதிரியானவை அவருடைய விலாப் பக்கத்துக் காயம் இரண்டே முக்கால் அங்குலம் நீளமாகவும் தலை கீழான சிலுவை வடிவமாகவும் இருந்தது.

திருச்சபை இப்படியான வெளிப்படையான அடையாளங்களை வழக்கமாக ஏற்றுக் கொள்வதில்லை. பெரும்பாலும் மனக்கோளாறு என்று ஒதுக்கிவிடுவது உண்டு. போக்கியா மாகாண கப்புச்சின் சபைத்தலைவர் காயத்தைப் புகைப்படம் எடுத்து வத்திக்கானுக்கு அனுப்பிவிட்டார். பார்லெட்டா நகரிலிருந்து டாக்டர் லூ. ஜி. ரொமனல்லி வந்து பரிசோதித்துப் பார்த்தார். தொடர்ந்து வந்த பல ஆண்டுகளுக்கு இந்த ஆராய்ச்சி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. காயங்களின் வேதனைகளோடு காயங்களைக் குணப்படுத்த எடுக்கப்பட்ட பலவகை பரிசோதனைகளும் வேதனையை அதிகப்படுத்தின. எதுவுமே காயங்களை மாற்றவில்லை. காயங்கள் மூடவும் இல்லை. இரத்தம் சிந்துவது நிற்கவுமில்லை. தைல வகைகளை வைத்துக் காயங்களில் பூசினாலும், கட்டுப் போட்டாலும் உல்லன் காலுறைகளும் விரல்களுக்குத் தனியாகவும் கைகளுக்குத் தனியாகவும் கையுறைகள் அணிந்த போதிலும் காயங்களில் நோய் கிருமிகள் பரவவில்லை. உரோமைச் சேர்ந்த
டாக்டர் பெங்டா மருத்துவப் பரிசோதனைகள் செய்தபின் விவரங்களை ஏராளமாக எழுதி மருத்துவ அறிக்கையாக வெளிப்யிட்டார். தொடர்ந்து பரிசோதனையின் போது காசநோயின் பாதிப்பு ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அவர் அந்தக் காயங்களைப் பெற்றபோதுதான் அந்த நோயிலிருந்து குணம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாக அதிகாரிகள் இனிமேல் பரிசோதிக்க வேண்டாம் என்று விட்டு விட்டார்கள். திருப்பலி ஆடை அணியும்போது கையை மடக்கக்கூட முடியாது. நற்கருணை கொடுத்துவிட்டு வரும்போது கால்காயங்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் பின்னோக்கி நடந்து வருவது உண்டு. ஆயினும் வாய் திறந்து தன் வேதனைப் பற்றி ஒரு வார்த்தைகூட குறை கூறுவது இல்லை. ஒருநாள் சிந்தனையில்லாமல் ஒருவர், “காயங்கள் வலிக்குமா“ என்று கேட்டபோது “ஆண்டவர் இவற்றை அலங்காரத்திற்காகவா தந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்” என்று பதிலுக்குக் கேட்டார்.

மக்கள் மனநிலையை அறிந்த திருச்சபை தந்தை பியோவை அதிகம் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அவரது ஒரே போர்க்களமாக ஒப்புரவு அருட்சாதனத் தொட்டியைப் பயன்படுத்தி வந்தார். அவர் ஆணைக்கு நூறு சதவீதம் கீழ்ப்படிந்ததால் ஏராளமான ஆன்மாக்களின் விதிமுறைகள் அவருக்கு உதவின என்றே சொல்லலாம்.

- பேராசிரியை திருமதி. இம்மாகுலேட் பிலிப்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மரியே வாழ்க! ஜெபமாலையே ஜெயம்!


என் பெயர் சிலவேஸ்டர் டையாஸ். என் மனைவியின் பெயர் கிளாரா. நாங்கள் இராமநாதபுரம் ஜெபமாலை மாதாவின் பங்கைச் சார்ந்தவர்கள். என் சித்தப்பா ஒருவர் கயத்தூரில் பங்குத் தந்தையாக இருந்தார். அவர்கள் எங்களுக்குப் புனித பியோவின் படம் ஒன்றைக் கொடுத்தார். பயபக்தியுடன் படத்தை வைத்து ஜெபித்து வந்தோம். 4வது குழந்தை பையனாகப் பிறக்க வேண்டும் என்றும் அந்தக் குழதைக்குப் பியோ என்று பெயரிடுவதாகவும் பொருத்தனை செடீநுது ஜெபமாலை நாள்தோறும் சொல்லி ஜெபித்து வந்தோம். எங்கள் வேண்டுதல் கிடைக்கப்பெறவே மகனுக்குப் பியோ பேசில் டையாஸ் என்னும் பெயரிட்டு அழைத்தோம் இப்போது என் மகனுக்கு 35 வயதாகிறது. நாங்கள் அனைவரும் தந்தை பியோவின் ஆசிவாதத்தை எண்ணி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம்.
 
- சில்வேஸ்டர் டையாஸ் கிளாரா,
இராமநாதபுரம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pio Kural Januray 2012



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS