தேவ இரகசியங்களை அறிவோம்

மகிழ்ச்சி நிறை மறையுண்மை
4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போம்.
  
இயேசு பிறப்பின் நிகழ்ச்சிகள் அன்னை மரியாவின் அடிமனதில் இன்ப அலைகளாக எழுப்பிக் கொண்டேயிருந்துது. நாற்பது நாட்கள் 40 நொடிகளாக கடந்தன. தாயின் சுத்திகரச் சடங்கும், தலைச்சன் மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கவும் தயாராகிறார்கள். இச்சடங்கை எருசலேம் ஆலயத்தில் தான் செய்ய வேண்டும் என்பதல்ல.  எந்த இடத்திலும் உள்ள ஒரு யூதகுருவிடம் காணிக்கை செலுத்தி, இறைவனுக்கு உரிமையான தலைச்சன் குழந்தையை மீட்டுக்கொள்ளலாம். அன்னை மரியாவின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இறைமகனையே தன் மகனாக அளிக்க மரியா எடுத்துச் செல்கிறார். சீயோன் மகள் என்ற அடையாளத்தில் திருஅவையால் போற்றப்படும் மரியாவில் இஸ்ராயேல் இனம்  விருத்தசேதனத்தால் தன் இனத்தாராகி விட்ட இறைமகனை இறைவனுக்கு மிகவும் ஏற்ற காணிக்கையாக்க மகிழ்ச்சி பொங்க செல்கிறார்கள். இங்கு மூன்று முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன.

1. மரியாவின் தூய்மைப்படுத்தும் சடங்கு
2. தலைச்சன் குழந்தையை மீட்டல்
3. குழந்தை இயேசுவைக் காணிக்கையாகக் கொடுத்தல்.

பழைய ஏற்பாட்டில் :

லேவியர் 12 1-4, 6-8 பகுதியில் சொல்லப்பட்டுள்ளபடி ஒரு பெண். ஆண் குழந்தையை பெற்றபின் ஏழுநாட்கள் தீட்டுள்ளவளாக கருதப்பட்டாள். தொடர்ந்து 33 நாட்கள் தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது.  தூய தலத்திற்குள் வரக்கூடாது. 40 நாட்களுக்கு பின் ஓராண்டு வயதுள்ள செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றை பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் கொடுக்க அவர் அவளுக்கு கறை நீக்கம் செய்வார். ஏழையாக இருந்தால் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்களையோ கொண்டு வந்து ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம் போக்கும் பலியாகவும் படைத்து கறை நீக்கம் செய்வார்.

மரியாவின் தூய்மைபடுத்தும் சடங்கு:

உலகனைத்தையும் பாவத்தீட்டிருந்து தூய்மையாக்க வந்தவரைப் பெற்ற தூய்மையே உருவான மரியா தூய்மைப்படுத்தும் சட்டத்திற்கு உட்பட்டு, ஏழைகளின் காணிக்கையுடன் நிற்கும் மேன்மையை என்னென்பது?. இதோ! ஆண்டவர் சிறுகுழந்தையாகப் பெற்றோரால் தூக்கிக் கொண்டு வரப்படுகிறார்.
‘அழிக்கவல்ல, நிறைவேற்றவே வந்தேன்‘ என்ற வாக்குக்கு இணங்க சட்டத்தை ஏற்படுத்தியவரே, அதற்குப் பணிந்து நிறைவேற்றுகிறார். அதுபோல தூய்மைபடுத்தும் சடங்கு அன்னை மரியாவுக்குத் தேவையில்லை. அசுத்தம், குறை எதுவும் அவளிடம் இல்லை. ஆனாலும் தம் மகனைப் பின்பற்றி, அவரும் சட்டத்துக்கு பணிந்து நடக்கிறார்.

மெசியா பற்றிய இறைவாக்கு :

யூதச்சடங்குகளின் பெயர் மட்டுமல்ல, தூய ஆவியின் அருட்பொழிவையும், இறை வாக்கினர்களின்  கூட்டம் கூடிவந்து குழந்தை யையும், அதன் தாயையும் சூழ்ந்து கொண்டு  மெசியாவைப் பற்றிய இறைவாக்கு நிறைவுக்கு வந்து விட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதையும் மையப்படுத்துகின்றது. இவர்கள் மூலம் இஸ்ராயேல் மக்களின் வாழ்வின் மையமான எருசலேம் ஆலயத்தில் இறைவன் தன் மெசியாவை அறிமுகப்படுத்துகிறார். சடங்குகளை நிறைவேற்றிய குருக்கள் மெசியாவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆவியால் அருட்பொழிவு பெற்ற சிமியோன்  புளகாங்கிதம் அடைகிறார். தன் காலமும் நிறைவடைந்து விட்டதாக கூறி, கடவுளைப் போற்றுகிறார். (லூக் 2 : 28-32) சிமியோனும், அன்னாவும் கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லோரிடமும் குழந்தையைப் பற்றி எடுத்துரைக்கின்றனர்.

இயேசு எதிர்க்கப்படும் அறிகுறி :

இயேசு இஸ்ராயேலின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாகவும், எதிர்க்கப்படும் குறியாகவும், புறவினத்தாருக்கு உண்மையென ஒளிர்விக்கும் ஒளியாகவும் இருப்பார் என விவரிக்கப்படுகிறார். (லூக் 2 : 34) ‘‘ புற இனத்தாரை ஒளிர்விக்கும் ஒளி’’ என்பது எசாயா புத்தகத்தில் ‘‘ஆண்டவரின் ஊழியன்‘‘ பற்றி சொல்லப்பட்ட அருள்வாக்கு. உலகம் முழுவதற்குமே மீட்பராக உள்ளார் என அறிவிக்கப்படுகிறார். (எசா 42 : 6, 49 : 6, 52 : 10)
இயேசு எதிர்க்கப்படும் அறிகுறியாக ஏன் இருக்க வேண்டும்? இறைவன் அன்பே உருவானவர் என அனைவரும் நம்பும் போது அவரை ஏன் எதிர்க்க வேண்டும்? சென்றவிடமெல்லாம் நன்மை செய்த இயேசு ஏன் விரோதிக்கப்பட வேண்டும்? இங்குதான் உண்மை அன்பையும் மனித இனத்தின் முரண்பாடுகiயும் பார்க்கிறோம். குடிப்பழக்கம் உள்ளவனுக்கு மதுபானம் வாங்கி கொடுப்பவன் உயர்ந்த நண்பனாகத் தெரிகிறான். உண்மையான அன்போடும், அக்கறையோடும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட ஆலோசனைக் கூறுபவனை பகைக்கிறான்.
இறைவன் நமது வாழ்வில் நேரடியாகவோ பிறர் வழியாகவோ உண்மை அன்பைக் காட்டும் போது அதனைக் காணப் பழக வேண்டும். இல்லையெனில் அவ்வப்போது மகிழ்ச்சியளிக்கும் காரியங்களையும் நபர்களையும் உண்மை அன்பையும் வெறுத்து வாழ்வு தடம் புரளும் நிலையடைவோம்.

மரியாளின் இறை நம்பிக்கை :

மரியாவுக்கு ‘‘உமது உள்ளத்தையும் ஒருவாள் ஊடுருவிப்பாயும்‘‘ (லூக் 2 : 35) என்ற இறைவாக்கு அருளப்படுகிறது. இவ்வாக்கால் ஊடுருவப்பட்டு, ‘‘ஆண்டவர் சொன்னவை யாவும் நிறைவேறும்‘‘ என்று நம்பி, பேறுபெற்றவளாய் (லூக் 1 : 45) உயர்ந்து நிற்கிறார். குழந்தை இயேசுவைக் காணிக்கையாக்கும் நிகழ்ச்சியானது மரியா இறை நம்பிக்கையில் உயர்ந்து நிற்பவராக தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. சிமியோனும், அன்னாவும்  குருவர்க்கத்தை சேர்ந்தவர்கள்  அல்லர். இக்காலத்தில் வயதானவர்கள் கோயிலில் கதியாய் கிடந்து செபமாலைச் சொல்லிக் கொண்டிருப்பது போல சிமியோனும், அன்னாவும் தேவாலயத்திலே இருந்து  இறைவனைப் புகழ்ந்தனர். அவர்களது பிரமாணிக்கமுள்ள , உண்மையான, வைரம் பாய்ந்த பக்திக்கு கடவுள் சன்மானம் அளிக்க சித்தமானார். உலக இரட்சகரைக் கண்டு களித்தனர்.
செபம் :
நித்திய பிதாவே ! இயேசு, மரி, சூசையின் தாழ்ச்சி நிமித்தம் எங்களுக்கு தாழ்ச்சியைக் கற்றுத்தாரும். அன்பின் நிர்மலத்தாய் ஏழைகளின் காணிக்கையான இரு வெண்புறாக்களை அளித்ததை நினைத்து எங்களிடத்தில் ஏழ்மை மனநிலையை ஊட்டியருளும். மகா பரிசுத்த கன்னிகையே நாங்கள் வாழ்வின் சட்ட திட்டங்களுக்கும், ஒழுங்கு கிரமத்திற்கும், எங்கள் பணிகளில், வாழ்வு நிலையில் கீழ்படியும் மனப்பான்மையைக் கொண்டு வாழ கிருபை செய்யும் ஆமென்.


சகோ. சிறியபுஷ்பம்,  FIHM
கூத்தப்பாக்கம், 
கடலூர்.
.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக