தந்தை பியோ அன்னை மரியை அளவு கடந்த அன்பு செய்தார். அவர் எப்பொழுதும் தொடர்ந்து ஜெபமாலையை ஜெபித்துக் கொண்டிருப்பார். உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக அவர் சிறப்பானதொரு பணி செய்தார். அவர்களுக்காக ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டுமென தூண்டுவார். ‘‘நமது ஜெபத்தினால் நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை காலி செய்ய வேண்டும்” என்று சொல்வார். அவருடைய ஆன்மீக குழந்தைகளுக்கு அவர் விட்டு செல்லும் சொத்து என்ன என கேட்டபொழுது, தந்தை பியோவின் பதில் ‘‘குழந்தாய், ஜெபமாலை தான்” என்பார். ஆம், தந்தை பியோ தன் ஆன்மீக குழந்தைகளுக்கு விட்டுச் சென்ற தனிப்பெறும் சொத்து ஜெபமாலைதான். ஜெபமாலையை பணம் கொடுத்து வாங்கலாம் விற்கலாம். ஆனால் நாம் ஜெபிக்கின்ற ஜெபமாலையோ விலைமதிக்க முடியாதது. பார்ப்பதற்கு சாதாரணமானது. ஜெபித்து பழகியவர்களுக்கு அற்புதமானது, ஆனந்தமானது. இவ்வுலகில் உள்ள விலையுயர்ந்த முத்துக்களை விட மிக உயர்ந்தது. அதற்கு ஈடு இணை வேறொன்றுமில்லை. ஜெபிக்க, தியானிக்க எளிமையானது. கடுகளவு நம்பிக்கையுள்ளவர்களுக்கும், மலையளவு இடர்களையும் தகர்த்தெரியும் ஆற்றல் உண்டு. 20 நிமிடம் ஆழ்ந்து தியானித்து ஆண்டவரின் மீட்பு வரலாற்றில் இணைந்து இருந்தாலே மனதில் அமைதியும் பக்குவமும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கிட்டும். இவ்வுலகின் பகைவனையும் வெல்லலாம். தந்தை பியோவே இதற்கு ஒரு சிறந்த மாதிரி ஆவார்.
அன்பானவர்களே, கோடைகாலம் வந்து விட்டது. கோடை மலர்கள் அழகாக பூத்து குலுங்கி சிரிக்க தொடங்கிவிட்டது. மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு முகத்தில் புன்னகைப் பூக்க அன்னையை போற்றி ஜெபமாலையை கையில் ஏந்தி ஜெபிக்கலாமே! அன்னை மரியை போற்றி மகிழும் கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசுவுக்குள் வாழ்கிறார்கள். இயேசுவை சுமந்த தாய் நம்மையும் இயேசுவிடத்தில சுமந்து செல்கிறாள். பிள்ளையை அனாதையாக்கி செல்லும் தாயல்ல. எந்நாளும் உடனிருந்து இயேசுவிடம் அழைத்துச் செல்லும் தாய்தான் மரியா. உயிர்த்த இயேசு அப்பத்தைப் பிட்டபோது எம்மாவுஸ் சீடர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள். அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனம் பெற்று நற்கருணை ஆண்டவரில் ஒன்றித்திருப்பது அன்னைக்கு நாம் கொடுக்கும் மாபெரும் மகிழ்ச்சி ஆகும். வருகிற மே மாதம் 25 ஆம் நாள் தந்தை பியோவுக்கு 126 வது பிறந்த நாள். இந்த உலகிலே அவரை அவதரிக்க செய்து மிகவும் அருமை யான கையில் பயன்படுத்திய இறைவனை புகழ்வோம். ஜூன் மாதம் 16 ஆம் நாள் தந்தை பியோ புனிதராக உயர்த்தப்பட்ட 11 வது ஆண்டு. புனிதரின் வழியாக இறைவன் புரியும் நற்செயல்களுக்கு ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்வோம். அன்றைய தினம் உலகில் உள்ள அனைத்து குருக்களுக்காகவும் ஜெபியுங்கள்.
புதிதாக நமக்கு கிடைத்துள்ள 266 ஆவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக தினந்தோறும் ஜெபிப்போம். நம் ஆன்மீக குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரையும் அன்னையிடம் ஒப்படைத்து ஜெபிப்போம் பலப்படுத்துவோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பான ஆசீர். மரியே வாழ்க. !
அருட்தந்தை அ. செல்வராஜ் க.ச
0 கருத்துகள்:
கருத்துரையிடுக