மரியன்னையின் தூய இதயம் தரும் செய்திகள்


மரியன்னையின் தூய இதயமும், இயேசுவின் திரு இதயமும் ஒன்றே. இயேசுவின் இதயம் அனுபவிக்கும் உணர்வுகளையும், வேதனைகளையும் மரியன்னையின் இதயமும் அனுபவித்தது என்பது முற்றுலும் உண்மையே! பாத்திமா செய்தியின் கருப்பொருளும், மிக முக்கியமான பகுதியும் எதுவென்றால், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் மரியன்னையின் மாசற்ற இதய பக்தி, இயேசுவின் திரு இதய பக்தியோடு இணைக்கப்பட்டது. இயேசுவினுடையவும், மரியன்னையினுடையவும் தூய இதயங்கள் பிரிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. இணைந்திருக்கின்ற அவர்களின் தூய இதயங்களின் ஆட்சியும், உலகார்ந்த வெற்றியும்தான் விண்ணகத் தந்தையின் மாபெரும் திட்டமாகும்.பாத்திமாவில் அன்னைகூறும் வியத்தகு செய்திகள் நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டவை.

ஜூன், 13, 1917 புதன்கிழமை காட்சியில் மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா காண்கிறார்கள். ஜெசிந்தா, பிரான்ஸிஸ் மற்றும் மக்களோடு ஜெபமாலை செபித்தபின் லூசியாவிடம், ‘நீ இன்னும் கொஞ்சகாலம் இங்கு இருக்க வேண்டும். என்னை மக்கள் அறிந்து நேசிக்கும் படி உன்னை பயன்படுத்த இயேசு விரும்புகிறார். உலகில் என் மாசற்ற இதய பக்தியை ஏற்படுத்தி,இப்பக்தியைக் கைக்கொள்ளும் அனைவருக்கும் நான் மீட்பை வாக்களிக்கிறேன். என் மாசற்ற இதயம் உன் அடைக்கலமாகவும், கடவுளிடம் உன்னை அழைத்து செல்லும் வழியாகவும் இருக்கும்.’ என்று அன்னை கூறினார்கள். அப்போது பேரொளியின் பிரதிபலிப்பு அவர்கள் மேல் பாய்ந்தது. மாதாவின் வலது உள்ளங்கையில் முட்களால் குத்தித் துளைக்கப்படுவதாகத் தோன்றிய ஓர் இதயம் இருந்தது. மனுக்குலத்தின பாவங்களால் நிந்திக்கப்பட்டு, நம்மிடம் பரிகாரம் கேட்கிற மரியன்னையின் தூய இதயம் தான் அது.

ஜூலை 13ல் அன்னை,’ஏதாவது சிறுசிறு ஒறுத்தல்கள் செய்யுபோது, ‘ஓ! இயேசுவே’ உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், மரியன்னையின் தூய இதயத்திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், இதைச் செய்கிறேன் என்று சொல்லும்படிக் கூறினார்கள். 
ரஷ்யாவைஎன்மாசற்றஇதயத்திற்குஒப்புக்கொடுக்கவும்,கேட்டுக் கொண்டார்கள். பலவிதமான துன்பம்,சோதனைகள், வேதகலாபனைகள் ஏற்பட்டாலும் இறுதியில் என் மாசற்ற இதயம் வெற்றிபெறும்.’ என்றுக்கூறினார்கள். நம்பிக்கை நிரம்பிய மென்மையான வார்த்தைகளின் வழியாக தமது மாசற்ற இதயத்திற்கான வழியைத் திறந்து வைத்து, மாசற்ற இதய பக்தியை ஏற்படுத்தி, பாவிகளின் மீட்பிற்காக மரியன்னையின் தூய இதயத்திடம் தஞ்சமடையவும் கேட்டுக் கொண்டார்கள். ம்ரியன்னையின் தூய இதயத்திற்கு ஆறுதலளிக்க முதல் சனிக்கிழமை பக்தியை அனுசரிப்பவர்களுக்கு விண்ணகத் தந்தை மீட்பை வாக்களித்துரைக்கிறார். அவர்கள் கடவுளின் மகிமையாசனத்தை அலங்கரிக்க வைக்கப்படும் மலர்களைப்போல நேசிக்கப்படுவார்கள்.

முதல் சனிக்கிழமைகள் செய்ய வேண்டியவைகள்
1.ஒப்புரவு அருட்சாதனம் 2. பரிகார நன்மை உட்கொள்ளுதல்
3. 53 மணி ஜெபமாலை ஜெபிப்பது
4. ஜெபமாலை இரகசியங்களைத் தியானித்தல்

அருட்திரு ஸ்தெபனோ கோபியிடம் நம் அன்னை பேசும்போது, தன் மாசற்ற இதயத்தின் ஒளி, திருத்தந்தை, குருக்களை ஆசீர்வதிப்பதையும், அடைக்கலமாகவும, பாதுகாப்பாகவும் தன் இதயம் எபபோதும் இருப்பதாகவும், தங்களையே அர்ப்பணிக்கவும் கூறுகிறார்கள். மரியன்னையின் தூய இதயத்துக்கு தன்னை முழுவதும் ஒப்புக் கொடுக்கும் ஜெபம் (புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்)

ஓ! அமலோற்பவத்தாயே! இதோ! பாவியாகிய (பெயர்) ஞானஸ்நானத்தில் கொடுத்த வார்த்தைப் பாட்டை உமது கரங்களில் புதுப்பித்து உறுதிப்படுத்துகிறறேன். பசாசையும், அதன் கிரிகைகளையும், ஆரவாரங்களையும் நான் விட்டு விடுகிறேன். நித்திய ஞானமாகிய இயேசுக் கிறிஸ்துவுக்கு என்னை முழுவதும் கையளித்து என் ஜீவிய கால முழுவதும் எனக்கு நேரிடும் துன்பங்களையும் அவருடைய பாடுகளோடு ஒன்றித்து முன்னைவிட இன்னும் அவருக்கு அதிக பிரமாணிக்கமாய் இருப்பதாக வாக்களிக்கிறேன். சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும், ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக என் சரீரத்தையும், ஆத்துமத்தையும், என் எல்லாவற்றையும், என் உள்ளிந்திரியங்களையும், ஐம்புலன்களையும், என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்கிரிகைகளையும், பலன்களையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். என்னையும், எனக்குச் சொந்தமான யாவற்றையும் இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிகத் தோத்திரத்திற்காக உமது பிரியம்படி நீரே முழு உரிமையுடன் ஆண்டு நடத்த கையளிக்கிறேன். ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக