Infant Jesus Friary,
W-3/8K, Mariamman Koil St,
230,Vallam, Chengalpat,
Kanchepuram Dt-603003
Cell : 95971 66607
தூய வாழ்வுக்கு
வழிகாட்டும் செபமாலை!
புனித தந்தை பியோவில் அருமையான ஆன்மீக பிள்ளைகளே!, இயேசு கிறிஸ்துவிலும் அன்னை மரியாவிலும் உங்களுக்கு எனது
அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்! நலமோடு இருக்கின்றீர்களா? கடந்த மாதம் நம் அன்னையின் விழாவையும் தந்தை பியோவின்
விழாவையும் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நானும் நமது இயக்கப்
பிள்ளைகளோடு திருவையாறு பங்கில் மகிழ்ச்சியோடு கொண்டாடினோம். அது ஒரு அற்புதமான
மகிழ்ச்சியின் நாளாக இருந்தது. கடவுளுக்கு நன்றி. தந்தை பியோ அழைத்தால் நீங்களும்
அடுத்த ஆண்டு வருவீர்கள். சந்திப்போம். இங்கே நம்மோடு ஒருவர் பேசுகிறார், கேட்போமா?
‘‘என் வாழ்வை மோசமாக மாற்றிக் கொண்டிருந்த
குடிப்பிரச்சனையிலிருந்து மாற்றம் வேண்டி, ஒருநாள் இரவில்
வேலையிலிருந்து திரும்பி வந்த பிறகு செபமாலை சொல்லிக் கொண்டிருந்தேன். நான்
திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையோடு இருப்பவன். எனது குடிப்பழக்கத்தை விடவில்லை
என்றால் எனது எதிர்காலம் குடியில் நாசமாகிவிடும் என்று உணர்ந்தேன். கவலையோடு
இருந்த நான் குடிப்பழக்கத்திலிருந்து மீளமுடிவெடுத்து செபமாலை செபித்துக் கொண்டே
தந்தை பியோவின் உதவியைக் கேட்டேன். உடனே வர்ணிக்க முடியாத நறுமணம் அங்கு பரவியதை
உணர்ந்தேன். அந்த மகிழ்ச்சியான இனிமை மிகுந்த நறுமணம் என்னை மூடி எனக்குள்ளே ஆழமான
பேரமைதியையும் மனதிருப்தியையும் ஏற்படுத்தியது. உடனே அது மறைந்துபோய் விட்டது.
சிறிது நேரத்தில் வீட்டை அடைந்ததும் வழக்கம்போல அங்குத் தூங்கிக் கொண்டிருக்கும்
எனது குழந்தையைப் பார்க்க சென்றேன். எனது மகனின் அறையில் நுழைந்ததும் மீண்டும் அந்த நறுமணம் அறைக்குள் பரவியது.
பின்னர் மறைந்துபோனது. எனது குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கு எனக்கு உதவும்படி தந்தை
பியோவின் உதவியை நாடியது என் நினைவிற்கு வந்தது. மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால்
அந்த இரவிலிருந்து இதுவரை 20 வருடத்திற்கு
மேலாக எந்த ரூபத்திலும் நான் மதுவை விரும்பியதே இல்லை. அதன் பிறகு என் ஜெபம்
கேட்கப்பட்டதற்கான பதி லாக தந்தை பியோ நறுமணத்தை அடையாளமாக பயன்படுத்தினார் என்பதை
தெரிந்துகொண்டேன்.’’ (பெயர் இரகசியமாக
வைக்கப்பட்டுள்ளது)
எனது அருமையானவர்களே!, இந்த மனிதர் செபமாலை செபிக்கும் பழக்கம் உள்ளவராக
இருந்திருந்திருக்கிறார். செபமாலை செபிப்பவர் செபமாலை செபிப்பார், அல்லது அதை விடுத்து பாவத்தில் விழுவார். இதில் ஏதாவது
ஒன்றுதான் நடைபெறும். இரண்டும் சேர்ந்து நடைபெறாது. செபமாலை செபிக்கிறவர்கள் அன்னை
மரியாவின் உதவியை மட்டுமல்ல மற்ற
புனிதர்களின் உதவியையும் எளிதாகப் பெற்றுவிடலாம். அனைத்து புனிதர்களும்
அன்னை மரியாவை அதிகமாக அன்பு செய்தவர்கள். தந்தை பியோ அன்னை மரியாவை விடாமல்
பற்றிக் கொண்டிருந்தவர். ஆகவே மேற்கூறப்பட்ட புதுமையில் வரும் மனிதர் அழைத்தவுடனே
பியோ தாமதமின்றி உதவி செய்ததை அறிகிறோம். அதன்பின் அந்தமனிதர் பாவத்தை விடுத்து
தொடர்ந்து செபித்துக் கொண்டிருப்பவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே
செபமாலை செபிக்கும்போது புனித வாழ்வை நாம் தொடங்கலாம். செபமாலை செபிப்போருக்கு
என்னென்ன நிகழ்கிறது என தெரியுமா?
1. பாவ சூழலிலிருந்து விடுதலைதரும் செபமாலை
பாவம் செய்வதற்கான சூழல் அகற்றப்படுமானால் பாவத்திற்கான வழி
தடைபட்டுவிடும். செபமாலை தினம்தோறும் செபிக்கும்போது பாவ சூழல்கள் அகன்றுவிடும். ‘‘பாவ நிழலே அணுகா பாதுகாத்தான் உனையே பரமன்‘‘ என்று அன்னை மரியை நோக்கிப் பாடுகிறோம். அந்த அன்னை
பரமனுக்குத் தாயானார். தாய் தன் பிள்ளைக்குத் தீமையேதும் தீண்டாமல் காப்பதுபோல்
அன்னை மரியா செபமாலை செபிக்கும் பிள்ளைகளுக்கு பாவ சூழல் ஏற்படாமல்
தடுத்துவிடுவார் என்பது உறுதி. அம்மா அம்மா என்றும் அருள் நிறை மரியே என்றும்
அன்னை மரியை அழைத்த வண்ணம் இருந்த தந்தை பியோ பாவ சூழலிலிருந்து காக்கப்பட்டவர்
என்பதற்கு அவரது தூய வாழ்வே சாட்சி. எனவே பாவ சூழலிலிருந்து விடுபட செபமாலையை
கையில் ஏந்தி செபிக்கத் தொடங்குங்கள்.
2. சாத்தானை வெல்லும் செபமாலை
ஒரு சிலர் சொல்வார்கள், ‘‘ ஃபாதர் செபிக்கத் தொடங்கிய பிறகு தான் எனக்கு பிரச்சனை
அதிகரித்துவிட்டது. எனது கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது என்று...’’
உண்மையாக செபிக்கிறவர்களை சுற்றி சுற்றி வருவான் சாத்தான்.
ஆன்மீக காரியங்களில் முன்னேற முயற்சிக்கிறவர்களை விழத்தாட்டிப் பார்ப்பான் அவன்.
அவர்களது முயற்சியிலிருந்து அவர்களை பின் வாங்க வைப்பான்.
சாத்தானுக்கு செவிமடுத்து செபத்தை கைவிட்டால் தோல்வி,
பிரச்சனைகளைக் கண்டாலும் மனந்தளராமல் தொடர்ந்து செபமாலை
செபித்தால் வெற்றி. ஏசுவையே சோதித்தவன் சாத்தான். சாத்தானின் சதி வேலைகளை
முறியடித்து மீட்புத்திட்டத்திற்கு உடன் பணியாளாய் இருந்தாள் அன்னை மரியாள் (தொ.
நூ 3 : 15) தந்தை பியோவுக்கு செபமாலை
சாத்தானை வெல்லும் ஆயுதமாக இருந்தது. ‘‘சாத்தான்
விரட்டப்படுவதற்கும் ஒருவர் தன்னை பாவத்திலிருந்து காத்துக் கொள்வதற்கும் செபமாலை
ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம்‘‘ என்கிறார் பாப்பு
11ம் பயஸ். ஆகவே செபமாலை செபிக்கும் ஒருவர்
சாத்தானைக் குறித்தோ தீய சக்திகளைக் குறித்தோ அஞ்சத் தேவையில்லை..செபமாலை என்னும்
ஆயுதம் சாத்தானை ஓட ஓட விரட்டுகின்ற ஆயுதம். மறவாமல் கையிலேந்தி செபமாலை
சொல்லுங்கள். சாத்தானை வெல்லுங்கள்.
3. இயேசுவின் பிரசன்னத்தில் நிலைநிறுத்தும் செபமாலை
செபமாலை ஆன்மீகத்தில் ஒருவர் பாவத்திலிருந்து விடுபடுகின்ற
போதும் சாத்தானை வெல்லுகின்ற ஆன்மீக ஆற்றல் பெருகுகின்றபோதும் அவர் இயேசுவின்
பிரசன்னத்திற்குள் நிலைப்பெறுகிறார். செபமாலை செபிக்கும் ஒருவர் அன்னை மரியாவின்
அடைக்கலத்திலே வாழ்கிறார். அவரது வழிகாட்டுதலில் வாழ்கிறார். இயேசுவை கருவில்
சுமந்த தாய் மரியா வோடு நாம் இருக்கும்போது இயேசுவின் பிரசன்னத்தில் நாம்
இருக்கிறோம். ‘‘அவர் உங்களுக்குச்
சொல்வதெல்லாம் செய்யுங்கள்...’’ (யோவா 2 :
5) என்ற அன்னையின் சொல்லைக் கேட்டு நடக்கும்பொழுது நாம்
இயேசுவின் வார்த்தைகளை செயல்படுத்துவோம். இயேசுவின் பிரசன்னம் நம்மை நிரப்பும்.
அவருக்கும் நமக்கும் உள்ள பிiணைப்பு
உறுதியாகும். ‘‘நீங்கள் என்னுள்ளும் என்
வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம்
நடக்கும்‘‘ (யோவான் 15 : 7 ) என்ற இயேசுவின் வாக்குறுதி நம் வாழ்வில் நடந்தேறும். நாம்
அவரது பிரசன்னத்தில் நிலைபெறுவோம். ஜெபமாலை ஜெபிக்கும்போது இயேசுவின் பிரசன்னம்
நம்மோடு.
4. நலம் தரும் செபமாலை
இறைப்பிரசன்னத்தில் நிலைபெறும் ஒருவர் செபமாலை பக்தியில்
ஆழமான ஆன்மீகத்தைக் காண்பார். தந்தை பியோ இறைபிரசன்னத்தில் ஆழ்ந்திருந்ததனால் ஆன்ம
நலம் பெற்ற புனிதரானார். ஆன்மா எல்லா வித கறைகளிலிருந்து விடுபடுகிற பொழுது மனமும்
உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆன்மா அழுக்காகி சாத்தானுக்கு அடிமையாகிப் போனால்
உலகமே தன்னைப் புகழ வேண்டும் என எதிர்பார்க்கும். கடவுள் பயம் இல்லாமல் அவரையும்
அவரது செயல்களையும் எதிர்க்கும். பண்பும், பணிவும், தாழ்ச்சியும் போய் தற்புகழ்ச்சி மட்டுமே மேலோங்கி நிற்கும்.
தொடர்ந்து தினமும் செபமாலை செபிக்கும்போது ஆன்மா, மனம், உடல் அனைத்தும்
நலம்பெறும். பிறரை குணமாக்கும் ஆற்றலையும் பெறுவர். ஆம் செபமாலை அனைத்து
நலன்களையும் உறுதி செய்யும் அற்புத செபம்.
5. அமைதியை விதைக்கும் செபமாலை
உலக அமைதிக்காக தினமும் செபமாலை செபிக்கும்படி அன்னை மரியா
பாத்திமாவில் ஆடு மேய்க்கும் குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டார். அமைதியின் அரசர்
இயேசுவின் தாய் அந்த அரசரின் பிரதிநிதியாக உலகம் சமாதானத்தை பெற வேண்டுமென
ஆசிக்கிறார். உள்ளத்திலும் இல்லத்திலும் உலகத்திலும் உண்மையான அமைதி ஏற்பட
வேண்டுமென்றால் நம்பிக்கையோடு செபமாலை செபித்தால் போதும். நிறை அமைதி நம்மில்
குடிகொள்ளும். கேட்கின்றபோது பெற்றுக் கொள்கிறோம் என்ற மனநிலையோடு செபித்தல்
வேண்டும் ‘‘செபமாலை சொல்வதற்கு வெட்கப்படாதீர்கள்.
ஏனென்றால் இது குடும்பத்தில் உள்ளவர்களிடையே குடும்ப பிணைப்பை மீண்டும்
மீண்டும் தூண்டி பலப்படுத்துகிறது’’
என்கிறார் புனித 2ம் ஜாண் பால்.
அருள் நிறை மரியே என்ற வாழ்த்து அமைதியை கொணர்ந்த வாழ்த்து. மாலைதோறும் செபமாலை
சொல்லும் குடும்பம் எவ்வளவு அழகான குடும்பம் என்கிறார் புனித 2ம் ஜாண்பால். அமைதியை ஏற்படுத்த அழிவு ஆயுதங்களை ஏந்தி
போராடுகிறார்கள். பலன் இரத்தம் சிந்தல், காயப்பட்ட உலகம்,
உயிர் சேதம், பொருள்சேதம்
போன்ற அழிவுதான் முடிவாகிறது. அமைதியல்ல. ஒருவர் அமைதி பெற மற்றொருவரை
பலியாக்குவது அமைதியாகாது. உலகில் ஒவ்வொருவரும் செபமாலை என்னும் ஆயுதத்தை
ஏந்தினால் உலகமே அன்பு, மகிழ்ச்சி, அமைதி என்ற சிங்கார வனத்தைக் காண முடியும்.
‘‘உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள்
நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள்.’’ (1 பேது 1 : 15)
என்ற புனித பேதுருவின் அழைப்புக்கு ஏற்ப நாம் மாசற்ற தூய
வாழ்வு வாழ செபமாலை கைகொடுக்கும் ஊன்றுகோலாகும். தூயவரை பெற்றெடுக்க அமல உற்பவியான
கன்னிமரியா எவ்வளவு புனிதத்தின் சிகரமாக உள்ளார். தூயவராம் இயேசுவின் பிறப்பும்
எவ்வளவு தூய்மையான புனித நிகழ்வு!.. இவ்விரு விழாக்களையும் வரும் திசம்பர்
மாதத்திலே கொண்டாடப் போகிறோம். நமது
வாழ்வு எவ்வளவு தூய்மையாக உள்ளதோ அவ்வளவு மகிழ்ச்சியும் ஆசியும் நிறைந்த
விழாக்களாக அவைகள் அமையும்.
செபமாலையை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். அன்னைக்கு
மிகவும் நன்றி நிறைந்தவர்களாய் இருங்கள். காரணம் இயேசுவை நமக்குக் கொடுத்தவர்
அவர்தான். என்கிறார் தந்தை பியோ. செபமாலையை நன்றாக செபிக்கும்போது அது
இயேசுவுக்கும் மரியாவுக்கும் அதிகமான மகிமையைக் கொடுக்கிறது. அது செபங்களையும் விட மதிப்பு மிகுந்தது என்கிறார் புனித லூயிஸ் டி மான்ஃபோர்ட். செபமாலை
முழுமையான நற்செய்தியின் சுருக்கம் என்கிறார் பாப்பு 12ம் பயஸ்.
ஆகவே செபமாலை நம்மை புனித வாழ்வுக்கு இட்டுச் செல்லும்
சிறந்த செபமாக இருக்கிறது. இயேசுவை அடைய நம்மை தூய்மையாக்கி பலப்படுத்தும்
மாலைதான் செபமாலை. அது கழுத்தில் அணிந்து கொள்ளும் மாலை அல்ல. கரங்களில் ஏந்தி
அருள் நிறைமரியை வாழ்த்தி சாற்றும் செபமாலை. புனிதத்தின் சிகரமாம் புனித அன்னை
மரியே, புனித வாழ்வை நோக்கி எம்மை நடத்தும் அம்மா.
உங்கள் அனைவருக்கும் புனிதமான கிறிஸ்து பிறப்பு
வாழ்த்துக்களும் ஆசீரும்!.
இயேசுவே, உமக்கு புகழ் ! ! !
-அருட்தந்தை அ. செல்வராஜ்,
க.ச
0 கருத்துகள்:
கருத்துரையிடுக