இறை இயேசுவில் அன்பான பியோவின் குழந்தைகளே !
உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் அன்பான வாழ்த்துக்கள்.
நவம்பர் மாதம் முதல் தேதி புனிதர்கள் அனைவரின் பெருவிழா. அன்பு உறவே மனிதம், புனிதம், தெய்வீகம். நம் திருத்தந்தை பிரான்சிஸ் புனிதர்கள் அனைவரையும் நமது மூத்த சகோதர, சகோதரிகள் என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல், இவர்களை நமது முன்மாதிரியாகக் கொண்டு நெருக்கமாகக் கிறிஸ்துவுக்குச் சேவை செய்ய அழைக்கிறார்.
நவம்பர் 2ம் தேதி இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவுநாள். அன்புறவை கல்லறை அடக்க முடியாது. (தி.பா. 27 : 1) ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு. வாங்கு... பயன்படுத்து....தூக்கியெறி என்று பிறரை ஒரு பொருட்டாகக் கருதாத இயந்திர உலகிலே, இறந்த முதாதையர்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காகச் செபித்து நம்முடைய மனிதாபிமானத்தை, அன்பை, நம் இதயக்கல்லறையில் உயிர்ப்பிக்கின்ற உயிர்ப்பு பெருவிழாவாக எண்ணி மகிழ்வோம். உயிரோடு இருக்கின்ற முதியவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு இக்கல்லறைத் திருவிழாவின் போது நம்மால் இயன்றவற்றை செய்து மகிழ்வோம்
நமது பிறப்பு பிறருக்கு வாழ்வு கொடுக்கட்டும். கடவுள் சமயங்களை உருவாக்கவில்லை. மாறாக அவரது சாயலில் மனிதர்களை உருவாக்கினார். இயேசுவின் பிறப்பு இறைவனையும் மனிதரையும் இணைக்கின்ற உறவு. உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் நேரம் மிகக் கொடுமையானது. இறைவன் இயேசு உறவின் பாலமாக வரலாற்றில் பிறந்துவிட்டார். ஆனால் நம் இதயத்தில் பிறந்துவிட்டாரா? ஆம் சுயநலமற்ற அன்பு, கைம்மாறு கருதாத உதவி, எதிர்பார்ப்பு இல்லாத தியாகம், மன்னிக்கும் மனப்பாங்கு இவையாவும் நம் இதயத்தில் பிறந்துவிட்டால் அதுவே இயேசுவின் பிறப்பு.
இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் ஒருங்கிணைந்து செயல்படட்டும். ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் கடந்த நாட்களைப் பின்னோக்கிப் பார்த்து தொலைநோக்குப் பார்வையோடு நிகழ்காலத்தில் பயணிக்க நம்மை தயாரிப்போம். இந்நாளில் நம் ஆண்டவர் நம்மை முகமுகமாகப் பார்த்து, கரிசனையோடு தனது ஆசியை வழங்கி, நம்மோடு தனது உடன் பயணிப்பை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே பிறக்க இருக்கும் புத்தாண்டில் பிஞ்சுக் குழந்தை இயேசுவின் நிறைவான ஆசிகளுடன் புதிய ஆண்டினைத் தொடர்வோம். தந்தை பியோவின் உடனிருப்பு என்றும் நம்மோடு.
கிறிஸ்துவில் பிரிய,
சகோ.ஆலிஸ் (ரெஜி)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக