என் அருமையானவர்களே


புத்தாண்டு புலர்ந்தது
புதுயுகம் மலர்ந்தது
புத்தொளி வீசிட
புதுமையாய் வாழ்ந்திட
புறப்படு நல்மனமே

வார்த்தையில் இனிமையும்
வாழ்க்கையில் நேர்மையும்
வசந்தமாய் வீசிட
வரலாறு படைத்திட
வாழ்த்துகள் நல்மனமே

உன்னிலும் நேர்மறை
பிறரிலும் நேர்மறை
அவனியில் நேர்மறை
அனைத்திலும் நேர்மறை
கண்டிடு நல்மனமே

கடவுளின் கருணையால்
கடந்தவன் அன்பால்
காப்பவன் அருளால்
கனிந்தவன் பண்பால்
நிறைந்திடு நல்மனமே

அன்பு சகோதரமே! அம்மா, அம்மா என்று புனித பியோ அன்னையைப் பற்றிக் கொண்டது போல் நாமும் அந்த அன்பு அம்மாவைப் பற்றிக் கொள்ளும்போது வாழ்வில் வெற்றி பெறுவோம். ஆண்டவர் வழங்கும் விடுதலை வாழ்வைப் பெற்றுக் கொள்வோம். வாழ்வைத் திட்டமிட்டு வாழுங்கள். செய்ய விரும்பும் நற்காரியங்களை அடைய வேண்டிய இலக்கையும் முடியும்என்ற நம்பிக்கையோடு செயல்படுத்துங்கள். முடியும் என்பவருக்கே முடியும். முடியாது என்பவருக்கோ முடியாது. தினமும் தவறாமல் ஜெபமாலை ஒப்புக்கொடுங்கள். அனைவரையும் அம்மா மரியாவிடம் அழைத்து வாருங்கள். அம்மா நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார்கள். வாருங்கள், நாமும் இந்தப் புதிய 2012ஆம் ஆண்டை அம்மாவிடம் அர்ப்பணித்து அவரை அன்பு செய்து வாழ்வோம். புதிய ஆண்டுஎல்லோருடைய மனதிலும் வாழ்விலும் புத்துணர்வையும் புது மகிழ்வையும் கொணரட்டும். இவ்வாண்டு நாம் ஒவ்வொருவரும் ஆச்சரியமான அற்புதமான வாய்ப்புகளையும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம். கடந்த ஆண்டை எண்ணி கவலைப்படுவதை விடுத்துப் புதிய ஆண்டை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே, ‘நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள். நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது. நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர் . ஓய்வு நாளைத் தீட்டுப் படுத்தாது கடைபிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக்கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறு பெற்றவர்.’ (ஏசா 56: 1-2) ஏசாயா இறைவாக்கினர் வழியாக பேசுகின்ற ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கி அவரின் திருமுன்னிலையில் பேறுபெற்றவர்களாய் வாழ்ந்திட இந்த ஆண்டு நம்மை அழைக்கிறது.

அம்மா மரியா இறைவனின் தாய், திருச்சபையின் தாய், நம் ஒவ்வொருவரின் தாய். அவளுக்காக நாம் மகிழ்ந்து நன்றி கூறுவோம். அன்பு சகோதரமே, இறைப்பணி ஆற்றுவதற்காக தற்பொழுது நான் ஓமன் நாட்டிற்கு வந்திருக்கிறேன். சில ஆண்டுகள் இங்கே பணிபுரிய வேண்டியிருக்கும்.ஆனாலும் புனித பியோ ஜெபமாலை இயக்க குடும்பத்திற்குத் தொடர்ந்து ஆதரவாக இருப்பேன். நீங்கள் செய்ய வேண்டியது, தொடர்ந்து தினமும் ஜெபமாலை ஒப்புக் கொடுத்து ஜெபியுங்கள். ஏராளமான நபர்களை நம் குடும்பத்தில் இணைத்திருங்கள். எனக்காகவும் இங்குள்ள மக்களுக்காகவும் ஜெபியுங்கள். நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும் இறையாசீரும்.

- ஓமனிலிருந்து அருட்தந்தை செல்வராஜ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக