எனது விசுவாச அனுபவம்

1960ல் எனது திருமணத்திற்குப் பின் இலங்கை வாழ் எனது சித்தி லூர்து செபமாலை முறாயிஸ் அவர்கள் வழியாக பியோ சுவாமி அவர்களின் வரலாறு அறிய வந்தேன். எனக்குத் தலைகுழந்தை பிறந்து இறந்த சோகமான நேரம் அது. 5 காயங்கள் பெற்றவர்கள், அவர் நம் மன்றாட்டை இறைவனிடம் கேட்டுப் பெற்றுத் தருவார், என்ற அசையாத நம்பிக்கையை என் உள்ளத்தில் பதிய வைத்தவர்கள் என் சித்தி, அவரின் ஆன்மா இறைவனில் அமைதியடையட்டும்.

1962ல் என் மாமா திடீரென்று இறந்த பின்பு சுவாமியவர்களுக்கு அவருடைய ஆன்மா சாந்தியடைய பலிபூசை ஒப்புக் கொடுக்குமாறு மடல் ஒன்று எழுதியிருந்தேன். வெகுநாட்களாக பதில் எதுவும் கிட்டவில்லை. ஒரு மாதம் சென்று ஒரு கனவு வந்தது. அதாவது கருப்பு ஆயத்தம் அணிந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கிறமாதிரி பியோ சுவாமியவர்களைப் பீடத்தில் கண்டேன். ஒருவாரம் சென்று சுவாமியவர்கள் நீங்கள் விரும்பியபடி மாமாவுக்காக திருப்பலி ஒப்புக் கொடுத்தார்கள் என்று அவரது கையொப்பத்துடன் அவரது உதவியாளர் எனக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தார். எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என மன்றாடினேன்.

1967ல் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்குப் பியோ என்னும் பெயரையே சூட்டினேன். குருவானவர் ஆக வேண்டும் எனவும் மன்றாடினேன்.

ஆனால் அவர் திருமணம் செய்து கொண்டான், பியோவின் ஆசியில் பிள்ளைகளும் பெற்றுக் கொண்டான். பின்னர் அசிசிரியர் சபையில் சேர்ந்து ஆபிஸ் வேலை நேரம் போக மற்ற நாட்களில் செபத்திலும், தவத்திலும் இயேசுவை அறியாத மக்களை அணுகி அவர்களை இறைவனுக்குள் கொண்டு வருவதிலும், இயேசுவில் மிகுந்த ஈடுபாடும் கொண்டு இப்போது வாழ்ந்து வாழ்கின்றான். எல்லா மகிமையும் புகழும் இறைவனுக்கே!

-பிரான்சிஸ்கா ராயன்,SFO, Chennai.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக