குட்டீஸ் பகுதி

நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? இறை இயேசுவின் அருளாலும் அன்னை மரியின் பரிந்துரையாலும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாவும் இருப்பீங்கனு நினைக்கிறேன்.
2015 இதோ பத்து மாதம் முடிந்து ஆண்டோட இறுதிக்கு வந்துட்டோம். கடந்த பத்து மாதங்கள்ள எத்தனையோ விஷயங்கள் நாம சந்திச்சிருப்போம். அதில பல அனுபவங்களும் கிடைச்சிருக்கும். சில விஷயங்கள்ள வெற்றி கிடைச்சிருக்கும். சில விஷயங்கள்ள தோல்வி அடைஞ்சிருப்போம். சிலர் பல முயற்சிகள் பண்ணியிருப்பீங்க ஆனா தோல்விய சந்திச்சிருப்பீங்க. என்ன குட்டீஸ் மனம் சோர்ந்திட்டீங்களா? மனம் சோர்வடையவே கூடாது.
ஆங்கிலத்தில இவ்வாறு சொல்வாங்க positive attitude is the key to success. நம்மளோட முயற்சி சரியான இலக்கை அடையனும்னா நம்மளோட அனுகுகுறையும் நேர்மறையா இருக்கனும். இந்த நேர்மறை அணுகுமுறை யால தங்களோட வாழ்க்கையின் இலக்கை எட்டிய மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம்.
இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் ஒரு வீரன் தன் தோழர்களிடமிருந்து வழி தவறி காட்டில் மாட்டிக்கொண்டான். அந்தக் காட்டை எதிரி நாட்டுப்படையினர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சிக்கிக் கொண்டால் அவனது உயிர் அவனிடம் இல்லை. இவன் தப்பிப்பதற்காக அங்குமிங்கும் பார்க்கும்பொழுது ஒரு குகை கண்ணில் பட்டது. உடனே அங்கு சென்று ஒளிந்து கொண்டான். அவன் கடவுள் கிட்ட ஆண்டவனே என்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்று. நான் உம்மை நம்புகிறேன். நீங்க ஏதாவது ஒரு அற்புதம் செஞ்சி என்னைக் காப்பாத்துங்கனு வேண்டிக் கொண்டான். செபித்து விட்டு ஆண்டவரிடமிருந்து உதவி வருமா என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் எட்டுக்கால் பூச்சி அந்த குகை வாசலிலே வலை பின்னுவதைப் பார்த்தான். அவன் சிரிச்சிக்கிட்டே நான் கடவுள் கிட்ட எதிர்பார்த்தது ஒரு வலிமையான சுவரை. ஆனால் அவர் அனுப்பியிருப்பது ஒரு சின்ன வலிமையற்ற எட்டுக்கால் பூச்சியை. கடவுளுக்கு நல்ல நகைக்சுவை உணர்வு அப்படினு மனசில சொல்லி அவன் கேலியா சிரிச்சிருக்கான்.
அப்போ அந்த எதிரி வீரர்கள் ஒவ்வொரு குகையா தேடிட்டே வர்றாங்க. ஒரு வீரன் நம்ம கதையின் நாயகன் இருந்த குகைகிட்ட வந்து தேட முயற்சிக்கும் போது தலைமை வீரன் அவனைப் பார்த்து இந்த குகையினுள் தேட வேண்டாம். எதிரி உள்ளே போயிருந்தால் இந்த எட்டுக்கால் பூச்சி கட்டிய வலை அறுந்திறுக்கும். எனவே போக வேண்டாம் என்று தடுத்து விட்டான். வீரனும் காப்பாற்றப் பட்டான். அவனுக்கு உடனே விவிலியத்தில் வாசித்த இறைவார்த்தை நினைவுக்கு வருகிறது. ‘‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல என்கிறார் ஆண்டவர்’’ (எசா 55 : 8) அவன் உடனே கடவுளிடம், ‘‘ஆண்டவனே என்னை மன்னித்துவிடு. உம்முடைய பார்வையில் இந்த எட்டுக்கால் பூச்சி ஒரு சுவரை விட வலிமையானது’’ என்று செபித்தான். ஆம் அன்பான பிள்ளைகளே சில நேரங்களில் செபம் சூழ்நிலையை மாற்றாது. ஆனால் நமது அனுகுமுறையை அந்த சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிவிடும்.
நாமும்  கூட குழந்தைகளே நமது அணுகுமுறையை சூழ்நிலைக் கேற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். எதையும் ஒரு நேர்மறை கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மால இந்த உலகத்தில எத்தனை இடர்கள், இன்னல்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். இதற்கு உதாரணமா தந்தை பியோவை சொல்லலாம்.
ஒரு கதை சரியா குட்டீஸ். ஒரு கதைன்னு சொன்ன உடனே உங்கள் முகம் சந்தோஷமாகுது, எனக்கும் கூட அப்படித்தான். கதைனா ரொம்ப பிடிக்கும். சரி அடுத்த கதைக்குப் போகலாமா குட்டீஸ். ஒரு மனிதன் காட்டு வழியே வரும்போது மிகுந்த களைப்பிற்குள்ளாகி மயங்கி ஒரு மரத்தினடியில் விழுந்து விட்டான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. அப்பொழுது அந்த வழியே ஒரு குடிகாரன் சென்றான். அவன் அவனைப் பார்த்து பாருடா! ஒரு குடிகாரன் நல்லா குடிச்சிட்டு விழுந்து கிடக்கான் அப்டின்னு சொல்லிட்டே அவனை கடந்து சென்று விட்டான். அடுத்து அந்த வழியே ஒரு விவசாயி சென்றான். அவன் அவனைப் பார்த்து நல்ல உழைப்பாளியா இருக்கனும் அதனால் தான் உழைத்து களைத்துப்போய் படுத்து இருக்கான் அப்படின்னு அவனும் சொல்லிட்டு போயிட்டான். அப்புறம் அந்த வழியே ஒருத்தர் வர்றார். அவர் யாருன்னா தன் பிள்ளைகளால கை விடப்பட்ட ஒரு தந்தை. அவர் பார்த்துட்டு ஐயோ பாவம் இவரை இவரோட பிள்ளைகள் சுமையா கருதி துரத்தி விட்டுட்டாங்க போல. அப்படினு மனசில பரிதாபப்பட்டுட்டே சென்றார். அப்போ அந்த வழியா தந்தை பியோ வருகிறார். அவர் என்ன சொல்லிருப்பாருனு உங்களாள யோசிக்க முடியுதா? ஆமா கண்டிப்பா அவர் அந்த மனிதனை ஒரு துறவியாத்தான் பார்த்திருப்பாரு. ஏன்னா தந்தை பியோ தன்னோட வாழ்விலே எல்லாத்தையும் நேர்மறை அணுகுமுறையாதான் பார்த்தார்.
தந்தை பியோவோட குருத்துவ வாழ்க்கையில எத்தனையோ முறை சாத்தானால் சோதிக்கப்பட்டடபோதும் சரி, கடுமையான நோயால் தாக்கப்பட்ட போதும் சரி அவர் எல்லாத்தையும் கடவுளை தான் அடையக்கூடிய படிக்கற்களாத்தான் நினைச்சார். அது மட்டும் இல்ல இந்த சோதனைகள் கடவுளால் அனுமதிக்கப்பட்டது. அவர் இதிலிருந்து தன்னை நிச்சயம் விடுவிப்பார் என்று பொறுமையோடும் மகிழ்ச்சியோடும் தனது துன்பங்களை ஏற்றுக்கொண்டார். ஐயோ நான் நினைத்தபடி குருத்துவ வாழ்வு இல்லையே என்ற சோர்ந்து போகவில்லை. அதனால்தான் இறைவனால் அவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.
அன்புக் குழந்தைகளே ! நாமும் வாழ்வில் வெற்றியோட சிறப்பா வாழ நேர்மறை சிந்தனை நமக்கு மிகவும் தேவை. அதோட இறைவனோட அருளும் தேவை. நம்முடைய முயற்சிகளை  விசுவாசத்தோட இயேசுவின் பாதத்தில் வச்சிட்டு தந்தை பியோவைப்போல நேர்மறையா எல்லா செயல்களையும் எதிர் கொண்டால் வெற்றி நிச்சயம். செய்வீங்களா குட்டீஸ். அதுமட்டும் இல்ல இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு இனிமையானதாகவும் புத்தாண்டு வளமாகவும் அமைய என்னோட வாழ்த்துக்கள்.
அன்புடன்
உங்கள் அங்கிள்
ஜோசப்  லியோன், தூத்துக்குடி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக